காலையில் ஒரு பிரபல நடிகர் மறைந்ததும், பதினோரு மணியளவில், செய்தி பரவி,அன்று விடுமுறை அறிவிக்கப் படுகிறது. பள்ளிகள் உடனே மூடப்பட்டு, குழந்தைகள் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் சாலையில் அடிதடிக் கலவரம். எங்கள் தெருவில் இருக்கும் பெண்மணி, என்ன நடக்குமோ என்று பதை பதைத்து, தன் ஏழு வயதுக் குழந்தை பத்திரமாக வீடு திரும்பும் வரை அழுது கொண்டே இருந்தார்.
விலைவாசி உயர்வோ, கவர்ச்சி நடிகையின் “புரச்சிப்” பேச்சோ, நடிகரின் மரணமோ, ரசிகர்களின் மோதலோ, இந்தியாவில் எதற்குத்தான் பந்த் வரும், எவ்வெப்போதெல்லாம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று எந்தக் கொம்பனாலும் முன்னறிய முடியாது.இந்த நாட்டில்,தங்களுக்கு இஷ்டமான நடிகைக்கு மலச்சிக்கல் வந்தால் கூட பந்த் நடத்தும் விசிலடிச்சான் குஞ்சுகள் வரும் நாள் மிகத் தொலைவில் இல்லை.
“பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் எந்த ஒரு போராட்டமும், மூன்று மாதக் குழந்தையை பூட்ஸ் காலால் நசுக்குவது போலத்தான்” என்பேன்.
அப்படியென்றால் இந்த ஜனநாயக நாட்டில்,குழுவாகக் கூடுவதற்கும், ஊர்வலம் போவதற்கும், தங்களது கருத்துக்களை கோஷமிடவும் கருத்து சுதந்திரம் கிடையாதா? என்று கேட்பவர்களுக்கு…
இல்லை;இவை எல்லாவற்றிற்குமே உரிமை இருக்கிறது. ஆனால் நம் அரசியல் அமைப்புச் சட்டம் இவைகளை அமைதியாகவும், அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமலும்செய்யலாம் என்கிறது. ஆனால், பந்த், ஹர்த்தாலின் போது, இந்தியர்கள் சுதந்திரமாக உலவவும்,/ பிரயாணம் செய்யவும் இயலாதபடியால், அது இந்திய அரசியலமைப்பு, தனிமனிதனுக்குக் கொடுத்திருக்கும் சுதந்திரத்தைத் தட்டிப் பறிப்பதாகும். மேலும், கல்வி கற்பது என்பது இந்தியர் அனைவரின் அடிப்படை உரிமை. பந்த்களின் போது கல்விக்கூடங்களை மூடி, மாணவர்களின் படிப்பை பாதிப்பதும் ஜனநாயக உரிமைப்படி தவறே.
பொதுக்கூட்டமோ, மாநாடோ, பேரணியோ, மனித சங்கிலிப் போராட்டமோ, கடையடைப்போ, கொடும்பாவி எரிப்போ, என்ன செய்தாலும், சம்பந்தப்பட்டவர் எவரோ, அவரை மட்டுமே பாதிக்கும் வண்ணம், அவர் வீட்டின் முன் போய் செய்யுங்கள்.மாறாக, பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் குழுமி, கோஷமிட்டு, அச்சுறுத்தி, இயல்பு வாழ்க்கையை நாசமாக்கி, இப்படி இதுவரை நடந்த எந்த பந்த்தும் வெற்றிகரமாக நடந்ததாக சரித்திரமே இல்லை.
அப்படி ஏதாவது ஒரு பந்த் வெற்றி அடைந்திருந்தால், நாடும் நாட்டு மக்களும் தோற்றுப் போயிருப்பர். ஆபரேஷன் சக்ஸஸ்;பேஷண்ட் டைய்டு என்பது போலத்தான் அது.
இத்தனை மணிநேரம் ரயில்களை நிறுத்தினோம், இத்தனை ஆயிரம் மக்களை பயணம் செய்ய விடாது முடக்கினோம் என்பதை கட்சியின் வளர்ச்சியாக, விளம்பரமாகக் கொள்ளும் கேவலமான அளவுமுறை நம் நாட்டில் மட்டுமே உண்டு.. “பத்து மணிநேரம் ரயில்சேவைகள் முடங்கின”, “அண்ணா சாலை ஸ்தம்பித்தது” என்கிற ஸ்டேட்டஸ்களுக்கு குரூரமாக லைக்குகள் போட்டு மகிழ்கிறோம். இயல்பு வாழ்வை எவ்வளவுக்கு அதிகமாக பாதிக்கிறதோ, அவ்வளவுக்குப் பெரியது எங்கள் கட்சி என்று மார் தட்டுகின்றனர் இந்த மடையர்கள்.
இன்னொரு மாபெரும் மோசடி, “இது மக்களுக்காக நடத்தப்பட்ட பந்த்” என்று சொல்லிக் கொள்வது..படுத்திருக்கையில் தன்னருகே வெடிகுண்டு விழுந்தால் கூட, திரும்பி மறுபக்கம் படுத்து, தூக்கத்தைத் தொடரும், சொரணை ஏதுமற்ற திருவாளர் பொதுஜனம் ஏதேனும் ஒரு விஷயத்திற்காக, பந்தை நடத்துகிறார் என்பதை யாருமே நம்பமுடியாது. இந்தியப் பொதுஜனம் அப்படி எதற்காகவாவது கொதித்து எழும் குணம் கொண்டிருப்பின், இன்றைய அரசியல்வாதிகளிடம், மிளகாய் அரைப்பதற்கு வாகாகத் தங்கள் தலையைக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்-அதுவும் தலைமுறை தலைமுறையாக.
”மக்களுக்காக நடத்தப்பட்ட முழு அடைப்பு இது” என்று சொல்வதற்கும், ஒரு அப்பாவிப் பெண்ணை பலவந்தமாகப் பாலியல் வன்புணர்வு செய்து விட்டு, “அவளுக்குப் பிடிக்கும் என்று நினைத்தே அவ்வாறு செய்தேன்” என்று சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.
பந்த் என்பதை ஃபார் த ரவ்டீஸ், பை த ரவ்டீஸ் ஆஃப் த ரவ்டீஸ் என்றுதான் வரையறுக்கலாம்
ஒரு நாளைக்கு பந்தினால் ஆகும் பொருளாதார இழப்பு மட்டுமே பத்தாயிரம் கோடிகளுக்கு மேல்.
ஆறு மாதங்களுக்கு முன்பே அயல்நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்காக விமான டிக்கெட் புக் செய்து வரும் பயணிகளின் நிலையை சற்றே எண்ணிப் பாருங்கள்.
அன்றைக்குக் காலை திருமண முகூர்த்தம் வைத்திருக்கும் குடும்பத்தினர் நிலைமை எப்படியிருக்கும்?
ஒருமுறை தென்மாவட்டங்களில் நிகழ்ந்த சாதிக் கலவரத்தால், நிகழ்ந்த பந்த்தில், எங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்த சொந்தக்காரர்கள் எல்லோரும் இரண்டு நாள்களுக்கு ஹவுஸ் அரஸ்ட்.
தொடர்ந்த அடைப்புகள், ஹர்த்தால்கள் இந்த உலகுக்கு இந்தியாவைப் பற்றி எதிர்மறைச் செய்திகளைப் பரிமாறுகின்றன. விளைவு,சுற்றுலா வருமானம் பலகோடி இழப்பு.
இந்த மாதிரி பந்த்களை நடத்தி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் எல்லா அரசியல், கட்சித்தலைவர்களும்,நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருக்கையில், அந்த விமானி, “இந்த நிமிடம் முதல் ஹர்த்தால்” என்று அறிவித்து விட்டு பாராசூட்டை அணிந்து, அவர் மட்டும் கீழே குதித்துத் தப்பித்து விட வேண்டும்.
இனிமேல் யாராவது உங்களிடம் கடையடைப்பு, பந்த் என்று சொன்னால் அதை ஒரு ஜனநாயகக் கற்பழிப்பு, ஜனநாயகப் படுகொலை என்று தயங்காமல் சொல்லுங்கள். பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் எந்தக் கட்சிக்கும் உங்கள் வாக்குக்ளைப் போடாதீர்கள்.இனி அடுத்தமுறை கடையடைப்பு, பந்த என்று செய்தி வந்தால், அவரவர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு, நமது இயல்பு வாழ்க்கையைக் காப்பது அவரது கடமை என்று கூறி பந்தை நிராகரிக்கச் சொல்லி அனைவரும் கோரிக்கை வைப்போம்
.
“பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கட்சிக்கே எங்கள் ஓட்டு” என்று உரத்து சொல்வோம் ஓராயிரம் முறை.இப்படி, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், முகநூல், ட்விட்டர், இணையம் என்று எல்லாவற்றிலும் பந்த்திற்கு எதிரான நம் கருத்துக்களைப் பரப்பி, நம் அடுத்த தலைமுறையிலாவது, ஹர்த்தாலில் / மாநாட்டுப் பேரணிக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு, மருத்துமனைக்குப் போக மணிக்கணக்காகி, நடுரோட்டில்,ஆம்புலன்சிலேயே மனிதர்கள் மரணிக்கும் அவலத்தைக் களைவோம்.
அப்படியும் மீறி யாராவது கட்சிப் பிரமுகர் பந்த்தை வலியுறுத்தி, பொது இடத்தில் பிரச்னை செய்தால், “சரி, பந்த்தை ஆதரிக்கிறோம்”, என்று சொல்லி, அவரது ஆசனவாய்க்கு ஒரு பெரிய கார்க் போட்டு அடைத்து, பந்த்தை அவர் உடம்பில் இருந்து தொடங்குவோம். அமைதியாக.
படம்: கூகிள் தேடல்.
Good one. The party which announces bandh should be responsible for law and order. failing, their party approval should be cancelled by EC,