கல்யாணமும் கயாஸ் தியரியும்


“வயசாயிட்டே இருக்கு. சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணா பாத்துக் கல்யாணம் பண்ணிக்க” என்று என்னிடம் சொல்பவர்களின் எண்ணிக்கை
அதிகமாகிக் கொண்டே இருந்ததாலும்,எனக்கே கொஞ்சம் லேட்டாக உறைக்க ஆரம்பித்ததாலும் என் கல்யாணத்திற்குப் பெண் தேடும்
முயற்சியில் இறங்கினேன்.
“பொண்ணா கிடைக்கலே! பையன்கள் கிடைக்குறதுதான் குதிரக் கொம்பா இருக்கு” என்கிறவர்களின் பேச்சால் சீக்கிரம் பெண் கிடைத்து விடுவாள்
என்று அசாத்திய நம்பிக்கையுடன் இருந்தேன்.சில மாதங்கள் கழித்தே என் நம்பிக்கை “குருடு” என்பது தெரிய வந்தது.
என் வீட்டில் ஜோதிடத்தின் மேல் அவ்வளவு எல்லாம் நம்பிக்கை கிடையாது.இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே எங்கள் ஜாதகங்களை
எங்கள் ஆஸ்தான ஜோதிடரும்,உறவினருமான திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் காண்பித்துப் பலன் கேட்பர்.
மற்றபடிக்கு,வாரத்துக்கு இரண்டு முறை ஏதேனும் தம்ளர் அல்லது பாத்திரங்கள் இடம் மாறி வைத்துக் காணோம் என்றால்
அது கிடைக்குமா,கிடக்காதா? அது வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறதா? எந்தத் திசையில் இருக்கிறது? என்றும்,அவ்வப்போது வரும் முழங்கால் வலி ஏன் வருகிறது? அது
முழுவதுமாக எப்போது குணமாகும் என்பதற்கு மட்டும் ஜாதகம் பார்ப்பார்கள்.

ஏழுகடல் தாண்டி,ஏழு மலைதாண்டி என்று சின்ன வயதில் படித்திருப்பீர்களே! கல்யாணம் என்பது அது போல.
எனக்கு ஏற்ற மணப்பெண் கன்னட மாத்வ குலத்தில்,காசியப கோத்திரம் அல்லாத வேறு கோத்திரத்தில் பிறந்தவளாகவும்,என் நட்சத்திரத்திற்குப் பொருந்தக்கூடிய 12 நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் பிறந்திருப்பவளாகவும்,
அதையெல்லாம் தாண்டி,ஜாதகப் பொருத்தத்தில் பத்துக்கு ஏழு பொருத்தமேனும் உள்ளவளாகவும் இருக்க வேண்டும்.(குறிப்பாக நான் மிகவும் வலியுறுத்தும் “தமிழ் தெரிந்த” பெண்ணாக இருத்தல் மிக அவசியம்)அப்போது தான் அடுத்த கட்டமாக பெண்ணின் போட்டோவைக் கேட்டு,அது பரஸ்பரம்
பிடித்திருந்தால் நேரில் சென்று பெண்பார்க்க முடியும்.

தினமலர் மணமாலைப் பகுதியில் இலவச விளம்பரம் வெளியிட்டதில் ஒன்றிரண்டு ஜாதகங்கள் வந்தன.
இனி மளமள வென்று எல்லாம் நடந்தேறி விடும் என்றிருந்தேன்.ஆனால், ஜாதகப் பொருத்தம் என்னும் விஷயத்தால் இதோ அதோ என்று
இழுத்தடித்துக் கொண்டே போனது.வீட்டில் பெரியவர்கள் முயற்சிப்பது ஒரு புறம் தொடருட்டும்:
நாமும் முயற்சிக்கலாம் என்று இண்டர்நெட்டில் புற்றீசல்கள் போல முளைத்திருக்கும் கல்யாணத்தளங்களான சாதீ.காம்,பாரத்மேட்ரிமோனி.காம்,
ஜீவன்சாதி.காம்,கே.எம்.மேட்ரிமோனி.காம்,பரிவர்த்தன்.காம் என்று எல்லா தளங்களிலும் என் ப்ரொஃபைலை இட்டேன்.
இவைகளில் உள்ளாடை சைஸ் தவிர மீதி என்னைப் பற்றின அத்தனை விபரங்களையும் கேட்கிறார்கள்.
எப்படியாவது கல்யாணம் நடந்தால் சரி என்று என்னைப் பற்றின அத்தனை விபரங்களையும் கொடுத்தேன் – போட்டோ உட்பட.
அதே தளங்களில் என்னைப் போன்று இட்டிருந்த பெண்களின் ப்ரொஃபைல்களுல் எனக்குப் பிடித்ததைத் தேடி என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.

கொஞ்ச நாட்களாகியும் ஒன்றும் பதில் வரக்காணோமே என்று மீண்டும் என் ப்ரொஃபைலை சரி பார்த்ததில் “பார்ட்னர் ப்ரிஃபரன்ஸ்” என்றிருந்த,
என் வருங்கால மனைவி பற்றிய என் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்யாமல் விட்டிருந்தது தெரிய வந்தது.சரி என்று அதையும் முடித்து வைத்தேன்.
குருவி உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாய் சில பதில்களும்,புதிய விருப்பங்களும் என் இன்பாக்ஸிற்கு வர ஆரம்பித்தன.லவ்லி ரோஸ்,மீட்ரூபி,
நேச்சுரல்பியூட்டி,ஸ்வீட்டி இவைகள் எல்லாம் எனக்கு விருப்பம் தெரிவித்திருந்த பெண்களின் ப்ரொஃபைல் பெயர்களில் ஒரு சில.
நான் விருப்பம் தெரிவித்திருந்த பெண்கள் சிலபேர் என் விருப்பத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர்.சரி அவர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று பார்த்தால்
சந்தா கட்டியிருப்பவர்கள் மட்டுமே அடுத்தவரது முகவரியையோ,தொலைபேசி எண்ணையோ பார்க்க முடியும் என்கிற விஷயம் தெரிய வந்தது.
அவர்களாவது என் விலாசம் பார்த்து என்னைத் தொடர்பு கொள்வார்கள் என்று சில வாரங்கள் காத்திருந்தேன். ம்ஹூம். என்னைப் போன்றே
அவர்களும் இலவச சந்தாதாரர்களாய் விருப்பம் தெரிவித்த எதிர்பாலினத்தவரின் போட்டோவையும்,மானிட்டரையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பார்கள் போலும்.
போனால் போகிறது என்று ஆறு மாத சந்தாவிற்கு என்று இரண்டு தளங்களுக்கு பணம் செலுத்தி என்னை அப்கிரேடு செய்து கொண்டேன்.
அதன் பின் எல்லோரது முகவரியையும் பார்த்து தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுக்கலாம் என்றிருந்தவன் நினைப்பில் விழுந்தது மண்.
நிறையப் பெண்கள் தங்களது போட்டோ,தொடர்பு விபரங்களைப் பாஸ்வேர்டு கொடுத்துத் திண்டுக்கல்பூட்டு போட்டுப் பூட்டி வத்திருந்தார்கள்.
அவர்களது விருப்பம் இருந்தால் தான் நான் அவைகளைப் பார்க்க முடியும் என்கிற நிலை.

ஒரு ஞாயிறு காலையில் உமா என்ற பெண்ணிடம் இருந்து பாஸ்வேர்டு எனக்கு வந்திருந்தது.பாஸ்வேர்டை உபயோகித்து
அவரது போட்டோவைப் பார்த்து அதிர்ந்து போனேன். மானிட்டர் கொள்ளாத அளவு ஃபோட்டோவில் பெரிய உடல்வாகு.என்னை விட இருபது கிலோ எடை கூட.
சுமோ என்று பெயரிருந்திருந்தால் பொருத்தமாக இருக்கும்.
சரி அந்த லவ்லி ரோஸ் என்னவாயிற்று என்று போய்ப் பார்த்தால் அந்தப் ப்ரொஃபைல் நீக்கப்பட்டிருந்தது.நான் பார்த்து வைத்திருந்த ரோஸை
யாரோ பறித்துச்சென்று விட்டார்கள்.கல்யாணம் ஆகி விட்டிருக்கும் போல.

பரிவர்த்தன்.காம் இல் ஒரு நூற்றைம்பது பெண்களின் விபரங்களை அலசி,அதில் பொருத்தமாக உள்ள ஐந்தாறுக்கு என் விபரங்களை அனுப்பி வைத்தேன்.
ஜாதகம் இணைக்கப் பட்டிருந்த ஒரு பெண்ணின் முழுவிபரங்களை பிரிண்ட் எடுத்துக் கொண்டு,ஜோதிடம் தெரிந்த என் உறவினர் ஒருவரிடம் அப் பெண்ணின்
ஜாதகதைக் காட்டியதில்,இது எனக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது என்றார்.
பெண்வீட்டாரை ஃபோனில் அழைத்து ஜாதகப் பொருத்தம் பற்றி எடுத்துக் கூறிய போது, அப்பெண்ணிற்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகி விட்டதாகவும்,
தற்போது முழுகாமல் இருப்பதாகவும் தெரிவித்ததாகக் கூறினார்.

மற்ற பெண்களின் விபரங்களை வைத்துத் தொடர்பு கொண்டதில்,வத்றாயிருப்பில் உள்ள ஒரு பெண்ணின் தந்தை இப்படி ஆரம்பிக்கிறார்.
“என் பெண்ணிற்கு நான் – ட்ரான்ஸ்ஃபரபிள் டீச்சிங் ஜாப்.உங்கள் பையன் இந்தப்பக்கம் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு வருவாரா?”
துரதிர்ஷ்டவசமாக நான் பணியிலிருக்கும் மும்பை பயோ-டெக் கம்பெனிக்கு வத்றாயிருப்பிலோ,அதற்கருகிலோ கிளைகள் ஏதுமில்லாததால்,வத்றாயிருப்புப் பெண்ணைக் கல்யாணம்
செய்து கொண்டு அருகிலிருக்கும் பிளவக்கல் அணை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளை வாழ்க்கை முழுவதும் ரசிக்கும் பாக்கியம் எனக்கு ப்ராப்தியாகவில்லை.

என் கஸின் ஒருவரது வற்புறுத்தலின் பேரில் த ஹிந்து நாளிதழில் ஞாயிறு அன்று வெளியாகும் வரிவிளம்பரத்தில் நான்கு வாரங்களுக்கு விளம்பரம் செய்ததில்
நிறைய பெண்வீட்டாரிடமிருந்து ஃபோன்களும்,இ-மெயில்களும் வந்திருந்தாலும்,எல்லாம் ஜாதகப் பொறுத்த டகாஸிஸ் கேஸ்சிலில் அடிபட்டு விழுந்தன.விளம்பரத்தின் சைடு எஃபெக்டாக
ஏகப்பட்ட தனியார் திருமண ஏஜென்சிகளிடமிருந்தும் மெயில்பாக்ஸ் கொள்ளாத அளவுக்கு மெயில்கள்.அவர்களிடம் உறுப்பினராகச் சேரச் சொல்லி வற்புறுத்தி.

இருந்தாலும் அவ்வப்போது சாதியிலோ,ஜீவன் சாதியிலோ,கன்னட மேட்ரிமோனியிலோ தினசரி விருப்பம் தெரிவித்த, பதில் கேட்டு மெயில்கள் பல வந்து கொண்டுதானிருக்கின்றன.
எனக்கு ஒரு ஃபார்வர்டு மெயில் வந்தது.உலகில் 99.5 சதவீத பெண்கள் அழகானவர்கள்;மீதமுள்ள 0.5 சதவீத பெண்கள் என் க்ளாஸ் மேட்ஸ் என்று. அது போல, எனக்கு எல்லா விதங்களிலும்
பொருத்தமுள்ளதாக, நன்கு லட்சணமாக இருக்கும் அநேகமாக எல்லாப் பெண்களும் நான் பிறந்த அதே காசியப கோத்திரத்தில் பிறந்து(த் தொலைத்து) என் பாச மலர்களாகி விட்டார்கள்.வேறு கோத்திரத்தில் பிறந்து
நிறையப் பொருந்தி வரும் சில பெண்களிடமிருந்தும் எனக்கு விருப்பம் தெரிவித்து வந்திருந்தன.
சாம்பிளுக்கு சில.

32 வயதாகும் பி.எச்.டி.படிக்கும் ஒரு பெண் விருப்பம் தெரிவித்திருந்தார்.அவரைப் பற்றி மேலும் தகவலறிய அவர் ப்ரொஃபைலைப் படித்ததில்,ஒரு நாளைக்கு 15 மணி நேரம்
ஆராய்ச்சியில் ஈடுபடுவாராம்.ஆராய்ச்சி பற்றிய இன்ன பிற விபரங்கள்… அவர் வசிக்கும் அந்தச் சின்ன டெஸ்ட் ட்யூபுக்குள் நான் ஒண்டி வாழ்வது கஷ்டம் என்று நாசூக்காக மறுத்து விட்டேன்.

மும்பையில் இருந்து இன்னோரு பெண்…29 வயது.அட்வர்டைசிங் துறையில் பணி.சரி.பரவாயில்லை என்று முழுக்கப் படித்ததில் “ட்ரிங்” என்கிற கட்டத்துக்கு அருகில் “எப்போதாவது”
என்று பூர்த்தி செய்திருந்தார்.எனக்குப் பின் புலத்தில் பழைய பாட்டான “குடி மகனே…. ஹே ஹே ஹே. பெருங்குடிமகனே…நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு…
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு…ஓடியது.”

28 வயதாகும் மைசூர்ப் பெண்,சைன் டிஸ்ட்,குரூப் -ஏ பணியிலிருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்க -மற்றவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று எழுதியிருந்தார்.

இது போக டாக்டர் பெண்கள் எல்லோரும் “டாக்டர்கள் மட்டும் விண்ணப்பிக்க” என்று சிரிஞ்சோடு எழுதியிருந்தார்கள்.(சொந்தமாக க்ளினிக் வைத்திருந்தால் சாலச்சிறந்தது என்றும் பின்குறிப்புகள்)
நானும் டாக்டர் தான்,ஆனால் மாட்டு டாக்டர் என்று எழுதி வாங்கிக் கட்டிக்கொள்ள மனம் வரவில்லை.(பின்னால் க்ளினிக் வைத்து மாடு,மனிதர் இருவரையும் ஒரே க்ளினிக்கில்
மருத்துவத்திற்கு வரவழைப்பதில் சில ப்ராக்டிகல் டிஃபிக்கல்ட்டீஸ் உள்ளன)

மேற்கண்ட முயற்சிகள் தவிர தனியாக இது போன்று திருமண அரேஞ்மெண்ட் செய்பவர்களாக ,ஜாதகப் பரிவர்த்தணை செய்யும் சிலரிடம்
(நங்க நல்லூர்,வியாசர்பாடி,நுங்கம்பாக்கம்,ஸ்ரீரங்கம்,மதுரை) தலா முன்னூறு ரூபாய் கொடுத்து என் விபரங்களையும் ஜாதகத்தையும் பதிந்து உள்ளேன்.
அவர்களிடமிருந்தும் அவ்வப்போது தகவல்கள் வரும்.
ஆனால் ஜாதகப் பொறுத்த முதலை வாயில் கஜேந்திர கதி மோட்சம் தான்.

பொருந்தி இருந்த ஒரே ஒரு பெண் ஜாதகத்தை வேறு ஒரு ஜோதிடரிடம் காண்பிக்கப் போய்,அதற்கு அவர்,”இதில் ஒன்று சுத்த ஜாதகம்,
இன்னொன்று,தோஷம் வந்து நிவர்த்தியான ஜாதகம்.இவைகளை சேர்த்தால் சண்டை சச்சரவுகள் வரும்:அதிகபட்சம் ஆளையே காலி பண்ணி விடும்” என்று
ஆட்டோ அனுப்பாத குறையாய் அச்சுறுத்தினார்.

இது இப்படியிருக்க, சமீபத்தில் கயாஸ் தியரி பற்றிக் கால்வாசிப் (பார்த்துப்)புரிந்து கொண்டு எதைச் செய்தால் அதனுடைய பின் விளைவாக என் திருமணத்திற்குத் தக்க பெண் கிடைப்பாள்
என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
மும்பையில் பட்டாம்பூச்சிகள் கிடைக்கவில்லை என்பதால் அடுத்து சென்னை வரும்போது மொத்தமாகப் பட்டாம் பூச்சிகள் வாங்கி செலக்டிவ்வாக
நங்கநல்லூர், மயிலாப்பூர்,மாம்பழம் திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் பறக்க விடத் திட்டமிட்டுள்ளேன்.அவைகள் பறந்து அந்த ஏரியாக்களில் இருக்கும் எனக்கேற்ற பெண்களை/அவர்களின் பெற்றோர்களை
என் இன்பாக்ஸிற்கு மெயில் அனுப்ப வைக்கும் என்று கயாஸ் தியரியின் படி திடமாக நம்புகிறேன்.அதுவரை என் அறையில் இருக்கும் டேபிள்,டி.வி.போன்ற பொருட்களை இடம் மாற்றி வைத்துக் கொண்டு
அதனால்,ஏதேனும் குறுகிய கால கயாஸ் விளைவுகள் நிகழலாமோ என்கிற எண்ணத்தில் பொழுது போய்க்கொண்டிருக்கிறது.

இப்படிக்கு
கயாஸ் தியரியால் கல்யாணம் நடக்கக் காத்திருப்பவன்.

Did you like this? Share it:

13 comments

 1. நல்ல அங்கதமான பதிவு. இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை என பு.தலைவர் பாடுவதுபோல உங்கள் கஷ்டத்தை நகைச்சுவையாக எழுதி கலக்கி விட்டீர்கள். சீக்கிரமே நல்ல பெண் கிடைக்க வாழ்த்துக்கள்.

  ஜெயக்குமார்

 2. வாழ்க்கையே Chaos Theory படி தன் நடக்குது…
  குஷி படத்தில அத சொல்லாம சொல்லி இருப்பாப்ல நம்ம S.J.Surya…
  உங்களுக்கு ஒரு ஜோதிகா, எங்கயோ..சிரிச்சுகிட்டு ஜாலியா இருக்காங்க….
  சீக்கிரமா உங்க கண் முன்னால் வந்து நிப்பாங்க ..வாழ்த்துக்கள்…

 3. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி செல்வின்.
  நன்றி பாலா& கானகம்.

 4. Your last post is June 08. After that nothing.. what happened?? Write something dear.. Also visit my blog too 🙂

  Jayakumar

 5. Hai Doc!

  பொண்ணூ கெடச்சு, ‘நிச்சயம்’ முடிந்ததும் கூட, இப்போதைக்கு “நேரம் கிடைத்தால்” எழுதலாமே.

  advance திருமண வாழ்த்துக்கள்!

 6. லவ்லி, சரிங்க கல்யாணம் முடிஞ்சிருச்சா?

 7. நன்றி குழலி.
  கல்யாணம் போன மாதம் முடிந்து, இப்போதுதான் கொஞ்சம் ப்ளாக் பக்கம் வர நேரம் கிடைத்திருக்கிறது.இனிமேல் தான் எழுத்தைத் தொடரவேண்டும்.
  🙂

 8. எப்பண்ணே எழுத ஆரம்பிப்பீங்க?? ஒரு வருஷத்துக்கு மேலையே ஆச்சேண்ணே… 🙂

 9. ur way of narration s very humorous 🙂 edha padchu mudikumbodhu dan ennaku onnu purinjadhhu.. for nearly 5mins i dint realize wats happening around me.. to tat extent i was into ur writing..!

 10. Way to go anna! Such hilarious description of events and the difficulties faced during the bride searching phase! awesome. ஒரு காலத்துல நானும் இந்த மாதிரி போஸ்ட் போட்டிருக்கேன். லின்க் தர முயற்சிக்கறேன்! 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *