காப்பிப் பொடியும் காணாமல் போன இண்டலக்சுவலும் :)

”காவேரி மஹாலுக்கு எதிர்த்தாப்புல இருக்குற வெண்ணைக் கடையில கால்கிலோ வெண்ணை வாங்கிக்க.”

”சரி.”

”கிருஷ்ணா காஃபில கால் கிலோ ஸ்பெஷல் பி.பி காஃபிப்பொடி. சிக்கரி தனியா வாங்கிக்க.”

”சரி.”

”சேர்மன் ஸ்டோர்ல அப்பளக் கட்டு ஒண்ணு”.

”ம்.”

”இந்தா பணம். இருவது ரூபா மதியச் சாப்பாட்டுக்கு. உனக்குப் புஸ்தகத்துக்கு முப்பது ரூவா. பணம் பத்திரம்.”

துள்ளலுடன் ஜெயவிலாஸ் பஸ் பிடித்து மதுரையில் இறங்கும் போது, மதுரையில் இருக்கும் அத்தனை பேரை விடவும் நான் தான் சந்தோஷமாக இருப்பேன்.பள்ளியில் படிக்கையில் இது போன்ற மதுரைப் பயணங்கள் ஒரு மாதத்திற்கு ஒருமுறை வருவதே குதிரைக் கொம்பு.

முதலில் நான் போவது சர்வோதய இலக்கியப் பண்ணைக்கு. ஒரு முக்கால் மணி நேரம் புத்தகங்களைப் பார்த்து விட்டு, ஏதேனும் நல்ல புத்தகங்கள் இருந்தால் அதை மனதில் வைத்துக் கொண்டு, மல்லிகை புக் செண்டர், பாரதி புக் செண்டர், மதர்லேண்ட் புக் செண்டர், எல்லாம் பார்த்து விட்டு, டவுண்ஹால் ரோடு பக்கம் நடந்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் செல்வேன். அங்கே ஒரு அரை மணி நேரம். வயிற்றுப் பசி கிள்ள, நேராக வெண்ணெய்க் கடைக்கு வருவேன்.

”அண்ணே, மோர் குடுங்க” என்று ஒரு முழ உயரத்திற்கு இருக்கும் கண்ணாடி கிளாஸ் நிறைய மோர் குடிப்பேன்.

”இன்னொரு மோர்.”

அதுவும் உள்ளே போக நான்கே ரூபாயில் வயிறு நிறைந்து விடும்.
மீண்டும் புத்தகக் கடை. இந்த நான்கு கடைகளிலும் நடத்திய திக்விஜயத்தில் இன்றைக்கு எந்தெந்த புத்தகங்களை வாங்க வேண்டும் என்று ஒரு தெளிவு கிடைத்து விடும்.

அவற்றை எல்லாம் வாங்கி விடுவேன்.என் ஒரு மாத சேமிப்பு, அம்மா புத்தகம் வாங்கக் கொடுத்தது, மதியச் சாப்பாட்டுக்குக் கொடுத்தது, எல்லாம் சேர்த்து ஒரு நூறு ரூபாய்க்கு, நான்கைந்து புத்தகங்கள் புது மணத்துடன் என் கையில்.

தெற்குக் கோபுரம் வழியாக மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந்து விபூதிப் பிள்ளையாரில் தொடங்கி, அம்மன், சுவாமி, முக்குறுணி விநாயகர் என்று எல்லோரையும் தரிசித்து விட்டு, பொற்றாமரைக் குளத்தில் நான்கு கோபுரங்களையும் பார்க்க வசமான இடமாய்ப் பார்த்து உட்கார்ந்து விட்டு, வெளியே வருகையில் மணி ஐந்தாகி இருக்கும்.

லண்டன் புக் செண்டருக்கு எதிரில் இருக்கும் பிளாட்பாரப் பழைய புத்தகக்கடையில் அரை மணி நேரம் துழாவி விட்டு, பத்து ரூபாய்க்கு இரண்டு புத்தகங்கள் வாங்குவேன்.

காஃபிப் பொடி, வெண்ணெய், அப்பளமெல்லாம் வாங்கி விட்டு, ஜம் ஜம்மில் ஒரு மசாலா டீ குடித்து விட்டு, ஜெயவிலாஸில் படிக்கட்டுக்குப் பிந்தைய சீட்டில் உட்கார்ந்து, வாங்கிய புத்தகங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துப் படிக்கத் துவங்கி, கல்லுப்பட்டி வந்து சேருகையில், தமிழ்நாட்டில் நாமும் ஒரு இண்டலெக்சுவலோ என்கிற தடுமாற்றம் ஒன்று வரும்.

“சிக்கரி வாங்க ஏண்டா மறந்த?” என்கிற பாட்டியின் வசவில் அந்தத் தடுமாற்றம் கலையும். 🙂

ஃபேஸ்புக்கில் வெளியான லிங்க்:https://www.facebook.com/Rprakash.in/posts/540354456023432

Did you like this? Share it:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *