பஸ்ஸில் பறிபோன இருபதாயிரம் ரூபாய்

அலுவலக வேலை காரணமாக மூன்று நாட்கள் பெங்களூருக்கு சென்றிருந்தேன்.போன சனிக்கிழமை மாலை,பீன்யாவிலிருக்கும் என் அலுவலகத்திலிருந்து மெஜஸ்டிக் வந்து என் நண்பர்கள் இருக்கும் திப்சந்திரா செல்ல BEML Gate போகும் வண்டி (ஒன்றுக்கு இருமுறை விசாரித்து விட்டுத்தான்) ஏறினேன்.முன்பு ஒருமுறை BEML போகுமா என்று கேட்டு
ஏறி, கொஞ்ச நேரம் கழித்து வண்டி பழக்கப்படாத ரூட்டில் போவதை கவனித்து (அடடா! ஒரு மாசத்துல பெங்களூரு எவ்வளவு மாறிப் போயிருச்சு என்று பராக்குப் பார்த்து)பின் தாமதமாக முழித்து, அருகில் இருப்பவரிடம் இது திப்சந்திரா BEML Gate போகுமா? என்று கேட்டேன்.அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு”கேட்டு ஏர்றதில்லையா? இது அந்த BEML போகாதுங்க, இந்த ஊர்ல அஞ்சு BEML இருக்கு என்று என்னை அசரவைத்தார்.மீண்டும் மெஜஸ்டிக் வந்து நண்பர்கள் வீடுபோவதற்குள் மொத்தமாக 3 மணிநேரம் ஸ்வாகா.
சரி.விஷயத்திற்கு வருகிறேன்.கடைசி சீட் கிடைத்து “அப்பாடா! இனி பெங்களூரு ட்ராஃபிக்கில் பஸ் ஆமை மாதிரியோ நத்தை மாதிரியோ எப்படி வேணும்னாலும் போகட்டும், “ஏதோ!உட்கார இடம் கிடைத்ததே புண்ணியம்” என்று பாதியில் விட்டிருந்த
துக்ளக்கைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.கூட்டம் நெருக்கிக் கொண்டு வண்டியில் நிற்பதற்குக் கூட இடமில்லை.வண்டி நகரத்துவங்கி கொஞ்ச நேரம் கழித்து முன்பக்கமிருந்து யாரோ ஒரு பெண்மணி சத்தம் போட ஆரம்பித்தார்.அவர் வைத்திருந்த இருபதாயிரம் ரூபாயைக் காணவில்லையென்றும் வண்டியை நிறுத்தி உடனடியாக எல்லாரையும்
செக் பண்ணவேண்டும் என்றும் சத்தமாய் சொல்லிக்கொண்டிருந்தார்.பஸ்ஸில் இருக்கும் எல்லோரும் தங்களைச் சுற்றி இருப்பவர்களை எல்லாம் சந்தேகக்கண்ணோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.கோடு போட்ட கருப்பு பனியன், ஏற்றிக் கட்டப்பட்ட லுங்கி சகிதமாக திருட்டுக் களையுடன் யாராவது ஏறினார்களா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
வண்டியை மெதுவாக ஓரம் கட்டி அசோகா நகர் போலிஸ் ஸ்டேசன் முன்பு நிறுத்தி போலிசார் வந்து ஒவ்வொருவரையாய் சட்டை,பேண்ட் பாக்கட், உள்பாக்கெட் பின் பாக்கெட் எல்லாம் தடவி பேண்ட்டை அவிழ்க்காத குறையாய் சோதனை செய்தனர்.
என் முன்னால் நின்றிருந்த மஞ்சக் கலர் சட்டை ஆசாமி, நேரம் ஆகிக்கொண்டிருக்கிறதே என்பது போல் உச் கொட்டினார். “இருபதாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு பஸ்ஸில் வரலாமா?”
“எவனுக்கு இன்னிக்கி லாட்டரியோ?” எடுத்தவன் இந்நேரம் எங்கேயாவது எறங்கி ஓடியிருப்பான்” “அந்தப் பணத்துல மூணு மாசத்துக்கு குடும்பத்தை ஓட்டிரலாம்” பலவிதமான குரல்கள் (கன்னடத்தில் தான்)பேருந்துக்குள் ஒலித்துக் கொண்டிருக்கையில் திடீரென ஞாபகம் வந்து,கீழே வைத்திருக்கும் என் பையில் பணத்தை வைத்துவிட்டுப் போய்விடுவானோ என்று எனது பையை எடுத்து மடிமேல் இருக்கும் லேப்டாப் பை மீது வைத்துக் கொண்டேன்.
‘போலீஸ்காரர் ஒவ்வொருவராய் சோதனையிட்டு,என் முறை வந்ததும்,என்னை முழுவதும்
சோதனை போட்டு விட்டு,என் பைகளையெல்லாம் திறந்து காட்டச் சொல்லி பார்த்துவிட்டு முன்னால் நின்று கொண்டிருந்தவர்கள் பக்கம் சென்றார்.எனக்குத் தேவையில்லாமல் இதயம் பட படத்து மெதுவாக இயல்புக்கு வந்தது.(அன்று அதிர்ஷ்டவசமாக என்னிடம்
இரண்டாயிரத்துக்கும் குறைவாகவே பணம் இருந்தது.)என் பக்கத்தில் அமர்ந்திருந்தகல்லூரி மாணவன் மூன்றாவதாக யாரிடமோ,தன் செல்ஃபோனில் பஸ்ஸில் நடந்த திருட்டை லைவ் ரிலே செய்து கொண்டிருந்தார்.எனக்காகக் காத்துக் கொண்டிருந்த என் நண்பன் ஜெயராமன் பொறுமையிழந்து ஃபோன் செய்தான்.
“டாக்டர்? (என் எம்.பி.ஏ. நண்பர்கள் அப்படித்தான் என்னை அழைப்பார்கள்)என்ன ஆச்சு? வர்றீங்களா? இல்லையா?”
“வந்துக்கிட்டே இருக்கேன் ஜெயராமன், ஆனா, ஒரு சிக்கல் ஆகிப்போச்சு.”
“என்னது? வழக்கம்போல பஸ் மாறி ஏறிட்டீங்களா?”
“இல்ல. இந்த வாட்டி புது மாதிரிப் பிரச்னை.இருபதாயிரம் ரூவாய ஆட்டயப் போட்டாய்ங்க, நான் வந்த பஸ்சில.”
“அய்யய்யோ! இருபதாயிரம் ரூவாயா? யாரோடது?”
“ஒரு அம்மாவோடது.”
அப்புறம் என்ன ஆயிற்று என்று அவனை மாதிரியே நீங்களும் கேட்பது புரிகிறது.சில வினாடிகளில் எனக்கு முன்னால் ஒரு பரபரப்பு ஏற்பட்டு”பிடிச்சாச்சு, மாட்டிக்கிட்டான்” என்று குரல்கள் கேட்டன.செக் பண்ணின போலிசார் எனக்கு முன்னால் நின்றிருந்த அந்த மஞ்சச் சட்டை ஆசாமியின் காலரைக் கொத்தாகப் பிடித்து போலிஸ் ஸ்டேசனுக்குள் இழுத்துக் கொண்டு போனார்கள்.இரண்டொரு நிமிடங்களில் போலிஸ் ஸ்டேசனுக்குள் இருந்து வந்த ஒரு போலிஸ் இன்னும் பஸ்ல வேற யார் பையிலயாவது பணம் கிடக்குதான்னு பாருங்க என்றார்.நிறையப் பேர் பஸ்ஸிற்குள் கலவரத்துடன், கொஞ்சம் நப்பாசையுடன் அவரவர்
பைகளைத் திறந்து பார்த்தனர்.என்னருகில் நின்று கொண்டு இருந்த இன்னொருவர், அதற்குள் விஷயத்தை சேகரித்து, “மொத்தம் மூணு பேரு வந்திருக்காங்க, இந்த அம்மாவ, பேங்க்குல இருந்து ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்காங்க.முன்னால இருந்த ரெண்டு பேரு பணத்தை அந்த அம்மா பேக்குல இருந்து எடுத்து, இவன்கிட்ட பாஸ் பண்ணிட்டாங்க.செக்கிங் பண்ணினதும் அவங்க மெதுவா கீழ இறங்கி நழுவிட்டாங்க. பணம் வச்சிட்டு இருந்த இவன் மாட்டிக்கிட்டான்.நமக்கு முன்னாலதான் நின்னுட்டு இருந்தான் சார், பாக்குறதுக்கு உங்களை மாதிரியே இருந்தான் சார்! நீங்க பாத்தீங்களா? நல்லவேளை! அந்த அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிச்சதோ?உழைச்சு சம்பாதிச்ச காசு திரும்பக் கெடச்சுருச்சு”என்றார் மூச்சு விடாமல். பெம்மல் கேட் வந்ததும் கீழே இறங்கி, ஒரு இரண்டு நிமிடத்திற்குள் ஜெயராமன் வந்து என்னை பைக்கில் ஏற்றிக் கொண்டு சாய்த்த கழுத்துடன் செல்ஃபோனில் பேசிக்கொண்டே ஓட்டினான்.ஜோஸப் வீட்டில் நண்பர்களுடன் டின்னர் சாப்பிடுகையில் ஜெயராமன் “டாக்டர அசோகா நகர் போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து மீட்டுக்கிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு.” என்றான்

Did you like this? Share it:

3 comments

 1. // டின்னர் சாப்பிடுகையில் ஜெயராமன் “டாக்டர அசோகா நகர் போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து மீட்டுக்கிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு.” என்றான்//

  நன்பர்கள் கூடவா உங்கள அப்படி நெனைக்குறாங்க??? 🙂

 2. //கோடு போட்ட கருப்பு பனியன், ஏற்றிக் கட்டப்பட்ட லுங்கி சகிதமாக திருட்டுக் களையுடன் யாராவது ஏறினார்களா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.//

  இப்படி டிரஸ் செய்து இருப்பவர்கள் திருடர்கள் என்று எல்லோரும் நினைத்துவிட்டால்
  லுங்கி யார் கட்டுவார்கள் ?
  “‘அப்படியா ! திருடன் என்று சொன்னா கோடு போட்ட‌
  கருப்பு பனியனா ? ‘
  அப்ப, ராஜா, மந்திரி, சேவகன், சிப்பாய், டாக்டர், வக்கீல் எல்லாம் எந்தக் கலரில்
  பனியன் போடுவார்கள் ?

  சுவாரசியமாக வர்ணித்திருக்கிறீர்கள். அவசரமாக போகும்போது நடுவில் இப்படி
  ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை என்ன என்று சொல்வது ? பாவம் நீங்கள்.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.
  http://movieraghas.blogspot.com
  http://arthamullaValaipathivugal.blogspot.com

 3. Dr…first time i have seen your blog spot….its very nice creativity (!!!!!)…pesamay seirala thiraikadhai vasanam ezhludha (mannikkavum)….chennai vandurunga!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *