சென்னைப் பெருமழை- துயரங்களூடே பீறிடும் மனிதம்

ஹலோ,
ஹலோ வணக்கம், சொல்லுங்க

Chennai Flood Relief

நான் திருநெவேலீல இருந்து பேசறேன் என்று தொடங்கிய அந்தப் பெண்மணியின் குரல் அடுத்த வரியைச் சொல்வதற்குள் கம்மத் தொடங்கி விட்டது. “மூணுநாளாச்சுய்யா முடிச்சூர்ல இருக்கிற எம் மகனப் பத்தி எந்தத் தகவலும் வல்ல” என்று சொல்லி முடிப்பதற்குள் கட்டுடைந்து அழுதே விட்டார்.

மனதைப் பிசைந்த அந்தத் தாயின் குரலுக்கு பதில் சொல்வதற்குள்ளாகவே என் கண்களில் இருந்து வந்தக் கண்ணீரை அடக்கி, என் நடுக்கத்தைக் குரலில் காட்டாமல் எச்சில் கூட்டி முழுங்கி , “மூணு நாளா மெட்ராஸ் பூராக் கரண்ட் இல்ல, மொபைல் சிக்னலும் எங்கயும் இல்ல, அதான் மொபைல்ல சார்ஜ் இல்லாம உங்ககிட்ட பேச முடியல. என்றவாறே என் மானிட்டரில் இருந்த கூகுள் டாக்ஸில் முடிச்சூர் என்று தேடி, அதிலிருந்த ஒரு வாலண்டியரின் நம்பரை அவரிடம் சொல்லி மேல்விபரங்களை இவரிடம் கேளுங்கள் என்றேன்.

ஃபோன் போகலேன்னா கொஞ்ச நேரம் கழிச்சு ட்ரைப் பண்ணுங்க, கடந்த நாப்பத்தெட்டு மணீநேரமா சென்னைல மழை இல்ல, நிக்குற தண்ணியும் வடிய ஆரம்பிச்சுட்டுது அதனால நீங்க பயப்பட வேணாம்மா, பாதுகாப்பான எடத்துக்குப் போய் இருப்பாங்க என்று தைரியம் சொல்லி கண்களைத் துடைத்து முடிப்பதற்குள் லைனில் வெயிட்டிங்கில் அடுத்தடுத்த கால்கள்…

வாட்சப்பில் வந்த குவிந்திருந்த் 3500க்கும் மேலான மெசேஜ்கள்..

நான் மட்டுமல்ல, என்னைப் போல இருபது வாலண்டியர்ஸ்க்கு மேல்.பெங்களூர்-பன்னர்கட்டா ரோடில் உள்ள ஜலபவனில் NDRF கால்செண்டரில், சென்னை வெள்ளப்பேரிடர் தகவல் எண்களுக்கு வரும் தொலைபேசி, வாட்சப் அழைப்புகளை அட்டெண்ட் செய்து கொண்டிருந்தோம்.

பிரான்ஸ், லண்டன், மத்திய கிழக்கு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் இந்தியாவின் பிற மாநிலங்கள், சென்னை மற்றும் தமிழகத்தின் எல்லா பகுதிகளில் இருந்தும் கடல் அலை போல விடாது வந்தவண்ணம் இருக்கும் கவலையையும் கண்ணீரையும் சுமந்து வரும் அழைப்புகள்…

க்ரவுட் சோர்ஸ் மூலம் பெறப்படும் அப்டேட்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் இப்படி எல்லாவற்றில் இருந்தும் பெறப்படும் தகவல்கள் அனைத்தும் கூகுள் டாக் ஸ்ப்ரட்ஷீட்டில் ஏற்றப்பட்டு, டெலக்ராம் ஆப் மூலம் பரிமாறப் பட்டு மீட்புப் பணியில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை இந்தச் செய்திகள் ஒரே நொடியில் சென்றடைகின்றன.

12356941_1004626349596238_5049398731803072723_o

சென்னையில் பகுதி வாரியாக தேதி வாரியாக யார் யார் தன்னார்வலராக மீட்புப் பணி செய்ய முன்வந்துள்ளனர், அவர் எந்த தேதியில் எந்த நேரத்தில் ஃப்ரி, உதவுவதற்கு அவரிடம் என்ன உள்ளது- மோட்டார் பைக், கார், வேன், இன்னபிற…

பொருளுதவி செய்பவர்கள் யார் யார்- என்னென்ன பொருள்கள்-உணவுப் பொட்டலங்களா, மருந்துகளா, சானிடரி விஷயங்களா, உடைகளா இப்படி ரகவாரியாகப் பிரித்து…

கர்ப்பிணிப் பெண்கள், இதயநோயாளிகள், பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்ப முடியாமல் நீர் சூழ்ந்த மருத்துவமனையில் மாட்டிக் கொண்டவர்கள்

கடந்த மூன்று நாள்களாகத் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பவர்கள் விபரம்- முழு முகவரி-தொலைபேசி எண்களுடன் மற்றும் அவர்களைப் பற்றிய தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டியவரது தொடர்பு எண்களுடன்…

தன்னார்வ மருத்துவர்களின் லிஸ்ட்- இடம்-தொலைபேசி, முகவரியுடன்..

இப்படி நிமிடத்திற்கொரு முறை அப்டேட் செய்யப் பட்டு
இண்டர்நெட் மற்றும் டெக்னாலஜியின் உதவியுடன்,உதவி வேண்டுவோரையும், உதவி கொடுப்போரையும் இணைக்கும் பாலமாய் மூன்று ஷிஃப்ட்களில் இருபத்து நான்கு மணிநேரமும் தொடர்ந்து வெள்ள இடர்ப்பாடுகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தோம்.

ஒரு நாளைக்கு ஆறாயிரத்திற்கும் மேல் வரும் ஃபோன்கால்கள்.. நான் மட்டுமே வெள்ளி மற்றும் சனி இரண்டு நாள்களில் சுமார் அறுநூறு கால்களை அட்டெண்ட் செய்தேன்.

”சென்னை வெள்ளப் பேரிடர் உதவிக்குத் தகவல் தொழில்நுட்பம் மூலம் உதவ தமிழ் தெரிந்த தன்னார்வலர்கள் தேவை” என்று ஒயிட்ஃபீல்ட் ரைசிங் ஃபேஸ்புக் குருப்பில் வந்த செய்தியைப் பார்த்து நான் அங்கே சென்றிருந்தேன்.

ஊதாக் கலர் யூனிஃபார்மில் கன்னடப் பெண்கள் தமிழில் வரும் ஆயிரக்கணக்கான அழைப்புகளை திண்டாட்டத்துடன் கையாண்டு கொண்டிருந்தார்கள். (ஆதம்பாக்கத்திற்கு Adumbakkam என எழுதினர், திருவொற்றியூர் ஊரை என் பக்கத்தில் இருந்த பெண் ஃபோனில் பேசியவரிடம் மூன்றாவது முறையாகக் கேட்கவும் என் ஃபோனில் பேசியவரிடம் ஒருநிமிடம் பளீஸ் என்று சொல்லி விட்டு, அவருக்கு ஸ்பெல்லிங் சொன்னேன்)

வெள்ளியன்று நான்கைந்து தமிழ் மக்களே இருந்த நிலையில் சனிக்கிழமை போகையில் இருபதுக்கும் மேல் தமிழ் வாலண்டியர்ஸ்- பெங்களூரின் பல பகுதிகளில் இருந்தும் வந்த வண்ணம் இருந்தனர்.

அடுத்தடுத்த மேலும் வந்த பத்துப் பதினைந்து பேர்களுக்கு சிஸ்டம் , ஃபோன் கனெக்‌ஷன் இல்லாததால் ரெஜிஸ்டரில் அவர்களது பெயர் மற்றும் நம்பரைக் குறித்துக் கொண்டு ஃபோன்செய்து பின் வரச்சொன்னார்கள்.

சனியன்று என் மனைவியையும், குழந்தையையும் அழைத்துச் சென்றிருந்தேன்.
நான் ஒரு சிஸ்டம், அவள் ஒரு சிஸ்டம் என்று மீட்புப் பணிகளில் ராமகாரியஅணிலாய் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள, ஸ்ரீவத்ஸன் அங்கு வந்திருந்த இன்னொரு பெண்ணின் குழந்தையுடம் விளையாடிக் கொண்டிருந்தான்.

உயிருக்குயிரானவர்களின் இருப்பைப் பற்றிய தகவல் தெரியாமல் பரிதவிக்கும் நூற்றுக்கணக்கான இதயங்கள் எங்களிடம் பரிதவிப்புடன் பேசினர்.

உதவி வேண்டும் என்றும் , உதவி தருகிறேன் என்றும் நூற்றுக் கணக்கில் தகவல் பகிர்வுகள்.

அடுத்தடுத்த தினங்களின் வானிலை, பெருமழை எச்சரிக்கைகள் இப்படி முக்கியமான தகவல்களையும் பரவலாகப் பகிர்ந்து கொடுத்தோம்.

ஓலா கேப் பிடித்துப் பத்தரை மணிக்கு வந்து படுக்கையில் ஸ்ரீவத்ஸனைத் தூங்க வைக்கையில் “அப்பா, நான் சென்னைக்குப் போறேன், ஐயாம் ஸ்ட்ராங், நான் எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவேன்” என்ற என் நான்கு வயதுக் குழந்தையை அணைக்கையில் என் கண்ணில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைக்கத் தோன்றவில்லை.

 

#ChennaiRainsHelp
#ChennaiFloodHelp
#NDRF
#BangaloreForChennai
#Volunteers
#ChennaiSOS
#CrowdSource
#Telegram
#CRRF
#ComeBackChennai
#Bengaluru

Did you like this? Share it:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *