படம் பார்ப்பதற்கு முன்:
எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மிக சாதாரணமாக ரிலீஸ் ஆகி இருந்தால், கமல் ரசிகர்கள் மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய ஒரு வாமனப் படத்தை,இஸ்லாமிய சகோதரர்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கி விஸ்வரூபமெடுக்க வைத்து விட்டார்கள். இனி அலாவுதீனின் பூதம் சீஸாவுக்குள் அடங்காது.
படம் பார்த்த பின்:
எத்தனை வருடங்கள் ஆகி விட்டன, இந்த மாதிரி ஒரு தமிழ் சினிமாவைப் பார்த்து…
ஒரு படைப்பை மனதில் வடித்து, அதை ரத்தமும் சதையுமாக உயிர் கொடுத்து உலவ விடப் பெரும் முயற்சியெடுத்து அதை திருப்திகரமாக வெற்றியாக்கியதில் கமல்ஹாசன் விஸ்வரூபமெடுத்திருக்கிறார். (ஒரு சில குறைகள் நீங்கலாக)
தாண்டவங்களும்,அலெக்ஸ்பாண்டியன்களும் புற்றீசல்களாய்க் கிளம்பும் இந்த மண்ணில் சாம்பலில் இருந்து வரும் ஃபீனிக்ஸாய், ஒரு வாமனத் தமிழன் எடுத்த நிஜமான விஸ்வரூபம்தான் இது.
படத்தின் முதல் பாதியில் அடிக்கடி வரும் உள்ளார்ந்த நகைச்சுவை அருமை.
விஸ்,(கமல்) தான் ஒரு இந்து அல்ல, முஸ்லீம் என்பதைச் சொல்லும் இடமும், தீவிரவாதிகளிடம் அடி வாங்கி வலி தாங்காமல் “கிருஷ்ணா..” என்று அலறுகையில் “கலையில மனச ரொம்ப லயிச்சுட்டேன்” என்று விளக்கம் சொல்லும் இடமும் சூப்பர்.
இந்தப் படத்திற்காக கதக் கற்றுக் கொண்டு, பெண்மைத் தனத்துடன் நளினமாய் முகபாவனை, உடல் மொழி, குரல் இவைகளை அட்டகாசமாய் செய்திருக்கும் கமல், திடீரென்று ஒரு பயிற்சி பெற்ற போர்வீரனாய், தீவிரவாதிகளைப் பந்தாடுவதும், ஆஃப்கானிஸ்தானில் தீவிரவாதிகளோடு தீவிரவாதியாய் சேர்ந்திருக்கும் போதும், அந்தந்தப் பாத்திரத்தின் பாங்கை முழு முயற்சியோடு வெளிப்படுத்துவதும் சூப்பராய் செய்திருக்கிறார்.
நிறைய இடங்களில் மெலிதான, உள்ளார்ந்த நகைச்சுவை வசனங்கள்
”எங்க கடவுளுக்கு நாலு கைகள்”
”அப்படீன்னா, அவர எப்பிடி சிலுவையில அறைவீங்க?”
”நாங்க கடல்ல மூழ்கடிச்சுருவோம்”
ஷானு வர்கீஸின் ஒளிப்பதிவு பிரமாதம். போர்க் காட்சிகளில் ஒலிப்பதிவும் அருமை.
பிண்ணனி இசை படம் முழுக்க சோபிக்கவில்லை. அவ்வப்போது நன்று.
உன்னைக் காணாமல் பாடல் படமெடுக்கப் பட்டிருக்கும் விதமும், அந்த கதக் நடனமும் அருமை.
உமராக நடித்திருக்கும் ராகுல் போஸ், மனிதர் தீவிரவாதியாகவே வாழ்ந்திருக்கிறார். முக ஒப்பனைகளும், உடல் மொழியும், நடிப்பும் அட்டகாசம்.
படத்தில் பின்லேடனைப் பற்றி ஒரு காட்சி வரும். அவர் வருகை தரப் போவதாக, அதற்காகப் பார்வையாளர்களை தயார் படுத்துவதாக இருக்கும் ஒரு சீனில், பக்கத்தில் அமர்ந்திருந்த என் மனைவி, “ஒபாமாவா?” என்று வாய் தவறிக் கேட்டதற்கு ஒரு இரண்டு நிமிடம் விடாது சிரித்துக் கொண்டே இருந்தேன்.ஒசாமா பின் லேடனைப் பற்றி ஒரு இரண்டு நிமிடங்கள் கூட இருக்காது … சில வசனங்கள் தான்.- அதுவும் பெயரைச் சொல்லாமலேயே.
படத்தில் நிறைய இடங்கள் நான் ரசித்துப் பார்த்தேன்.
நான் warrior ஆக விரும்பவில்லை, ஒரு டாக்டராக விரும்புகிறேன் என்று உமரின் மகன் சொல்வது
விரலைத் துப்பாக்கியாய் வைத்து விளையாட்டுக்கு சுட்டுக் கொண்டே ஓடுவது,
மனித வெடிகுண்டாக மாறி, உயிர் துறப்பதற்கு முன் ஒரு இளைஞன், குழந்தையைப் போல மிகவும் ஆசைப்பட்டு, ஊஞ்சலில் கண்களை மூடி ஆடி மகிழ்வது என்று கவிதையாய் நிறையக் காட்சிகள்
ஆஃப்கானிஸ்தானில் வரும் சம்பவங்கள் அங்கு நிஜமாகவே நிகழும் தினசரி வாழ்க்கையை அசலாகப் படமெடுத்துக் காட்டுகின்றன.எப்படி, தீவிரவாதம் அவர்களது வாழ்வில் ஒரு அங்கமாக மாறி விட்டதென்று…
இறுதிக் காட்சியில் வில்லனின் ஆள் நியூக்ளியர் வெடிகுண்டு மூலம் நகரத்தையே நிர்மூலம் செய்வதற்கு முன் தொழுகை செய்கையில், அவரைப் பிடிப்பதற்காக அவரை நெருங்கி விட்ட போலீசுடன் செல்லும் கமலும் அப்போது தொழுகை செய்வார்-அல்லாவிடம் எல்லோரையும் காப்பாற்றுங்கள் என்று. சரியான முரண் தொடையான ஆனால் படத்தில் முக்கியமான விஷயத்தைச் சொல்லும் சீன் இது.
காஸ்ட்யூம் கெளதமி. பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்.
ஒரு சராசரித் தமிழனுக்கு சற்றே அலுப்புத் தட்ட வைக்கும் திரைக் கதை. அவனது பொறுமையைச் சோதிக்கும் சற்றே நீளமான படம். இறுக்கிப் பிடித்திருந்தால் நான் கடைசிப் பாப்கார்னைத் தேடிக் கொண்டிருந்திருக்க மாட்டேன்.
படத்தின் முடிவில் அடுத்து எடுக்கிறோம் “விஸ்வரூபம் இந்தியாவில்” என்று பார்ட் இரண்டைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் நடந்ததாகக் குறிப்பிடப் படாத, முழுக்க முழுக்க ஆஃப்கானிஸ்தானில், அமெரிக்காவில் நிகழ்ந்ததாக வரும் விஸ்வரூபம் பார்ட் 1க் கே இவ்வளவு எதிர்ப்புகள், போர்க்குரல்கள்.
இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்பே, இது இஸ்லாமியர்களைப் பற்றி தவறாகச் சொல்கிறது, இதைத் தடை செய்ய வேண்டும் என்று கதறிய இஸ்லாமியர்களை, படம் பார்த்த அனைவரும் இந்தப் படத்தில் வரும் ஒரு கிழவி சொல்லும் வசைச் சொல்லை வைத்துப் பழிப்பர் என்பது உறுதி.(முன்னால வால் முளைச்ச குரங்குங்க)
அப்ஸல் குருக்களும், மதானிக்களும்,கசாப்களும்,ஒவைசிக்களும் நூற்றுக் கணக்கில் நம்மைச் சுற்றி நீக்கமற இருந்து கொண்டு, இந்த தேசத்தையும், அதன் பண்பாட்டையும் மண்ணோடு மண்ணாக்க அல்லும் பகலும் அயராது உழைக்கும் அவர்கள் இருக்கும் இந்தியாவில்-தமிழ்நாட்டில்- விஸ்வரூபத்தின் பார்ட் -2 உடனடியாக வந்தே ஆக வேண்டும். அதற்குத் தேவை சாம்பலில் இருந்து முளைத்தெழும், வாமனனாக இருந்து விஸ்வரூபம் எடுக்கும் ஆயிரம் கமல்ஹாசன்கள்.