லிபாக்‌ஷி-உயிர்த்தெழும் கற்சிலைகள்

நாளை காலை லிபாக்‌ஷி போறேன் என்றார் ராகா என்கிற ராகவேந்திரன். நானும் வருகிறேன் என்றேன்.ராகா என் மச்சினர்.அழகான இயற்கைப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்வது,அற்புதமாகப் புகைப்படங்கள் எடுப்பது போக, மீதி இருக்கும் நேரங்களில் ஐ.பி.எம்.மில் பணிபுரிபவர்Jவீரபத்ரர் கோவில் நுழைவு வாயில்

 சென்ற ஞாயிற்றுக் கிழமை காலை நான்கு மணிக்கு எழுந்து,குளித்துத் தயாராகி, காஃபி குடித்து விட்டு,பல்சரை ஸ்டார்ட் செய்தோம். லிபாக்‌ஷி இருப்பது ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில்.நாங்கள் வசிக்கும் ஒயிட்ஃபீல்டிலிருந்து தேவனஹள்ளி, சிக்பல்லாப்பூர் வழியாக ஹைதராபாத் நெடுஞ்சாலையில்,கர்நாடகா-ஆந்திரா செக்போஸ்டைக் கடந்தவுடன் இடதுபக்கம் திரும்பி, பதினைந்து  கிலோ மீட்டர் பயணித்தால் வருவது லிபாக்ஸி

மலையுடன் இணைந்திருக்கும் கற்கோவில்

தேவனஹள்ளி வரை,இருட்டில் எதிர் வரும் லாரிகளின் ராட்சச விளக்கொளியில் ப்ரூஸ்லீ கண்களுடன் வண்டியை மெதுவாகத்தான் ஓட்ட முடிந்தது.. தேவனஹள்ளி தாண்டி, அகலச்சாலை வந்தவுடன், புலர்ந்து கொண்டிருக்கும் பொழுதில் வாகனங்கள் ஒன்றிரண்டே  இருந்த அரவமற்ற சாலையில், பயணிப்பது அருமையாக இருந்தது,. விடியலுடன் வண்டியின் வேகமும் போட்டி போட்டுக் கொண்டு சென்றது.இருபுறமும் இருந்த வயல்வெளிகளும்,கூட்டை விட்டுக் கிளம்பும் பறவைகளும்,அவைகளின் காலைக் கூவலும், சிவப்புப் பழமாய் உயர்ந்தெழும் சூரியனும் அதிகாலை  ஐந்தேகால் மணிக்குக் கிளம்பியதைப் பெரிதும் நியாயப்படுத்தின. எங்கும் நிற்காமல்  வெண்ணையாய் வழுக்கிச் சென்ற சாலையில் வேகமாய் சென்று லிபாக்‌ஷி சேரும்போது 130 கி.மீ. கடந்திருந்தோம். மணி ஏழு ஐம்பது.

லிபாக்‌ஷி கிராமத்தில் வீரபத்ரரரின் அந்தக் கோவிலே பிரதானம். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் விஜயநகர கட்டடக் கலையின் பாணியில் அமைந்துள்ளது.மிகவும் குறைவான மக்கள் தொகையுடன், ஒரு நிமிட பைக் பயணத்தில் ஊர் சட்டென்று முடிந்து விடுகிறது.

சிவா,விஷ்ணு மற்றும் சிவனின் உக்கிர அவதாரமாகிய வீரபத்ரசுவாமி துர்காதேவி ஆகியோர் பிரதானமாக இருக்கும் கோவில் இது.

வீரபத்ர கோவிலை அகஸ்தியரே கட்டியதாக புராணத் தகவல். எனினும்,தற்போது இருக்கும் கோவில் 1558 ஆம் ஆண்டு விஜயநகர அரசர் அச்சுதராயர் காலத்தில் கட்டப்பட்ட்து.அச்சுதேவராயரின் கருவூல அதிகாரியான விருபன்னா, தமது குலதெய்வமான வீரபத்ரருக்கு ஒரு பிரம்மாண்ட கோவில் கட்ட எண்ணினார்.அரசர் அச்சுதேவராயர் ஊரில் இல்லாத நேரத்தில் கோவிலின் பெரும்பாலான பகுதிகள் கட்டிமுடிக்கப் பட்டு விட்டன.வெளியூர் சென்று திரும்பி வந்த அரசன், தான் வருவதற்குள் கோவிலைக் கட்டுவதற்காக கஜானாவைக் காலி செய்த விருபன்னாவின் மேல் அளவில்லாத கோபம் கொண்டான். ஆத்திரத்தில்,விருபன்னாவின் கண்களைப் பிடுங்கி எறியுமாறு தண்டனை வழங்கினான். (அந்தக் காலத்தில் அரச கருவூலத்தில் பணம் எடுப்பவர்களுக்கு அதுதான் தண்டனையாம்) இதைக் கேள்விப்பட்ட விருபன்னா, தானாகவே ஓடிச் சென்று, கோவில் மண்டபத்தின் பாறையில் கண்களை மோதிக் குருடாக்கிக் கொண்டாராம்.இப்போதும், அந்த மண்டபச் சுவற்றில் கண்களின் ரத்தக் கறை போன்ற இரு கறைகள் தெரிவதை எல்லா கைடுகளும் கிளிப் பிள்ளையாய் ஒப்பிக்கின்றனர்.எனவே அந்த கிராமத்திற்கு லிபாக்‌க்ஷி என்று பெயர் வந்த்து. லிபாக்க்ஷி என்றால் குருடரின் கிராமம் என்று பொருள்.

லிபாக்‌ஷி (லி-பக்‌ஷி? பக்‌ஷி என்றால் பறவை என்று படித்திருக்கிறேன்) என்றால் எழு பறவையேஎன்கிற அர்த்தத்தில் இன்னொரு பெயர்க்காரணமும் சொல்லப்படுகிறது.இந்த இடத்தில்தான் ராவணன் சீதையைத் தூக்கிச் செல்கையில் ஜடாயு பறவை அவனை எதிர்த்துச் சண்டையிட்டு, ராவணனால், தன் சிறகுகள் வெட்டப்பட்டுக் கீழே விழுந்து கிடந்ததாம்.ராம லட்சுமணர்கள் சீதையைத் தேடி வரும் வேளையில், அவர்களுக்கு ராவணன் சீதையைக் கட்த்திக் கொண்டு தென்திசை நோக்கிச் சென்ற செய்தியை சொல்லி உயிர் விட்டது. வருத்தமுற்ற ராமர்  ”எழு பறவையே” என்று சொன்னதால் லிபாக்‌ஷி என்கிற பெயர் வந்ததாகவும் ஒரு நம்பிக்கை.

முக்த மண்டபம்,அர்த்த மண்டபம், கர்ப்பக்ருஹம் என்று மூன்று மண்டபங்கள் உள்ளன. கோவிலின் நாட்டிய மண்டபத்தின் தூண்களில் வாத்தியம் இசைக்கும் பிரம்மா, ஆனந்த தாண்டவமாடும் சிவன், தும்புரு,நாரதர்,நடனமாடும் ரம்பை,நர்த்தன கணபதி,நந்தி ஆகியோரது சிலைகள் உள்ளன.பிரகாரக் கூரையில் வரையப் பட்டுள்ள ஓவியங்கள் தங்களின் அந்திமக் காலத்தில் இருந்தன.

மலையுடன் சேர்த்துக் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவிலில்,ஒரே கல்லிலான ஏழுதலைகள் கொண்ட நாகலிங்கமும்,பெரிய விநாயகர் சிலையும் கண்களையும், மனதையும் கொள்ளை கொள்கின்றன. இந்தியாவிலேயே ஒற்றைப் பாறையில் அமைந்த இவ்வளவு பெரிய நாகலிங்கம் இருப்பது இங்கு மட்டுமே.மலைப்பாறையில் காளஹஸ்தி ஸ்தலப் புராணம்,மற்றும் பல தெய்வீக நிகழ்வுகள் சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளன.

வீரபத்ரர்

.வெளிப்புறம் உள்ள முக்கால்வாசி முடிக்கப்பட்டு,கூரை ஏதும் இல்லாத கல்யாண மண்டபத்தின் (சிவனுக்கும் பார்வதிக்கும்  இந்த இடத்தில் தான் திருமணம் நடக்க இருந்ததாம்) இதன் ஒவ்வொரு தூணிலும்,அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய டிசைன்கள் அற்புதமாக வரையப் பட்டுள்ளன.இந்த டிசைன்கள் இலைகள்,பூக்கள், பறவைகளின் உருவங்களுடன் நேர்த்தியாகவும், ஒன்றுக்கொன்று வித்தியாசமாகவும் உள்ளன.இன்றைக்கும் இந்தியாவெங்கும் லிபாக்க்ஷி சேலை டிசைன்கள்,எம்பிராய்டரி வேலைப்பாடுகள் பிரபலம். இவை தவிர பெண்கள் நெற்றிப் பொட்டை எப்படி சரியாக இட்டுக் கொள்வது என்பதை விளக்கும் சிற்பமும், ஒரே உடலில் மூன்று தலைகள் கொண்ட காளை,எளிமையான நட்சத்திரக் கோலம் போட்ட சிற்பம்,புதிர்க் கோடுகள் போட்ட சிற்பம்,தரையில் பிடிமானம் இல்லாது அந்தரத்தில் தொங்கும் தூண் (ஒரு பேப்பர் செல்லுமளவு தரைக்கும்,தூணின் அடிப்பாகத்திற்கும் இடம் உண்டு) என்று நம்மை வியப்பில் ஆழ்த்த ஏராளமாக இருக்கின்றன.

ஊருக்குள் நுழையும் முன்பே,கோவிலுக்கு சற்று முன்பாகவே, கோவில் இருக்கும் திசையை நோக்கி அமர்ந்த வண்ணம் இருக்கும் நநதியை நீங்கள் பார்க்கலாம். ஒரே கல்லிலான பிரம்மாண்டமான இந்த நந்தியே இந்தியாவின் (உலகின்??) மிகப்பெரிய நந்தி.அதன் கழுத்தின் மணிகள், ரத்த நாளங்கள் தெரிய செதுக்கப் பட்டிருக்கும் பெரிய காது மடல்கள் எல்லாமே தத்ரூபம்.

பிரம்மாண்ட நந்தி
நாகலிங்கம்
சீதாம்மா பாதம்
ராகா

இவ்வளவு சிறப்புகள் அமைந்திருந்தாலும், ஞாயிறு அன்று கூட மக்கள் கூட்டம் அதிகம் இல்லை. சுற்றுலாவாக வந்திருந்த நான்கைந்து குழுக்கள், ஏழெட்டுக் குடும்பங்கள் ஒன்றிரண்டு கைடுகள், ஏழெட்டுப் பிச்சைக்காரர்கள் என்று மொத்தமே ஐம்பது அறுபது பேருக்கு மேல் இல்லை.

மூன்று மணி நேரம் கடந்ததே தெரியவில்லை. ஒரு வித ஆச்சரியம் கலந்த அசதியுடன் மெதுவாகக் கோவிலை விட்டு வெளியே வந்தோம். புல்வெளியில் குரங்குகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டும், துரத்திக் கொண்டும் இருந்த்தை ஒரு ஐந்து நிமிடங்கள் புகைப்படங்கள் எடுத்தோம்.

ஊருக்குள் சென்று ஹோட்டல் ஏதாவது இருக்கிறதா என்று தேடினோம்.உடுப்பி ஹோட்டல் என்கிற போர்டுடன் சிறியதாக ஒரு மெஸ் போல ஒன்று இருந்த்து.முன்புறம் பெட்டிக் கடை, உள்ளே மெஸ் என்று இருந்த அந்த கிராமத்து பொட்டிக் ஹோட்டலில் இரண்டையும் ஒருவரே கவனித்துக் கொண்டு ஆல்-இன் ஆல் அழகுராஜாவாக்க் கலக்கிக் கொண்டிருந்தார்.மணி பதினோன்றுக்கு மேல் ஆகியிருந்தது.என்ன இருக்கிறது என்று கேட்டு,இட்லி, உப்புமா, சாப்பிட்டோம்.

ஒவ்வொரு பதார்த்தம் பரிமாறும் போதும் ஓம் சாய்ராம் என்று சொல்லியபடியே பரிமாறினார்.நாங்கள் உப்புமாவை முடித்துக் கொண்டிருக்கையில்,இரண்டு குடும்பங்கள் அங்கு வந்து அமர்ந்தன. அதில் ஒருவர்,ஆல் இன் ஆலைப் பார்த்து, உங்களுக்கு எந்த ஊர்? என்று கேட்டார். அதற்கு அவர், பரமபதலோகம்- நான் மட்டுமல்ல- நாம் எல்லோருமே அங்கிருந்து தான் வந்திருக்கிறோம்-அங்கே தான் திரும்பவும் போகப் போகிறோம்-இப்போதைக்கு இங்கு இருக்கிறோம் என்று தத்துவமாய் தெய்வீகச் சிரிப்புடன் பதில் சொன்னார். கேள்வி கேட்டவருக்கு அதற்கு எப்படி ரீயாக்ட் செய்வது என்று தெரியவில்லை. அவரது மனைவி, அசதியாய் அவரை ஒரு பார்வை பார்த்தார். அதில் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது அர்த்தங்கள்.(ஆயிரம் அர்த்தங்கள்னு தான் சொல்லணுமா என்ன?) 🙂

லிபாக்‌ஷிக்கு வருபவர்கள் சிக்பல்லாபூரிலேயே நல்ல ஹோட்டலாகப் பார்த்து உணவருந்தி வரலாம்.வரும் வழியில் காமத் ஹோட்டல் ஒன்று இருக்கிறது என்று சொன்னார்கள்.இல்லையென்றால் உடுப்பி மெஸ்ஸிற்கே செல்லலாம்- வயிற்றுக்கும், செவிக்கும் சுவையான உணவு கியாரண்டி. 🙂

டிஃபன் முடித்து, வரும் வழியில்,நந்தியையும்,சூரியகாந்தி மலர்களையும் புகைப்படம் எடுத்து விட்டு எங்கும் நிற்காமல், வீடு வந்து சேர்ந்த போது மணி மதியம் 2.15.

வெயில் குறைந்த ஒரு விடுமுறை நாளில் லிபாக்‌ஷிக்கு சென்று வாருங்கள்.காலம் கடந்து இன்னும்,உயிர்ப்புடன் நிற்கும் கற்சிலைகளை கண்டு ரசியுங்கள்.

புகைப்படங்கள்:  ராகா

Did you like this? Share it:

8 comments

 1. குடுத்து வச்ச ஆளுகய்யா நீங்க..

  மச்சினன் தயவு இருந்தா மலையக் கூட பெயர்க்கலாம் என எனது ஒண்றோ அல்லது இரண்டோ விட்ட பாட்டி சொன்ன ஞாபகம். கிடைக்கு சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் இப்படி பார்த்தால்தான் உண்டு. வீட்டுக்காரம்மாவ கூப்டுட்டுத்தான் போவேன்னு அடம் புடிச்சா அயுசுக்கும் இந்த இடங்களைப் பாக்க முடியாது..

  🙂

 2. ரொம்போ சரியா சொன்னிங்க, மலைய மட்டும் தான் ஏற / பெயர்க்க முடியும்!

 3. இம்புட்டு போட்டோ எடுத்தீங்க… அந்த ஆல் இன் ஆல் தத்துவவாதிய ஒரு போட்டோ புடிச்சிருக்கலாம்…அட்லீஸ்ட் அந்தாளோட பொண்டாட்டி போட்டோ இருந்தாலாவது இப்பிடி ஒரு ஆளோட எப்பிடிதான் குடும்பம் நடத்தராளோ புண்ணியவதின்னு பிரேம் போட்டு கும்பிட்டு இருக்கலாம்….
  இந்த பதிலுக்கு நீங்க எந்த ஊருன்னு கேள்வி கேட்ட அந்த ஆளோட முகம் போன போக்கை நினைச்சு பாத்தா சிரிப்பு பொத்துகிட்டு வருது…. நீண்ட பயணங்களில் இது போன்ற ஒன்றிரண்டு காமெடிகள் நம்மை ஆற்றுப்படுத்தும்…

 4. வெயிலுக்கு இதமாக நந்தியின் நிழலில் நாய்கள் உறங்குவதை வைத்து தோராயமாக அதன் உயரத்தை கணக்கிடலாம்… ஆனால் கிட்டத்தட்ட இதே உயரம் கொண்ட நந்தியை நானும் ராகாவும் மைசூருக்கு அருகே ஒரு சிவன் கோவிலில் பார்த்ததாக ஞாபகம்.

 5. ராகா, புகைப்படங்கள் வெகு அருமை. நீங்கள் எடுத்த அனைத்துப் புகைப்படங்களையும் ப்ளிக்கரிலோ வேறு எங்கேயோ ஏற்றியிருந்தால் அதன் லிங்க்கைத் தரவும். நன்றி.

 6. aei, ithu ellam eppo poneenga. enkitta sollavee illla. ok photos ellam romba super. nalla enjoy pani irukeenga.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *