ஜென்ரல் அனெஸ்தீஸியா

ஜெனரல் அனெஸ்தீசியா
பிரேமா சிஸ்டர் வந்து மீண்டும் ப்ளட் பிரஷரை சரி பார்த்தார்.பி.பி. கொஞ்சம் ஜாஸ்தி இருக்கு. அது நார்மலானதும் தான் ஆபரேஷன் என்றார்.

ஆபரேஷன் என்னவோ மைனர் தான்.கல்லூரியில் படிக்கையில் நெல்லிக்காய் அளவில் என் முதுகில் இருந்த ஒரு கொழுப்புக் கட்டி, சில வருடங்களில் தக்காளி அளவில் வளர்ந்து சில காலம் முன்பு, மணிப்பாலில் சர்ஜரி செய்யுமளவுக்கு என்னைக் கொண்டு வந்து விட்டிருந்தது.ஜென்ரல் அனெஸ்தீஸியா என்று தெரிந்தவுடன் எனக்கு பிபி எகிறி விட்டதோ என்று எனக்கே சந்தேகம்.

காரணம் இல்லாமல் இல்லை.
ஜென்ரல் அனெஸ்தீஸியா என்பது மருந்துகளால் உண்டாக்கப்படும் கோமா.மரணத்தின் வாசல் வரை சென்று காலிங் பெல்லை மட்டும் அழுத்தி விட்டு, வீட்டுக்குள் செல்லாமல் திரும்ப வரும் அதிசயம். ஸ்கெலிட்டல் மஸில்ஸ் எல்லாம் ரிலாக்ஸாகி, எந்த வலியையும் உணர முடியாது, மோட்டார் ரிஃப்ளெக்ஸஸ் எல்லாம் இழந்து போய், நினைவு தப்பி பாதாளத்தில் விழுந்து கிடக்கும். மைய நரம்பு மண்டலத்தின் ,செரிப்ரல் கார்டெக்ஸ், தலாமஸ், ரெடிகுலர் ஆக்டிவேடிங் சிஸ்டம்,ஸ்பைனல் கார்டு போன்ற இடங்களைத் தாக்கும் அனெஸ்தடிக் மருந்துகள், இவைகள் அனைத்துக்கும் சில மணி நேரம் எல் டி சி விடுமுறை கொடுத்து அனுப்பி விடுகிறது.

இந்த லீவை சாங்ஸன் செய்வதற்கு முன் உடம்பை ஆதி முதல் அந்தம் வரை சப்ஜாடாக பரிசோதிப்பர்.அதற்குப் பெயர் ப்ரி அனெஸ்தடிக் இவாலுவேஷன். முக்கியமாக நோயாளியின் வயது, எடை, பாடி மாஸ் இண்டெக்ஸ், மெடிக்கல் மற்றும் சர்ஜிகல் ஹிஸ்டரி,தற்போது உட்கொள்ளும் மருந்துகள் என்னென்ன? எவ்வளவு நேரமாக பட்டினி போடப் பட்டிருக்கிறார், இப்படி நீளும் அந்த லிஸ்ட். இவைகளுக்கேற்ற மாதிரி மயக்க மருத்துவர் ரத்தக் குழாய் வழி மருந்தா (இண்ட்ரா வீனஸ்) சுவாச வழி மருந்தா (இன்ஹலேஷன்) என்று பூவா தலையா செய்வார். சில நேரங்களில் இரண்டையும் ராவாக மிக்ஸ் செய்து ஜிவ்வென்ற மயக்கத்தை ஏற்றுவார்.

ப்ரீ அனெஸ்தடிக் கேர் ரூமில் இருந்த எனக்கு,ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்துப் பொருத்தி விட்டு, என் தலைமாட்டின் பக்கவாட்டில் இருந்த, பீப் பீப் ஒலிக்கும் மானிட்டரை மீண்டும் ஒரு முறை பார்த்த பிரேமா சிஸ்டர், உதட்டைப் பிதுக்கினார்.

ஜென்ரல் அனெஸ்தீசியாவை வெடனரி காலேஜில், ஃபார்மகாலஜியில் படித்தது தான். இனிமேல்தான் முதல் முறை அனுபவம்.மில்லி லிட்டர் கணக்கில் இருக்கும் வாமன மருந்துகள், நம் உடலில் விளைவிக்கும் விஸ்வரூப விளைவுகளை முதன்முதலாக அனுபவிப்பதில் கொஞ்சம் எக்ஸைட்மெண்டாக இருந்தது.

anesthesia
ஞாபகமாக, ஜெனரல் அனெஸ்தீஸியா கொடுக்க ஆரம்பித்து நூறிலிருந்து ஒன்று வரை மனதிற்குள் எண்ண வேண்டும், எத்தனையாவது கவுண்ட்டில் என் கான்ஸியஸ்னெஸ் எனக்கு டாட்டா சொல்கிறது என்று அறிந்து கொள்ள ஆசையாக இருந்தது.பிபி நார்மலானதும் தான் மயக்க மருந்து கொடுப்பர்.பிபி யைக் குறைக்க முதுகந்தண்டின் கீழே மனதை வைத்து கொஞ்சம் தியானம் செய்யலாம் என்று கண்களை மூடினேன்.சிஸ்டர் வந்து என் சலைனை நிதானப் படுத்தி மருந்தை செலுத்துவதை உணர முடிந்தது.

நான் இருப்பது ப்ரீ அனெஸ்தடிக் அறையில். இனிமேல் தான் என்னை சர்ஜரி தியேட்டருக்குக் கொண்டு சென்று பிரகாசமான ஒளி வெள்ளத்தில், ஆட்டோக் கிளேவ் செய்யப்பட்ட, கிருமிகள் எதுவுமில்லாத, இந்த வருடம் வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் உடுத்தியிருந்த பச்சைக் கலர் உடைகள் அணிந்த தேர்ந்த சர்ஜன், தம் குழுவோடு, அந்தக் கொழுப்புக் கட்டியைக் கீறி எடுத்து, தையல் போடுவார்.

இதெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் என் உடம்பில் இஇஜி, இசிஜி,பிபி,ஆக்ஸிஜன் அளவு,கார்பன் டை ஆக்ஸைடு அளவு, உடல் வெப்பநிலை,மயக்க மருந்தின் அளவு, எல்லாவற்றையும் ஆந்தைக் கண்களுடன் கண்காணித்துக் கொண்டிருக்கும் மானிட்டர்கள் இதில் ஏதேனும் அளவு மாறினால் கூக்குரலிடும்.உடனே, அதற்கேற்ற பரிகாரத்தை நர்ஸ்கள் அபாய கால வேகத்தில் செய்து முடித்து அனெஸ்தீஸியாவை அகலாது அணுகாது தீக்காய்வார் போல எங்கே வைக்க வேண்டுமோ அங்கே மெய்ண்டெய்ன் செய்வர். ஆபரேஷன் முகூர்த்தம் முடிந்தவுடன் போஸ்ட் ஆபரேடிவ் அறையில் வைத்திருந்து,உடம்பின் பிரதான உறுப்புகளின் பணிகள் எல்டிசி முடிந்து பழையபடி ரீஜாய்ன் செய்து விட்டதை உறுதி செய்தபின் நோயாளியை, வார்டுக்கு அனுப்புவர்.

ஒரு பத்து நிமிடங்கள் போயிருக்குமா?.இவ்வளவு நேரம் செய்த தியானத்திற்கு, என் பிபி கண்டிப்பாக நார்மலாக ஆகி இருக்கும் என்று நம்பிக்கையுடன் கண்களைத் திறக்கையில், மீண்டும் ஒரு தடவை நினைத்துக் கொண்டேன்.ஜெனரல் அனெஸ்தீஸியா செட் ஆகும்போது ஞாபகமாக நூறிலிருந்து ஒன்று வரை எண்ண வேண்டும் என்று. மானிட்டரின் பீப் பீப் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. மானிட்டரைப் பார்க்கத் தலையைத் திருப்பி, பிபி இப்ப நார்மலாயிடுச்சா? ஆபரேஷன் எப்ப ஆரம்பிப்பாங்க? என்று எதிரே இருந்த பிரேமா சிஸ்டரிடம் கேட்டேன்.
ஆபரேஷன் முடிஞ்சுருச்சு என்றார்.
அதான் ஜெனரல் அனஸ்தீஸியா. 🙂 🙂

படங்கள்: கூகுள்

ஃபேஸ்புக்கில் வெளியான லிங்க்: https://www.facebook.com/Rprakash.in/posts/531007103624834

Did you like this? Share it:

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *