இலையுதிர் காலம்- விட்டு விடுதலையாகி…

 

 

பாட்டி இறந்து விட்டார் என்கிற செய்தி வந்தவுடன், என்னதான் எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும் இனி பாட்டி இல்லை என்பதே சாஸ்வதமாகிப் போனதும், மனதுக்குள் ஒரு அடுக்கு சட்டென்று கலைந்தது. ஆனால், அடுத்த கணமே, ”இன்னும் ஏன் என் உயிர் போகாமல் இருக்குது?” என்று வலியைப் போர்த்திக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து கொண்டிருந்த பாட்டிக்கு இந்த மரணம் நிச்சயமாக ஒரு விடுதலையைத் தந்திருக்கும் என்று தோன்றியதும் வந்த அழுகையும் நின்றது.

பாட்டி என்பது இனி உடம்பில்லை, உடம்பின் தளைகள் இனி பாட்டிக்கில்லை என்கிற எண்ணமே எனக்கு நிறைவையும், நிம்மதியையும் கொடுத்தது.

காது கேட்காத கஷ்டம், கால் குடைச்சல் போன்ற உடம்போடு சம்பந்தப்பட்ட உபாதைகள் இனி பாட்டிக்கில்லை. வலி, துக்கம்,சந்தோசங்களைக் கடந்த வேறு ஒரு உலகத்திற்கு அவர் சென்று விட்டார் என்பது சற்று ஆசுவாசம் தந்தது.

அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு, வீட்டுக்குக் கிளம்பினேன். வீட்டுக்கு சென்று விட்டு, ஒசூர் சென்று அங்கிருந்து சென்னை பஸ் ஏற வேண்டும்.

பரிமாணத் தடைகள் ஏதுமற்ற உலகில் இருக்கும் பாட்டி, இந்நேரம், இரண்டு நாள்களுக்குத் தேவையான துணிகளை எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பும் என்னை அருகிலிருந்து பார்த்துக் கொண்டு கூட இருக்கலாம் என்று தோன்றியது.

அவர் இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் என்னை வரச்சொல்லி, உன்னப் பாத்துட்டேன்ல. இனிமே நிம்மதியா உயிர் போயிரும் என்று சொன்னார்.

சாவை எதிர்கொண்டபின், “அட! இவ்வளவு தானா!” என்று சாவைப் பற்றி, அதில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி என்னிடம் சொல்ல நினைத்திருப்பாரோ?

சென்னையில், தங்கையின் வீட்டில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப் பட்டிருந்த பாட்டியின் பொலிவான முகத்தைப் பார்த்ததும் இருந்த கொஞ்ச நஞ்ச துக்கமும் பறந்து போனது. மரணத்திற்கு முன் நான் பார்த்த, வலிகள் நிறைந்த,வேதனையான, இன்னும் மரணம் வாய்க்கவில்லையே என்கிற இயலாமைகள் நிறைந்த முகம் துளியும் இல்லை. துயரங்களனைத்தையும், உதறி எறிந்து விட்டு, பெரும் நிம்மதியான உறக்கத்தில் பாட்டி இருப்பதாகப் பட்ட்து.தான் மிகவும் பிரியமுடன் வணங்கும் ஆஞ்சநேயருக்கு, அவருக்கு மிகவும் பிடித்த துளசி மாலையைக் கட்டி அணிவிக்கையில் பாட்டிக்கு எப்படி ஒரு நிறைவு தோன்றுமோ அது போன்றதொரு நிறைவை அவர் முகத்தில்  பார்த்தேன்.மிகவும் பிரியமான நான் வந்தவுடன் கதறி,புரண்டு விழுந்து அழுவேன் என்கிற எண்ணத்தில் இருந்த என் வீட்டினருக்கே என் அமைதி ஆச்சரியமாக இருந்திருக்க்க் கூடும்.

சாமி விளக்கின் எண்ணெய் தீர்ந்தபின்னும் திரி எரிவது போல,தன் உடலில் இருந்த ஜீவன் ஒடுங்கிய பின்னும் எங்களுக்காக உழைத்த பாட்டி.

பாட்டிக்கு மரணம் வரவில்லை- பாட்டியே மரணத்தை எதிர்பார்த்துத் தேடிச் சென்றிருந்தார்.எட்டு மணிக்குத் துவங்க வேண்டிய இறுதிச் சடங்குகள் காலதாமதமாக பத்தரைக்குத் துவங்கின. பாட்டிக்கு இன்னும் வீட்டை விட்டுப் போக மனதில்லை என்று பேசிக் கொண்டார்கள்.இறுதிக்காரியங்கள் முடிந்து, அஸ்தியை எடுத்துக் கடலில் கரைத்தார்கள்.

உலகெங்கிலும், எல்லா சமூகங்களிலும் மரணத்தோடு தொடர்புடைய சடங்குகள், கட்டுப்பாடுகள்,நம்பிக்கைகள், என்று மரணத்தை விசேஷமாக்கும் செயல்பாடுகள் நிறைய உண்டு.எங்கள் வீட்டிலும் அவைகள் நடைபெற்றன. இறந்த ஆன்மா இந்த உடலிலிருந்து முழுவதும் விடைபெற்று, இவ்வுலக ஆசைகளில் இருந்தும் விடைபெற்று பரமபதம் அடைய இவைகள் மேற்கொள்ளப் படுகின்றன என்று படித்திருக்கிறேன். காவிரிக் கரையில், ஸ்ரீரங்கத்தில் தான தருமங்களுடன் கிரியைகள் நடைபெற்றன.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்று வள்ளுவர் கூறுகிறார்.

ஆன்மா தனது பழைய சட்டையைக் களைந்து புதிய சட்டையை அணிகிறது என்று பகவத் கீதையில் பரந்தாமன் சொல்கிறார்.உடல்பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதுபோலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது.தன்னை உணர்ந்த ஆத்மா,இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை”

ஒவ்வொரு மரணமும் மனிதனால் ஆகாத ஒன்று இவ்வுலகத்தில் உண்டு என்பதை மனிதனுக்கு நினைவுபடுத்தும் நினைவொலிதான்.(Reminder)

பாட்டியை இப்போது எப்படி வரையறுப்பது?

கலில்கிப்ரானின் இந்தக் கவிதை நினைவுக்கு வருகிறது.

நானொரு வார்த்தை சொல்ல
வந்தேன் !
நானதைச் சொல்ல வேண்டும்
இப்போது !
மரணம் என்னைத் தடுத்தால்
நாளைக்கு
உரைக்கப்படும் அது !
எனெனில்
நீடிக்கும் வரலாற்று நூலில்
வருங் காலம்
ஒருபோதும்
புறக்கணிப்ப தில்லை
ஒரு ரகசியத்தை !

அன்பின் மகிமை,
அழகின் ஒளிச்சுடர்
கடவுளின் பிரதி பலிப்பு !
அவற்றில் வாழப் பிறந்தேன் !
அவ்விதத்தில்
நானிங்கு வசிக்கிறேன் !
துரத்த முடியா தென்னை
அந்த வாழ்வு
அரங்கத்தை விட்டு !
ஏனெனில்
மரணத்திலும் நான் வாழ்பவன்
உயிரோடு வாழும்
என் வார்த்தைகள் மூலம் !

அவர் உடம்பில்லை. அவரது ஆன்மாவை நான் பார்க்க முடியாது.பாட்டி என்பது என்னில் இருக்கும் அவரது எண்ணம், சொல், செயல்கள், அவர் நிறைவேற்ற நினைத்த நல்ல காரியங்கள், அவர் என்னுள் ஏற்படுத்திய ஆழமான அதிர்வுகள் ஆகியவற்றின் மொத்தக் கலவையே இனி எனக்கு பாட்டி.இவைகள் எல்லாவற்றின் மூலமும் பாட்டி உண்டாக்கிய அன்புச் சங்கிலிகளின்  ஒரு வலிமையான கண்ணியாகவே என்னை நான் உணருகிறேன்.பாட்டி இறந்த பின்னும் இன்னும் இருக்கிறார்.

 

 

Did you like this? Share it:

One comment

Leave a Reply to ஜெயக்குமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *