Archive for கட்டுரை

சென்னைப் பெருமழை- துயரங்களூடே பீறிடும் மனிதம்

ஹலோ,
ஹலோ வணக்கம், சொல்லுங்க

Chennai Flood Relief

நான் திருநெவேலீல இருந்து பேசறேன் என்று தொடங்கிய அந்தப் பெண்மணியின் குரல் அடுத்த வரியைச் சொல்வதற்குள் கம்மத் தொடங்கி விட்டது. “மூணுநாளாச்சுய்யா முடிச்சூர்ல இருக்கிற எம் மகனப் பத்தி எந்தத் தகவலும் வல்ல” என்று சொல்லி முடிப்பதற்குள் கட்டுடைந்து அழுதே விட்டார்.

மனதைப் பிசைந்த அந்தத் தாயின் குரலுக்கு பதில் சொல்வதற்குள்ளாகவே என் கண்களில் இருந்து வந்தக் கண்ணீரை அடக்கி, என் நடுக்கத்தைக் குரலில் காட்டாமல் எச்சில் கூட்டி முழுங்கி , “மூணு நாளா மெட்ராஸ் பூராக் கரண்ட் இல்ல, மொபைல் சிக்னலும் எங்கயும் இல்ல, அதான் மொபைல்ல சார்ஜ் இல்லாம உங்ககிட்ட பேச முடியல. என்றவாறே என் மானிட்டரில் இருந்த கூகுள் டாக்ஸில் முடிச்சூர் என்று தேடி, அதிலிருந்த ஒரு வாலண்டியரின் நம்பரை அவரிடம் சொல்லி மேல்விபரங்களை இவரிடம் கேளுங்கள் என்றேன்.

ஃபோன் போகலேன்னா கொஞ்ச நேரம் கழிச்சு ட்ரைப் பண்ணுங்க, கடந்த நாப்பத்தெட்டு மணீநேரமா சென்னைல மழை இல்ல, நிக்குற தண்ணியும் வடிய ஆரம்பிச்சுட்டுது அதனால நீங்க பயப்பட வேணாம்மா, பாதுகாப்பான எடத்துக்குப் போய் இருப்பாங்க என்று தைரியம் சொல்லி கண்களைத் துடைத்து முடிப்பதற்குள் லைனில் வெயிட்டிங்கில் அடுத்தடுத்த கால்கள்…

வாட்சப்பில் வந்த குவிந்திருந்த் 3500க்கும் மேலான மெசேஜ்கள்..

நான் மட்டுமல்ல, என்னைப் போல இருபது வாலண்டியர்ஸ்க்கு மேல்.பெங்களூர்-பன்னர்கட்டா ரோடில் உள்ள ஜலபவனில் NDRF கால்செண்டரில், சென்னை வெள்ளப்பேரிடர் தகவல் எண்களுக்கு வரும் தொலைபேசி, வாட்சப் அழைப்புகளை அட்டெண்ட் செய்து கொண்டிருந்தோம்.

பிரான்ஸ், லண்டன், மத்திய கிழக்கு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் இந்தியாவின் பிற மாநிலங்கள், சென்னை மற்றும் தமிழகத்தின் எல்லா பகுதிகளில் இருந்தும் கடல் அலை போல விடாது வந்தவண்ணம் இருக்கும் கவலையையும் கண்ணீரையும் சுமந்து வரும் அழைப்புகள்…

க்ரவுட் சோர்ஸ் மூலம் பெறப்படும் அப்டேட்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் இப்படி எல்லாவற்றில் இருந்தும் பெறப்படும் தகவல்கள் அனைத்தும் கூகுள் டாக் ஸ்ப்ரட்ஷீட்டில் ஏற்றப்பட்டு, டெலக்ராம் ஆப் மூலம் பரிமாறப் பட்டு மீட்புப் பணியில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை இந்தச் செய்திகள் ஒரே நொடியில் சென்றடைகின்றன.

12356941_1004626349596238_5049398731803072723_o

சென்னையில் பகுதி வாரியாக தேதி வாரியாக யார் யார் தன்னார்வலராக மீட்புப் பணி செய்ய முன்வந்துள்ளனர், அவர் எந்த தேதியில் எந்த நேரத்தில் ஃப்ரி, உதவுவதற்கு அவரிடம் என்ன உள்ளது- மோட்டார் பைக், கார், வேன், இன்னபிற…

பொருளுதவி செய்பவர்கள் யார் யார்- என்னென்ன பொருள்கள்-உணவுப் பொட்டலங்களா, மருந்துகளா, சானிடரி விஷயங்களா, உடைகளா இப்படி ரகவாரியாகப் பிரித்து…

கர்ப்பிணிப் பெண்கள், இதயநோயாளிகள், பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்ப முடியாமல் நீர் சூழ்ந்த மருத்துவமனையில் மாட்டிக் கொண்டவர்கள்

கடந்த மூன்று நாள்களாகத் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பவர்கள் விபரம்- முழு முகவரி-தொலைபேசி எண்களுடன் மற்றும் அவர்களைப் பற்றிய தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டியவரது தொடர்பு எண்களுடன்…

தன்னார்வ மருத்துவர்களின் லிஸ்ட்- இடம்-தொலைபேசி, முகவரியுடன்..

இப்படி நிமிடத்திற்கொரு முறை அப்டேட் செய்யப் பட்டு
இண்டர்நெட் மற்றும் டெக்னாலஜியின் உதவியுடன்,உதவி வேண்டுவோரையும், உதவி கொடுப்போரையும் இணைக்கும் பாலமாய் மூன்று ஷிஃப்ட்களில் இருபத்து நான்கு மணிநேரமும் தொடர்ந்து வெள்ள இடர்ப்பாடுகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தோம்.

ஒரு நாளைக்கு ஆறாயிரத்திற்கும் மேல் வரும் ஃபோன்கால்கள்.. நான் மட்டுமே வெள்ளி மற்றும் சனி இரண்டு நாள்களில் சுமார் அறுநூறு கால்களை அட்டெண்ட் செய்தேன்.

”சென்னை வெள்ளப் பேரிடர் உதவிக்குத் தகவல் தொழில்நுட்பம் மூலம் உதவ தமிழ் தெரிந்த தன்னார்வலர்கள் தேவை” என்று ஒயிட்ஃபீல்ட் ரைசிங் ஃபேஸ்புக் குருப்பில் வந்த செய்தியைப் பார்த்து நான் அங்கே சென்றிருந்தேன்.

ஊதாக் கலர் யூனிஃபார்மில் கன்னடப் பெண்கள் தமிழில் வரும் ஆயிரக்கணக்கான அழைப்புகளை திண்டாட்டத்துடன் கையாண்டு கொண்டிருந்தார்கள். (ஆதம்பாக்கத்திற்கு Adumbakkam என எழுதினர், திருவொற்றியூர் ஊரை என் பக்கத்தில் இருந்த பெண் ஃபோனில் பேசியவரிடம் மூன்றாவது முறையாகக் கேட்கவும் என் ஃபோனில் பேசியவரிடம் ஒருநிமிடம் பளீஸ் என்று சொல்லி விட்டு, அவருக்கு ஸ்பெல்லிங் சொன்னேன்)

வெள்ளியன்று நான்கைந்து தமிழ் மக்களே இருந்த நிலையில் சனிக்கிழமை போகையில் இருபதுக்கும் மேல் தமிழ் வாலண்டியர்ஸ்- பெங்களூரின் பல பகுதிகளில் இருந்தும் வந்த வண்ணம் இருந்தனர்.

அடுத்தடுத்த மேலும் வந்த பத்துப் பதினைந்து பேர்களுக்கு சிஸ்டம் , ஃபோன் கனெக்‌ஷன் இல்லாததால் ரெஜிஸ்டரில் அவர்களது பெயர் மற்றும் நம்பரைக் குறித்துக் கொண்டு ஃபோன்செய்து பின் வரச்சொன்னார்கள்.

சனியன்று என் மனைவியையும், குழந்தையையும் அழைத்துச் சென்றிருந்தேன்.
நான் ஒரு சிஸ்டம், அவள் ஒரு சிஸ்டம் என்று மீட்புப் பணிகளில் ராமகாரியஅணிலாய் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள, ஸ்ரீவத்ஸன் அங்கு வந்திருந்த இன்னொரு பெண்ணின் குழந்தையுடம் விளையாடிக் கொண்டிருந்தான்.

உயிருக்குயிரானவர்களின் இருப்பைப் பற்றிய தகவல் தெரியாமல் பரிதவிக்கும் நூற்றுக்கணக்கான இதயங்கள் எங்களிடம் பரிதவிப்புடன் பேசினர்.

உதவி வேண்டும் என்றும் , உதவி தருகிறேன் என்றும் நூற்றுக் கணக்கில் தகவல் பகிர்வுகள்.

அடுத்தடுத்த தினங்களின் வானிலை, பெருமழை எச்சரிக்கைகள் இப்படி முக்கியமான தகவல்களையும் பரவலாகப் பகிர்ந்து கொடுத்தோம்.

ஓலா கேப் பிடித்துப் பத்தரை மணிக்கு வந்து படுக்கையில் ஸ்ரீவத்ஸனைத் தூங்க வைக்கையில் “அப்பா, நான் சென்னைக்குப் போறேன், ஐயாம் ஸ்ட்ராங், நான் எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவேன்” என்ற என் நான்கு வயதுக் குழந்தையை அணைக்கையில் என் கண்ணில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைக்கத் தோன்றவில்லை.

 

#ChennaiRainsHelp
#ChennaiFloodHelp
#NDRF
#BangaloreForChennai
#Volunteers
#ChennaiSOS
#CrowdSource
#Telegram
#CRRF
#ComeBackChennai
#Bengaluru

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை – 3

Super Kidsஇந்தத் தொடருக்குப் பெருவாரியான ஆதரவை நல்கி வரும் இட்லிவடை வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

குழந்தை வளர வளர, நம் முயற்சி எதுவுமில்லாமலேயே அதன் மூளையும் தன்னிச்சையாக வளர்ந்து விடுவதில்லை.மாறாக, அந்தக் குழந்தையின் மூளை பெறும் அனுபவங்களையும், பயிற்சியையும் பொறுத்தே அது சிறந்ததாக வளர்கிறது.குழந்தையின் மூளையை ஒரு பிரம்மாண்டமான ஸ்பாஞ்சாக உருவகப் படுத்திக் கொள்ளவும்.மெய்,வாய்,கண்,மூக்கு, செவி என்கிற ஐந்து புலன்களால் நிகழும் அத்தனை அனுபவங்களையும் அந்த மாபெரும் ஸ்பாஞ்ச் உறிஞ்சிக் கொள்கிறது. இத்தகைய அனுபவங்களால், எந்த அளவுக்கு மூளையின் இணைப்புத் தொடர்புகள் (Synapses)தூண்டப் படுகின்றனவோ, அந்த அளவுக்கு அந்தப் பிஞ்சு மூளை சூப்பர் மூளையாக வளர்ச்சி அடைகிறது.எத்தனை குறைந்த வயதில் எவ்வளவு அதிகமான தூண்டல்களை,புதிது புதிதான அனுபவங்களை உங்கள் குழந்தைகளுக்குத் தருகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது சூப்பர் குழந்தையாகப் பரிணமிக்கும்.

குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது கணப் பொழுதும் மாறிக்கொண்டே அல்லது இயங்கிக் கொண்டே இருப்பது.அது நிலையாக ஒருபோதும் நிற்பதில்லை.It is either improving or degenerating. முறையான பயிற்சிகளைப் பெறும் குழந்தையின் மூளை வளர்ந்து கொண்டிருக்கையில், பயிற்சிகளற்ற, திறன்கள் சரியாக ஊக்குவிக்கப் படாத மூளை, அதன் ந்யூரல் கனெக்ஷன்களை இழந்து வளர்ச்சியின் வேகம் குறைகிறது.
குழந்தையின் மூளை வளர்ச்சித் திறனை பாதிக்கும் காரணிகள் என்னென்ன என்று பார்ப்போம்.

• ஜெனிடிக்ஸ் எனப்படும் பாரம்பரியம்,
• உணவு மற்றும் ஊட்டச் சத்து,
• பெற்றோர்களின் அன்பு,அக்கறை மற்றும் குழந்தையின் செயலுக்கான அவர்களின் பிரதிபலிப்பு,
• குழந்தை தினசரி பெறும் அனுபவங்கள்,
• குழந்தையின் உடல் இயக்கங்கள் இவை எல்லாமே முக்கியக் காரணிகள்.

ch1-fg3-synapse-density-over-timeஐந்து புலன்களின் வாயிலாகக் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும் மூளையின் சர்க்யூட் இணைப்புகளை பலமாக்கி அதன் சாதுர்யத்திற்கு சரியான அடித்தளம் அமைக்கின்றன.
உதாரணமாக இப்படிச் சொல்லலாம்.
அம்மாவின் உடல் வாசம்,(smell)
அப்பாவின் குரல் (hearing)
முகம் பார்ப்பது அல்லது பளபளக்கும் பொம்மையின் கலர் (vision)
மிருதுவான கை அணைப்பு (touch)
பால் குடிப்பது (taste)

அம்மாவின் அணைப்பை உணர்வது, அப்பாவின் குரலை இனங்கண்டறிவது என்று எல்லாவற்றிற்குமே அது அதற்கு என்று குழந்தையின் மூளை சர்க்யூட் போட்டு, ஒரு அமைப்பை (pattern) உருவாக்குகிறது.தொடர்ந்து பலமுறை குழந்தையின் பெயரைச் சொல்லி அழைத்தீர்களானால்,அதன் மூளையில், ”தன்னைத் தான் அழைக்கிறார்கள்” என இனங்கண்டறிவதற்கான சர்க்யூட் கனெக்ஷன்கள் நிகழ்ந்து, நீங்கள் அழைக்கையில் திரும்பிப் பார்க்கக் கற்றுக் கொள்வான்(ள்). இவ்விதமாக,மூன்று வயதாகும் குழந்தையின் மூளையில் 1000 ட்ரில்லியன் கனெக்ஷன்ஸ் உருவாகி இருக்கும்.(இது வளர்ந்த மூளையில் இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகம்) சுமார் பதினோரு வயதில், தேவையில்லாத சர்க்யூட்டுகளை வெட்டி விட்டு, முக்கியமானவைகளை மட்டும் தக்க வைத்துக் கொள்கிறது.
திரும்பத் திரும்பக் கிடைக்கும் அனுபவங்களின் வாயிலாக மூளையின் சினாப்ஸிஸ்கள் பலப்படுத்தப் பட்டு, தனித் தனி இணைப்புகள் அதற்கென்று உருவாகின்றன.உபயோகிக்கப் படாத இணைப்புகள் கழற்றி விடப் படுகின்றன.(based on “Use or Lose” it principle).

வலது மற்றும் இடது மூளை:
மனித மூளையின் சிந்திக்கும் தன்மை வலது மற்றும் இடது மூளையினால் வேறுபடுகிறது.கீழ்க்கண்ட அட்டவணை வலது மற்றும் இடது மூளையின் வேறுபட்ட சிந்திக்கும் திறனைக் காட்டுகிறது.
Right and Left Brain FunctionsRight and Left Brain

நாம் ஒவ்வொருவரும் வலதோ, இடதோ ஏதோ ஒரு மூளையின் ஆதிக்கம் அதிகம் உடையவராக இருக்கிறோம்.இரண்டு பக்க மூளையையும் முழுவதுமாக சரிவரப் பயன்படுத்தும் புத்திசாலிகளாகவும் ஒரு சிலர் இருப்பர்.மனனம் செய்ய, லாஜிக்கைக் கற்றுக் கொடுக்கும் நம் கல்வி முறை பெரும்பாலும் இடது மூளையையே அதிகம் பிரயோகிக்க வகை செய்கிறது. ஆனால், வலது, இடது இரண்டு பக்க மூளையையும் சரியாகப் பயன்படுத்தப் பயிற்சி பெறும் குழந்தைகளே சூப்பர் குழந்தைகளாக மலரும்.

முழு மூளைத் திறனைப் (whole brain development) பெறுவதற்கு என்னென்ன வழிமுறைகள் என்பதைப் பார்க்கலாம்.

Concept # 1. Start Early:
பச்சிளம் குழந்தைப் பருவத்திலேயே , ஏன் கர்ப்பத்தில் இருக்கும் போதே மூளை வளர்ச்சி துவங்கி விடுகிறது.
குழந்தை வயிற்றுக்குள் இருக்கையிலேயே, அதனுடன் பேச ஆரம்பித்து விடுங்கள்,நல்ல இசையை, புதிய மொழி ஒலிநாடாக்களை ஒலிக்கச் செய்யலாம்.
Concept # 2.Make Connections:
மூளையின் சர்க்யூட் இணைப்பு, அது பெறும் தகவல்களுக்கேற்ப, தன்னுள் இணைப்புகளை உருவாக்குகிறது. அதிகமான தகவல்கள் = விரைவான மற்றும் அதிகமான கற்றல்
படைப்புத் திறன் மிக்க மூளையானது முதல் மூன்று வயதிற்குள்ளாகவே, எல்லாவிதமான செய்தி, அனுபவங்களைப் பெறுவதற்குத் தயாராகி விடுகிறது.
பார்ப்பதை, கேட்பதை விரைவாக ஸ்கேன் செய்து, அதை வகைப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய விஷயத்துடன் லிங்க் செய்து, பிற்பாடு பயன்படுத்த, பத்திரப் படுத்திக் கொள்கிறது.
இந்த வயதிற்குள்ளாகவே, உங்கள் குழந்தைகளுக்கு எல்லாப் புலன்களின் மூலமாகவும் (by using flashcards,classical music,world languages,sensorial toys and games) கற்றுக் கொடுக்க முயற்சியுங்கள்
cropped-IMG_30341
Concept # 3:Teach Both Brains:
இரண்டு விதமான சிந்தனைத் திறத்தையும் ஊக்குவிக்க விளையாட்டு முறைகளுடன், லாஜிக்கல் விஷயங்களை, எண்களையும் சேர்த்துக் கற்றுக் கொடுக்கவும்.
இசையைக் கற்றுக் கொள்வது இரண்டு பக்க மூளையின் செயல்பாட்டுத் திறனையும் ஊக்குவிப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
Concept # 4 Maximize the Right Brain Window:
முதல் இரண்டு வயது வரை, குழந்தைக்கு இடது மூளையின் குறுக்கீடு ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். இந்த காலத்தில் வலது மூளை தனக்குக் கிடைக்கும் அனைத்துத தகவல்களையும் இடது மூளையின் குறுக்கீடுகள் அற்று குஷியாக, தானே உள்வாங்கி, சேமித்து, பிரதிபலிக்கிறது
இரண்டு வயதிற்குள்ளாகவே, எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான Flash Cards, சித்திரப் புத்தகங்கள், கதைகளை அறிமுகப் படுத்த முடியுமோ, அவ்வளக்கவ்வளவு அதன் வலது மூளையின் செயல்திறனை நன்கு ஊக்குவிக்கலாம்.மூன்று வயதுக்குப் பின்,வெவ்வேறு விதமான விளையாட்டுகளின் மூலம் வலது மூளையின் திறனை வளர்க்கலாம்.
Concept # 5. Be Happy:
A happy child becomes happy adult என்பர். குழந்தைகளுக்கு, அவர்களின் எல்லா புலன்களையும் பயன்படுத்தக் கற்றுக் கொடுங்கள். உங்கள் செயல்பாடுகள் மூலம், அமைதி, அன்பு, அரவணைப்பு போன்ற உணர்ச்சிகளையும் அவர்கள் உணர்ந்து கொள்ளுமாறு பழகுங்கள். கதைகளினூடே மேற்கூறிய உணர்ச்சிகளையும் மற்ற உணர்ச்சிகளையும் அவர்களுக்குப் பயிற்றுவிப்பது எளிது.

தினமும் ஒரு இருபது நிமிடங்களாவது உங்கள் குழந்தையை வெளியே பார்க், கடைவீதி, பஸ்ஸ்டாண்ட் போன்ற புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். நினைவிருக்கட்டும்-ஒவ்வொரு புதிய பொருளை, இடத்தைப் பார்க்கையிலும் அதன் மூளையில் புதிய புதிய சர்க்யூட்டுகள் உருவாகின்றன.

குழந்தைகளுக்கு, நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள் என்று சொல்லிக் கொண்டே , பேசிக் கொண்டே இருக்கவும்.அம்மா, இப்போ மம்மு செய்யப் போறேன், மம்மு செஞ்ச உடனே நீ சாப்பிடுவியாம், பெல் அடிக்குது, யாரு வந்துருக்காங்கன்னு பாக்கலாமா?, என்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு சாதாரண விஷயத்தையும் குழந்தையிடம் தெரிவித்துக் கொண்டே செய்யுங்கள்.

சரி.இப்ப, அஜ்ஜிக் குட்டியை எப்பிடி சூப்பர் குழந்தையா வளக்கணும்னு இட்லிவடையில எழுதியிருக்காங்க, அதப் படிக்கலாமா? என்று குழந்தையுடன் சொல்லிக் கொண்டே இதைப் படிக்கவும்
😉 😉

டாக்டர்.பிரகாஷ்
www.rprakash.in

இட்லிவடை ப்ளாகில் வெளியான இந்தக் கட்டுரைக்கான லிங்க் http://idlyvadai.blogspot.in/2013/02/to-3.html

முசுடு சங்கரலிங்கமும்,புக்ஃபியஸ்டாவும்

உலகின் கடைசி மனிதனாக தனியே வாழத் தயாரா? என்று என்னிடம் யாராவது கேட்டால்,
“-என்னுடன் புத்தகங்களும் இருக்கும் பட்சத்தில்-சரி” என்று சொல்வேன்.அந்த அளவுக்கு, புத்தகங்கள் என் வாழ்க்கையோடு ஒன்றிவிட்டன..
சின்ன வயதில் கோடை விடுமுறைகளில் பாட்டி சொல்லும் ராஜா கதைகளில் லயித்த மனம் வருடம் முழுவதற்கும் அதற்காக ஏங்கி ரத்னபாலா, அம்புலிமாமாக்களை இரண்டாம் வகுப்புப் படிக்கையிலேயே எழுத்துக்கூட்ட ஆரம்பித்திருந்தேன்.

வீட்டில் எல்லோரும் சினிமாவிற்கு சென்று திரையின் காட்சிகளில் தங்களை மறந்திருக்கையில் எனக்கு மட்டும் ஆபரேட்டர் அறை ஓட்டை வழியே வரும் வண்ணப்புகை மாறிக்கொண்டே இருப்பதைப் பார்க்கப் பிடிக்கும்.(முழுசா ஒரு ரூபா குடுத்து இவன படத்துக்குக் கூட்டிட்டு வந்தது வேஸ்ட் என்று எனது மூத்த அக்கா திட்டுவாள்)
அதற்கடுத்த சமயங்களில் என் டிக்கட் காசு காமிக்ஸ் புத்தகங்களாகிப் போனது(விஷ ஊசி வேங்கப்பா, ஸ்பைடர்மேன்,இரும்புக்கை மாயாவி)

கொஞ்சம் வளர்ந்து நான்காம், ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் முழுப்பரீட்சை விடுமுறையில் வீட்டில் உக்கிரான அறை என்னால் தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டு,கொலு வைப்பதற்கென்று பாட்டி பத்திரப்படுத்தியிருந்த பொம்மைகளை (ஆதிசேஷன் நாகம், மச்ச அவதாரம், ஆந்தை, குப்புறப்படுத்திருக்கும் சீனப்பாப்பாக்கள்)வெளியே விளையாடக் கொண்டு போவதைப் பொறுக்க முடியாத பாட்டி, கோபத்துடன்”வாசகசாலைக்குப் போடா” என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளுவார்.வேறு வழியின்றி தே.கல்லுப்பட்டி நூலகம் அடைக்கப்படும் வரை அங்கேயே கிடந்து மஞ்சரி,அ.மாமா என்று எதையாவது வாசித்துக்கொண்டிருப்பேன்.
எட்டாம் வகுப்புப் படிக்கையில் கஷ்டப்பட்டு நூலகத்தில் உறுப்பினரானேன்.அதற்கு ஹெட்மாஸ்டரிடமெல்லாம் கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது.

அப்போதைய லைப்ரரியன் முசுடு சங்கரலிங்கம் (பட்டம்-உபயம்: நானும் என் நண்பன்ஜெயக்குமாரும்)லைப்ரரியை ஒரு மியூசியம் போலப் பாதுகாத்து வந்தார்.(புத்தகங்கள் படிப்பதற்கு அல்ல-பாதுகாப்பதற்கே என்பது அவர் பாலிசி)
அதிலும் நான் புத்தகம் எடுக்க வந்தால் என் மீதே கண்கொத்திப் பாம்பாய் இருப்பார்.
அவருக்கு சவால் விடும் வகையில் காலையில் டிஃபன் சாப்பிட்டுவிட்டு எட்டரைக்கு உள்ளே நுழைந்து தேட ஆரம்பித்தால்,பதினொன்றரைக்கு நூலக நேரம் முடிந்து அவர் என்னைக் குறிப்பாக முறைத்துக் கொண்டே,மேசைமணியை கடுப்பாக அழுத்தும் வரை
நிதானமாகத் தேடி விட்டு போனால் போகட்டும் என்று ஒரு புத்தகத்தை அவரிடம் நீட்டுவேன்.(சி.ஐ.டி.சங்கர்லால்,ராஜேஷ்குமார்,ராஜேந்திரகுமார்)
“வெலைக்கா வாங்கப் போற? ஏதாவது ஒண்ண எடுத்துட்டுப் போய்ட்டு, நல்லா இல்லாட்டி நாளைக்கு வந்து மாத்திக்க வேண்டியதுதான” என்று முணுமுணுப்பார்.அதையும் நான் மதியமே படித்து விட்டு சாயங்காலம் போய் வேறு புத்தகம் கேட்டு அவரால் திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறேன்.”நாளைக்குத் தான் புத்தகத்தை மாத்த முடியும்” என்பது ரூல்.
மு.ச இல்லாத நாட்களில் உதவி நூலகர் விவேகானந்தனிடம் (இவர் மிகவும் சாது: எங்களுக்கு கருணை காட்டுபவர்)சொல்லிவிட்டு அன்அக்கவுண்டில் ஐந்து புத்தகங்களை எடுத்துச்செல்வேன்.வருடாந்திர ஆடிட்டிங்கில் கல்லுப்பட்டி நூலகத்திலிருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்களை எண்வரிசைப்படி அடுக்கி வைக்க என் உதவி தேவைப்பட்டதால் சில மாதங்களிலேயே மு.ச. என் வழிக்கு இறங்கி வந்தார்.
விடுமுறைகளில் சாப்பிடுவது, தூங்குவது,பாத்ரூம் போகும் நேரம் தவிர மீதி எல்லா நேரங்களிலும் நூலகத்திலேயே பழியாய்க் கிடந்ததால் இரண்டு வருடங்களில் பைண்டிங் அட்டையை வைத்தே அது என்ன புத்தகம் என்று சொல்லுமளவுக்குத் தேறியிருந்தேன்.
மு.ச கூட குறிப்பாய் ஏதேனும் புத்தகம் தேட என்னிடம்தான் கேட்கும் நிலை வந்தது.

எவ்வளவு நாளைக்குத் தான் இரவல் புத்தகங்களைப் படிப்பது?நமக்கென்று சொந்தமாக (அ.மாமா, காமிக்ஸ் தவிர) புத்தகங்கள் வேண்டாமா? என்று ஏங்க ஆரம்பித்தேன்.ராணியில் வந்த விளம்பரம் ஒன்றைப்பார்த்து,வி.பி.பி.யில் அனுப்பச் சொல்லி கார்டில் எழுதிப்போட்டு, முதன்முதலாக நான் வாங்கிய நவமணியின்”வெளிநாட்டுக்குப் போவது எப்படி?” எனக்கு வந்த போது எனக்குக் கிடைத்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.(நீங்கள் வாங்கிய முதல் புத்தகம் எது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?)

அப்போதெல்லாம் கிருஷ்ணா காஃபி, வெண்ணெய் இன்னும் சில சாமான்கள் வாங்க நாற்பது கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மதுரைக்கு மாதம் ஒருமுறை செல்லவேண்டியிருக்கும்
வீட்டுக்கு வேண்டிய சாமான்களை வாங்கிவிட்டு,காவேரி மஹாலுக்கு எதிரில் இருக்கும் வெண்ணெய்க் கடையில் நான்கு கிளாஸ் மோர் குடித்துவிட்டு மாடர்ன்ரெஸ்டாரண்டில் மதியம் சாப்பிட வீட்டில் கொடுத்த பணத்தையும் கால்சியம் சாண்டோஸ் நாய்பொம்மை உண்டியலில் இருந்து எடுத்த என் சிறுசேமிப்பையும் சர்வோதய இலக்கியப்பண்ணை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், காலேஜ்ஹவுஸ் புக் ஷாப் என்று சுற்றி எனக்குப் பிடித்த புத்தகங்களை வாங்குவேன்.

இப்படியாகத் தொடர்ந்த பழக்கம் இப்போதும் சம்பளத்தில் ஐந்து சதவீதம் புத்தகங்களுக்காக செலவிடும் வரை நீடித்திருக்கிறது.
இதை ஒரு மூலதனம் என்றுதான் சொல்ல வேண்டும்.இருப்பினும், ஹார்வர்டு பிஸினஸ் ரிவ்யூ போன்ற விலையுயர்ந்த மாத இதழ்களையெல்லாம் எப்படியாவது (இலவசமாக)படிக்க முடியாதா என்னும் தேடலுடன் அலைந்த நான் ஒரு நாள் இணையத்தில் கூகுள் அருளால் தற்செயலாக புக்ஃபியஸ்டா என்னும் தளத்திற்கு விஜயம் செய்தேன்.அறிவியல் முதல் ஆன்மிகம் வரை, ஆங்கில மொழித் தேர்ச்சி முதல் மேலாண்மை, தலைமைப் பண்பு, புகழ் பெற்ற நூலாசிரியர்கள் எழுதிய சுய முன்னேற்றப் புத்தகங்கள் என்று இன்னும் ஏராளமான தலைப்புகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை இலவசமாகக் கொடுக்கும் இணையதளம் அது.
ஸ்டீஃபன் கோவி போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் ஆடியோ புத்தகங்கள் கூட உண்டு
சில நிமிடங்களிலேயே உங்களுக்குப் பிடித்தமான புத்தகத்தைத் தரவிறக்கம் செய்துகொண்டு,
நேரம் கிடைக்கும் போது படிக்கலாம்.முதலில் ப்ளாக்ஸ்பாட்டாக இருந்த இத்தளம் இப்போது அதிக வசதி மற்றும் சிறப்புகளுடன் www.bookfiesta4u.com மாக வளர்ந்துள்ளது.
வெறும் வதந்திகளையும், இந்த மெயிலை ஒன்பது பேருக்கு ஃபார்வர்டு செய்யாவிடில் ஒன்பது நாட்களுக்குள் ரத்தம் கக்கிச் செத்து விடுவீர்கள் என்பது போன்ற மிரட்டல் மெயில்களையும் அனுப்பாமல் புக்ஃபியஸ்டா போன்ற நல்ல பயனுள்ள இணையதளம் பற்றி எல்லோரிடமும் பகிர்ந்து அவர்களது அறிவை வளர்க்கவும் நேரத்தையும், பணத்தையும் சேமிக்கவும் உதவுங்கள்.