புதியன புகுதலும்


வடக்கு நோக்கி, தன் பயணத்தைத் துவக்கும் சூரியனை இந்த மகர சங்கராந்தி தினத்தில் வணங்குகிறேன்.சமஸ்கிருதத்தில் “சங்க்ரமன” என்றால்,”நகரத் துவங்குதல்” என்று அர்த்தம்.
தமிழர்கள் பொங்கல் திருநாளாய் இதனைக் கொண்டாடுகின்றனர்.கிராமங்களில்,புது நெல்லில் பொங்கல் வைத்து அறுவடையின் முதல் படையலை இயற்கைக் கடவுளான சூரியபகவானுக்கே அர்ப்பணிப்பர்.பொங்கல் பிரசாதத்தை, குடும்பத்தில்,வேலைக்காரர்களுக்கு, பக்கத்து வீட்டினருக்கு என்று அனனவருக்கும் கொடுத்து மகிழ்வர்.எஜமானர் எல்லாவற்றையும் தனக்கே எடுத்துக் கொள்ளாமல், தன் வேலையாட்களுக்கும் உணவு,புது உடைகள் கொடுத்து அவர்தம் உழைப்பை கௌரவப்படுத்துவர்.பகிர்வின் உன்னதத்தை உணர்த்தும் சடங்குகள்.
காலண்டரில் நல்லநேரம் பார்த்து, துளசி மாடம் பக்கத்தில்,பொங்கல் படைத்து,கரும்புடன் சூரியனுக்கு படையலிட்டு,என் பாட்டி கொடுக்கும் பொங்கலை சாப்பிடுகையில் நம் வீட்டுப் பெரியவர்களின் நுண்ணறிவும்,இயற்கை சார்ந்த அவர்களின் எளிய வாழ்வும் எனக்கு உன்னத உணர்வைத் தரும்.பொங்கலன்று திருமணமான சகோதர, சகோதரிகளின் வீடு சென்று அவர்களுக்குப் பிடித்த பொருட்களை பரிசளிப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். திருநெல்வேலியிலிருந்து காலையில் தொலைபேசியில் “ஹேப்பிப் பொங்கல்” சொன்ன என் அக்கா மகள் உரிமையுடன் என்னிடத்தில்”பொங்கப் படி” கேட்டாள்.சின்ன வயதில் வீட்டுப் பெரியவர்களிடம் “பொங்கல்காசு” வாங்கி இஷ்டப்பட்ட பொருள்களை வாங்கி மகிழ்ந்தது
நினைவுக்கு வருகிறது.கணுக்கள் சீவப்பட்ட அடிக்கரும்புகளை சுவைத்து அதிகக் கரும்புகளை முதலில் தின்பவர் யார் என்று போட்டியில் தொடர்ச்சியாய்க் கரும்பு தின்று, பேசுவதற்கும் சிரமப்பட்டிருக்கிறோம்.பொங்கலின் தொடர்ச்சியாய் வரும் மாட்டுப்பொங்கலன்று,மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, வழிபாட்டுடன் விதவிதமாய் உணவளிக்கப்படுவது,நிலத்தைப் பண்படுத்துவது முதல், அறுவடை நெல்லை சுமந்து வந்தது வரை அவைகள் ஆற்றிய அரும்பணிக்கு ஒரு சிறிய நன்றியின் வெளிப்பாடு.பகிர்தல் வாய் பேசும் மனிதர்க்கு மட்டுமன்றி இயற்கையின் அனைத்து உயிர்களுக்கும் என்று அடுத்த கட்டம் போகுமிடம் இது.
இன்னும் பழைய மரபுகளில், மீன்களுக்கும்,குளக்கரையில் காகங்களுக்கும்,உணவுப் பதார்த்தங்களை இப்பண்டிகையின் போது அளிக்கும் பழக்கம் சில கிராமங்களில் உண்டு.ஜல்லிக்கட்டு அன்று,நான் வளர்ந்த கோ.புதூரில் கொம்பு சீவப்பட்ட
கோபக்கார காளைகளுடன் கலர்கலராய் அலங்கரிக்கப்பட்ட இளங்கன்றுகள், ஆர்ப்பரிக்கும் கூட்டத்திற்கு மிரண்டுபோய் எங்கள் தெருப்பக்கம் ஓடிவருகையில் அவைகளைப் பிடித்துக் கொண்டு எங்கள் சிறார் பட்டாளம் “பொதுவாக எம்மனசு தங்கம்”என்று வெற்றிக் கூக்குரலிடும்.
சங்கராந்தி துவங்கி சூரியன் வடதிசை நகரும் இந்த ஆறு மாதமும் அகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அற்புதக் காலம்.பாரதப் போரில் பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்து புண்ணியமான இந்த மகரசங்கராந்தி வரும் வரை காத்திருந்து பின் பூவுலகு நீங்கினார்.
பொங்கலின் முதல் தினமான “போகி”யில் வீடு, தெருக்களை வெள்ளையடித்து அலங்கரித்து
பழைய, தேவையில்லாத பொருட்கள்,குப்பைகளை எரித்துத் தூய்மையைக் கொள்வர். சுகாதார நோக்கில் இது மிகவும் அவசியமான ஒன்று.அழுக்கான எண்ணங்களையும், வேண்டாத பழைய பழக்கங்களையும் உதறித் தள்ளி, சூரியனின் குணங்களை உள்வாங்கும் இனிய தருணமே பொங்கல் திருநாள்.சூரியன் ஞானத்தின் சின்னம்:ஒளிவடிவானவன்;சூரியன் இல்லாது இவ்வுலகுஇல்லை.எனினும்,சுயநலமில்லாது,பிரதிபலன் பாராது, தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் எனும் பாகுபாடின்றி காலம் தவறாது தன் கடமை செய்பவன். இருளை அகற்றி இவ்வுலகைத் தன் அருளால் ஒளிர்விப்பவன்.உயிர்கட்கு சக்தியைக் கொடுப்பவன்.கர்மயோகத்தின் சிறந்த உதாரணபுருஷன்.
பொங்கலோ, சங்கராந்தியோ, இவ்விதம் உணர்ந்து கொண்டாடினால், நம் மனதின் மதிப்பீடுகள் மாறத்துவங்கும்.உண்மையான சந்தோஷம் பகிர்தலும், பலன் கருதாது உதவுதலுமே;நீடித்த செல்வம் அன்பான நண்பர்களும் மனமொருமித்த சுற்றமுமே.இந்த மகர சங்கராந்தி நாளில்,நண்பர்கள், உறவினர்கள் மீது மட்டுமல்லாது ஏனைய எல்லா உயிர்கள் மீதும் நம் அன்பும் மதிப்பும், பன்மடங்கு பெருகட்டும்.உள்ளத்தில் ஒளியூட்டும் புதிய பல எண்ணங்கள் பிறக்கட்டும்.”இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்”.

Did you like this? Share it:

One comment

  1. Hey I was thinking exactly about our childhood experience with “jallikattu”. Even narrated our “thiramai”. Thanks for the memories
    Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *