விளம்பரம் செய்யும் பாக்டீரியாக்கள்

பிரச்னை: நாளொன்றுக்கு 3000 விளம்பரங்களைக் காண நேரிடும் ஒரு அமெரிக்கருக்கு எப்படி நம் விளம்பரத்தை  தனித்துவமாக,  “நச்” என்று கொடுப்பது?

தீர்வு: விளம்பரப் பலகையில் உயிருள்ள பாக்டீரியாக்களால் திரைப்படத்தின் பெயரை உருவாக்கி விளம்பரம் செய்வது

 

எப்படியாவது மக்களைக் கவர்ந்துவிட வேண்டும் என்று கற்பனா சக்தியை உபயோகித்து என்னென்னவோ க்ரியேட்டிவ்வாக விளம்பரங்களைத் தயாரிக்கின்றனர்.ஆனால் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும்படியாக ஒரு அவுட்டோர் விளம்பரம் இப்போது வந்துள்ளது.

விளம்பரப்பலகையில் பெயிண்டுக்கு பதிலாக உயிருள்ள, வளரும் பாக்டீரியாக்களைக் கொண்டே திரைப்படப் பெயரை உண்டாக்கி விளம்பரம் செய்வது.

கனடாவின் டொரண்டோவில், கன்டேஜியன் (Contagion)என்னும் திரைப்படத்திற்கு, புதிதாக எந்த வகையில் விளம்பரப் படுத்தலாம் என்று ரூம் போட்டு யோசித்தபோது வந்த ஐடியாதான் இது.

படத்தயாரிப்பாளர்களான வார்னர் பிரதர்ஸ் மற்றும் இந்தப் பட்த்தின் விளம்பர ஏஜென்சியான லோ (LOWE)உலகின் முண்ணனி மைக்ரோபயாலஜிஸ்டுகள் மற்றும், இம்யூனாலஜிஸ்டுகளுடன் கலந்து யோசித்து, அறிவியலையும், அட்வர்டைசிங்கயும் கலந்து ,ஒரு புது மாதிரியான, பாக்டீரியாக்களால் ஆன விளம்பரப் பலகையை செய்தனர்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி, இரண்டு பெரிய பெட்ரி டிஸ்களில் (நுண்ணுயிரிகளை வளர்க்கும் டப்பா) 35 வெவ்வேறு வகையான பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் சில ஒளிரும் குணம் கொண்ட பாக்டீரியாக்களைப் (பயப்படாதீர்கள்.. இவையெல்லாம் தீமை செய்யா பாக்டீரியாக்கள் தான்) விளம்பரப் பலகையில் வளர வைத்தனர்.இரவு முடிந்து மறுநாளே, தமக்குக் கிடைக்கப் போகும் நட்சத்திர அந்தஸ்தைப் பற்றித் தெரியாமலே அந்த பாக்டீரியாக்கள் வளரத் துவங்கி,  மெல்ல அந்தப் படத்தின் பெயரான கன்டேஜியன் என்கிற எழுத்து வடிவத்தைக் காண்பித்தன.

இதை உருவாக்கும் போது அவர்களுக்கு சிரமங்கள் இல்லாமல் இல்லை.கனடிய அரசின் சுகாதார சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ,யாருக்கும் எந்தத் தொற்றுவியாதியும் பரப்பாத பாக்டீரியாக்களைத் தேர்ந்தெடுத்தல்,இருக்கும் நூற்றுக்கணக்கான பாக்டீரிய வகைகளில் ஒழுங்காக வளர்ந்து பெயரைப் பார்வையாகத் தெரிவிக்கும் வண்ணம் தனித்தன்மையுடன்  வளரும் பாக்டீரியாக்களைத் தெரிவு செய்வது, கன்னாபின்னாவென்று வளரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை படத்தின் எழுத்துக்களில் மட்டும் வளருமாறு பார்த்துக் கொள்வது,செங்குத்தாக பாக்டீரியாக்களை வளர்ப்பது என்று எல்லா சோதனைகளையும் வெற்றிகரமாக சமாளித்து, அருமையாக இந்த விளம்பரப்பலகைகளை செய்துள்ளனர். ஆக்ஸ்ட்-31 ஆம் தேதி ரசிகப் பெருமக்கள் இந்த விளம்பரத்தைக் காண வரவேற்கப்பட்டனர்.முண்டியடித்துப் பார்க்க வரும் முதல் 50 பேருக்கு ஊக்கப் பரிசாக படம் பார்க்க இலவச பாஸ். .மற்றவர்களுக்கு படத்தின் கருத்தை நினைவுறுத்தும் மற்ற பரிசுகள் என்கிற தூண்டுதல்கள். இந்தப் புதுமாதிரியான விளம்பரத்திற்கும், அதனால் இந்தப் படத்துக்கும் ஏகமாய் விளம்பரம் கூடி படம் ஹவுஸ்புல்லாய் ஓடுகிறது.

தமது விற்பனைப் பொருள்களை காட்டுத்தீ போல விளம்பரம் செய்யும் முறைக்கு வைரல் மார்கெட்டிங் (Viral Marketing) என்று பெயர். மிக வேகமாகப் பரவி மூன்றே நாள்களில் மக்களைக் கொல்லும் இந்தப்படத்தில் வரும் வைரசைப் போல இந்த விளம்பரமும் அதிவேகமாகப் பரவுகிறது. விளம்பரத்தை வைத்த ஐந்தாவது நாளிலேயே அதை அகற்றி விட்டிருந்தாலும், கடந்து சென்ற எல்லோரையும் ஒரு கணம் அல்ல பல கணங்கள் சுண்டி இழுத்து, தம் பக்கம் கவனத்தைத் திருப்பிய இந்த விளம்பரங்கள் போட்டோக்களாக, வீடியோக்களாக,குறுந்தகவல்களாக, யூடியூப், ட்விட்டர்,ஃபேஸ்புக் மூலம் உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. வெளியிட்டமுதல் வாரத்திலேயே, யூடியூபில் மட்டும் இதை நாற்பதாயிரம் பேர்களுக்கு மேல் பார்வையிட்டுள்ளனர்.

கண்டேஜியன் பாக்டீரியா விளம்பரப் பலகை தயாரிப்பதையும், அதை, பாதசாரிகள் ஆச்சரியத்துடன் பார்ப்பதையும்  இங்கே வீடியோவில் காணலாம்.

இதே போன்ற, நீங்கள் கற்பனை செய்தும் பார்த்திராத  வித்தியாசமான விளம்பரங்களைஇங்கே கண்டு ரசிக்கலாம்.

 

மாத்தி யோசிச்சதுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி.

 

 
Did you like this? Share it:

One comment

  1. வைத்தியருங்கிறதுனால இந்த மாதிரி விஷயமெல்லாம் கண்ணில் படுகிறது.. எனக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது… நல்ல தகவல்.. ஆயிரம் சொல்லு..நம்ம கோபால் பல்பொடிக்கு இணையா இன்னிக்குவரை எந்தப் பொருளாவது பிரபலம் அடைஞ்சிருக்கா.. :-))

Leave a Reply

Your email address will not be published.