Archive for மலரும் நினைவுகள்

இந்தியாவின் பட்டினியைப் போக்கியவர்

M.S.Swaminathan
கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த அந்தச் சிறுவனுக்கு அவன் அப்பா தான் ஆதர்சம்.

அப்பா டாக்டர் எம்.கே.சாம்பசிவம், பிரசித்தி பெற்ற சர்ஜன்.மஹாத்மா காந்தியின் அடியொற்றி, வெள்ளையர்களை எதிர்த்து அந்நியத் துணிகளை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்; கடவுளுக்கும் ஹரிஜன மக்களுக்கும் இடையே இருந்த கோவில் கதவுகளை உடைத்து, அவர்களின் ஆலயப் பிரவேசத்திற்காகப் போராடியவர். கும்பகோணத்தில் நெடுங்காலமாகப் பீடித்திருந்த ஃபிலேரியாஸிஸ் என்னும் யானைக்கால் வியாதியை ஒழிக்கப் பெரும் முயற்சி எடுத்தவர்.

அப்பேர்ப்பட்ட அப்பாவை தனது பதினோராவது வயதில் இழந்த இந்தப் பையன்,பள்ளிப்படிப்பு முடிந்ததும், திருவனந்தபுரம் சென்று கல்லூரியில் விலங்கியல் படித்தார்.

அப்போது வங்காளத்தில் வந்த மிகக் கொடிய பஞ்சத்தால் முப்பது லட்சம் மக்கள் உண்ண உணவின்றிப் பட்டினியால் இறந்தனர்.இதைக் கேள்விப்பட்ட அவர் மனம் துடித்தது. மக்கள் பட்டினியால் மாண்டு போகாமலிருக்க நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டுக் கொண்டார்.

அரிசிப் பெருக்கத்தைப் பற்றிய மேற்படிப்பைப் படித்து உணவு உற்பத்தியைப் பெருக்கி, இந்த நாட்டில் பட்டினியால் மக்கள் மடியும் மாதுயரைத் தடுத்தே ஆக வேண்டும் என்று அப்போதே சபதமெடுத்தார்.

பிஎஸ்சி விலங்கியல் படித்து முடித்த பின் மீண்டும் பிஎஸ்சி அக்ரிகல்ச்சர் படித்தார். தாவர மரபணுத் துறையில் எம்.எஸ் சி..தேர்ச்சி. பின்பு, யு.பி.எஸ்.சி தேர்வெழுதி, ஐபிஎஸ் ஆகத் தேர்வு. நெதர்லாந்தில் பிஎச்டி. விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தில் போஸ்ட் டாக்டோரல் பட்டம். அங்கேயே நல்ல வேலை கிடைத்தும் மனமெல்லாம் தாய் நாட்டின் பஞ்சத்தைப் போக்க வேண்டுமென்கிற எண்ணத்தால், 1954 இல் இந்தியா திரும்பினார்.

அதற்கப்புறம் அவர் செய்த பல்வேறு ஆராய்ச்சிகளின் விளைவாக இந்தியாவில் பசுமைப் புரட்சி மலர்ந்தது.இந்திய உணவு உற்பத்தி அபாரமாக வளர்ச்சியடைந்தது.

பயிர்களின் மகசூலைப் பெருக்குவது பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள்,எட்டு முக்கியப் புத்தகங்கள், இவர் எழுதியவை

பதினான்கு உலகளாவிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்பட இருபத்து நான்கு தேசிய அளவிலான விருதுகள், உலகம் முழுவதிலிருந்தும் கிடைத்த ஐம்பதுக்கும் மேற்பட்ட டாக்டரேட் பட்டங்கள் என்று, விக்கி இன்னொரு அனெக்ஸர் போட வேண்டிய அளவு சிறப்புகள்…

இவரது ஆராய்ச்சியின் பயன்களாகத் தான் இன்றைக்கு இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்கிறது.
டைம்ஸ் பத்திரிக்கை, இருபதாம் நூற்றாண்டின் ஆசியாவின் டாப் இருபது பேர்களில் ஒன்றாக இவரைத் தேர்ந்தெடுத்தது. இந்த நாட்டின் மக்கள் மட்டுமல்ல, இங்கு விளையும் ஒவ்வொரு நெல்மணியும் வாயிருந்தால் அவரை இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என மனம் பூரிக்க வாழ்த்தும்.

அப்பேர்ப்பட்ட விஞ்ஞானியை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

காந்திகிராமப் பல்கலைக் கழகத்தில் அப்போது நான் டிப்ளமா இன் அக்ரிகல்ச்சர் பயின்று கொண்டிருந்தேன்.
கல்லூரிக்கு வந்திருந்து, ஆடிட்டோரியத்தில் அவர் உரையாற்றினார். பின்னர் எங்கள் துறைக்கு வந்து சில கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவருக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கையில், சட்டென நினைவுக்கு வந்து ஹாஸ்டலுக்கு ஓடிச் சென்று என் பெட்டிக்குள் இருந்த ஒரு சிறிய பொருளை எடுத்துக் கொண்டேன்.
கல்லூரிச் சுற்றுலாவில் மார்த்தாண்டத்திற்குச் சென்றிருந்த போது வாங்கியது அது. அடிக்கல் நாட்டு விழா முடிந்ததும், அவரை மிக அருகிலே சென்று பார்க்க, பேச சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டேன்.

உங்களுக்கு நான் ஒன்று கொடுப்பேன். மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள்.

முகத்தில் திகைப்புடன், என்ன? என்றார்.

என் சட்டைப் பைக்குள் இருந்த அந்த பேட்ஜை எடுத்து அவரிடம் கொடுத்தேன். இந்தியாவின் பட்டினியைத் தீர்த்த மாமனிதருக்கு இந்த ஏழை மாணவனின் பரிசு.

கையில் வாங்கிப் பார்த்த அவர், முகத்தில் மிகுந்த மலர்ச்சியுடன் அதை வாய் விட்டுப் படித்தார் Plant or Perish.

”நான் இத்தனை காலம் சொல்லிக் கொண்டிருப்பதை, செய்து கொண்டிருப்பதை இரண்டே வார்த்தைகளில் இது சொல்கிறது. இதைப் பெற்றுக் கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி,மிக்க நன்றி” என்றார்.

தயாராக வைத்திருந்த ஆட்டோகிராஃப் நோட்டை நீட்டினேன். மிகுந்த நம்பிக்கைகளுடன் கண்களில் பிரகாசமாய், எம்.எஸ் சுவாமிநாதன் என்று கையொப்பமிட்டுக் கொடுத்தார்.

மார்த்தாண்டத்தில் வாங்கிய, ஒன்று போலிருந்த அந்த இரண்டு பேட்ஜ்களில் என்னிடமிருந்த இன்னொன்று தொலைந்து விட்டது. ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது- நான் கொடுத்த பேட்ஜை இன்னமும் அவர் பத்திரமாக வைத்திருப்பாரென்று.

சூரிய ஒளி கடிகாரம் :)

நான் படித்த ஏழாம் வகுப்பறை

நான் படித்த ஏழாம் வகுப்பறை

எலெக்ட்ரானிக் வாட்சுகள் இருபதுக்கும் நாற்பதுக்கும் சீரழியத் துவங்கின காலம் அது. இருந்தாலும்,எங்கள் வகுப்பில் ஒருவரும் வாட்ச் கட்டவில்லைஆனால் ஒவ்வொரு பீரியட் முடிவதும், வீட்டுக்கு பெல் அடிக்கும் நேரம் நெருங்கி விட்டதும் எங்களுக்கு மிகச் சரியாகத் தெரியும்.

வகுப்பின் ஓடுகளில் பதிக்கப் பட்ட கண்ணாடி வழியாகவோ அல்லது ஓடுகளில் இருக்கும் ஓட்டைகள் வழியாகவோ வெயில் வட்டமாகத் தரையிலோ, சுவற்றிலோ விழும். நேரம் செல்லச் செல்ல அந்த வெயில் வட்டமும் நகர்ந்து கொண்டே இருக்கும். சரியாகப் பனிரெண்டு நாற்பதுக்கு மதிய உணவுக்கு மணி அடிக்கையில், அந்த வெயில் வட்டம் எங்கே இருக்கிறதோ, அங்கே இங்க் பேனாவைத் திறந்து இங்க்கைத் தெளிப்போம்.

மறுநாள் மதியம் வெயில் வட்டம் அந்த இங்க் பகுதியை நெருங்கி வருகையில் இப்ப பெல் அடிக்கப் போகுது என்று ரகசியமாகப் பிரகடனப் படுத்தி, அதே மாதிரி பெல் அடித்ததும் குஷியாகக் கிளம்புவோம்.

ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்கு மாறியதும் முதலில் செய்தது இந்த சூரிய ஒளி இங்க் கடிகாரத்தை ஃபிக்ஸ் செய்ததுதான்.

Moorthy Kalluppatti கமெண்ட்

Moorthy Kalluppatti கமெண்ட்

https://www.facebook.com/photo.php?fbid=539119842813560&set=a.377515922307287.86881.100001466467084&type=1

காப்பிப் பொடியும் காணாமல் போன இண்டலக்சுவலும் :)

”காவேரி மஹாலுக்கு எதிர்த்தாப்புல இருக்குற வெண்ணைக் கடையில கால்கிலோ வெண்ணை வாங்கிக்க.”

”சரி.”

”கிருஷ்ணா காஃபில கால் கிலோ ஸ்பெஷல் பி.பி காஃபிப்பொடி. சிக்கரி தனியா வாங்கிக்க.”

”சரி.”

”சேர்மன் ஸ்டோர்ல அப்பளக் கட்டு ஒண்ணு”.

”ம்.”

”இந்தா பணம். இருவது ரூபா மதியச் சாப்பாட்டுக்கு. உனக்குப் புஸ்தகத்துக்கு முப்பது ரூவா. பணம் பத்திரம்.”

துள்ளலுடன் ஜெயவிலாஸ் பஸ் பிடித்து மதுரையில் இறங்கும் போது, மதுரையில் இருக்கும் அத்தனை பேரை விடவும் நான் தான் சந்தோஷமாக இருப்பேன்.பள்ளியில் படிக்கையில் இது போன்ற மதுரைப் பயணங்கள் ஒரு மாதத்திற்கு ஒருமுறை வருவதே குதிரைக் கொம்பு.

முதலில் நான் போவது சர்வோதய இலக்கியப் பண்ணைக்கு. ஒரு முக்கால் மணி நேரம் புத்தகங்களைப் பார்த்து விட்டு, ஏதேனும் நல்ல புத்தகங்கள் இருந்தால் அதை மனதில் வைத்துக் கொண்டு, மல்லிகை புக் செண்டர், பாரதி புக் செண்டர், மதர்லேண்ட் புக் செண்டர், எல்லாம் பார்த்து விட்டு, டவுண்ஹால் ரோடு பக்கம் நடந்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் செல்வேன். அங்கே ஒரு அரை மணி நேரம். வயிற்றுப் பசி கிள்ள, நேராக வெண்ணெய்க் கடைக்கு வருவேன்.

”அண்ணே, மோர் குடுங்க” என்று ஒரு முழ உயரத்திற்கு இருக்கும் கண்ணாடி கிளாஸ் நிறைய மோர் குடிப்பேன்.

”இன்னொரு மோர்.”

அதுவும் உள்ளே போக நான்கே ரூபாயில் வயிறு நிறைந்து விடும்.
மீண்டும் புத்தகக் கடை. இந்த நான்கு கடைகளிலும் நடத்திய திக்விஜயத்தில் இன்றைக்கு எந்தெந்த புத்தகங்களை வாங்க வேண்டும் என்று ஒரு தெளிவு கிடைத்து விடும்.

அவற்றை எல்லாம் வாங்கி விடுவேன்.என் ஒரு மாத சேமிப்பு, அம்மா புத்தகம் வாங்கக் கொடுத்தது, மதியச் சாப்பாட்டுக்குக் கொடுத்தது, எல்லாம் சேர்த்து ஒரு நூறு ரூபாய்க்கு, நான்கைந்து புத்தகங்கள் புது மணத்துடன் என் கையில்.

தெற்குக் கோபுரம் வழியாக மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந்து விபூதிப் பிள்ளையாரில் தொடங்கி, அம்மன், சுவாமி, முக்குறுணி விநாயகர் என்று எல்லோரையும் தரிசித்து விட்டு, பொற்றாமரைக் குளத்தில் நான்கு கோபுரங்களையும் பார்க்க வசமான இடமாய்ப் பார்த்து உட்கார்ந்து விட்டு, வெளியே வருகையில் மணி ஐந்தாகி இருக்கும்.

லண்டன் புக் செண்டருக்கு எதிரில் இருக்கும் பிளாட்பாரப் பழைய புத்தகக்கடையில் அரை மணி நேரம் துழாவி விட்டு, பத்து ரூபாய்க்கு இரண்டு புத்தகங்கள் வாங்குவேன்.

காஃபிப் பொடி, வெண்ணெய், அப்பளமெல்லாம் வாங்கி விட்டு, ஜம் ஜம்மில் ஒரு மசாலா டீ குடித்து விட்டு, ஜெயவிலாஸில் படிக்கட்டுக்குப் பிந்தைய சீட்டில் உட்கார்ந்து, வாங்கிய புத்தகங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துப் படிக்கத் துவங்கி, கல்லுப்பட்டி வந்து சேருகையில், தமிழ்நாட்டில் நாமும் ஒரு இண்டலெக்சுவலோ என்கிற தடுமாற்றம் ஒன்று வரும்.

“சிக்கரி வாங்க ஏண்டா மறந்த?” என்கிற பாட்டியின் வசவில் அந்தத் தடுமாற்றம் கலையும். 🙂

ஃபேஸ்புக்கில் வெளியான லிங்க்:https://www.facebook.com/Rprakash.in/posts/540354456023432