இந்தியாவின் பட்டினியைப் போக்கியவர்

M.S.Swaminathan
கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த அந்தச் சிறுவனுக்கு அவன் அப்பா தான் ஆதர்சம்.

அப்பா டாக்டர் எம்.கே.சாம்பசிவம், பிரசித்தி பெற்ற சர்ஜன்.மஹாத்மா காந்தியின் அடியொற்றி, வெள்ளையர்களை எதிர்த்து அந்நியத் துணிகளை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்; கடவுளுக்கும் ஹரிஜன மக்களுக்கும் இடையே இருந்த கோவில் கதவுகளை உடைத்து, அவர்களின் ஆலயப் பிரவேசத்திற்காகப் போராடியவர். கும்பகோணத்தில் நெடுங்காலமாகப் பீடித்திருந்த ஃபிலேரியாஸிஸ் என்னும் யானைக்கால் வியாதியை ஒழிக்கப் பெரும் முயற்சி எடுத்தவர்.

அப்பேர்ப்பட்ட அப்பாவை தனது பதினோராவது வயதில் இழந்த இந்தப் பையன்,பள்ளிப்படிப்பு முடிந்ததும், திருவனந்தபுரம் சென்று கல்லூரியில் விலங்கியல் படித்தார்.

அப்போது வங்காளத்தில் வந்த மிகக் கொடிய பஞ்சத்தால் முப்பது லட்சம் மக்கள் உண்ண உணவின்றிப் பட்டினியால் இறந்தனர்.இதைக் கேள்விப்பட்ட அவர் மனம் துடித்தது. மக்கள் பட்டினியால் மாண்டு போகாமலிருக்க நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டுக் கொண்டார்.

அரிசிப் பெருக்கத்தைப் பற்றிய மேற்படிப்பைப் படித்து உணவு உற்பத்தியைப் பெருக்கி, இந்த நாட்டில் பட்டினியால் மக்கள் மடியும் மாதுயரைத் தடுத்தே ஆக வேண்டும் என்று அப்போதே சபதமெடுத்தார்.

பிஎஸ்சி விலங்கியல் படித்து முடித்த பின் மீண்டும் பிஎஸ்சி அக்ரிகல்ச்சர் படித்தார். தாவர மரபணுத் துறையில் எம்.எஸ் சி..தேர்ச்சி. பின்பு, யு.பி.எஸ்.சி தேர்வெழுதி, ஐபிஎஸ் ஆகத் தேர்வு. நெதர்லாந்தில் பிஎச்டி. விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தில் போஸ்ட் டாக்டோரல் பட்டம். அங்கேயே நல்ல வேலை கிடைத்தும் மனமெல்லாம் தாய் நாட்டின் பஞ்சத்தைப் போக்க வேண்டுமென்கிற எண்ணத்தால், 1954 இல் இந்தியா திரும்பினார்.

அதற்கப்புறம் அவர் செய்த பல்வேறு ஆராய்ச்சிகளின் விளைவாக இந்தியாவில் பசுமைப் புரட்சி மலர்ந்தது.இந்திய உணவு உற்பத்தி அபாரமாக வளர்ச்சியடைந்தது.

பயிர்களின் மகசூலைப் பெருக்குவது பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள்,எட்டு முக்கியப் புத்தகங்கள், இவர் எழுதியவை

பதினான்கு உலகளாவிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்பட இருபத்து நான்கு தேசிய அளவிலான விருதுகள், உலகம் முழுவதிலிருந்தும் கிடைத்த ஐம்பதுக்கும் மேற்பட்ட டாக்டரேட் பட்டங்கள் என்று, விக்கி இன்னொரு அனெக்ஸர் போட வேண்டிய அளவு சிறப்புகள்…

இவரது ஆராய்ச்சியின் பயன்களாகத் தான் இன்றைக்கு இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்கிறது.
டைம்ஸ் பத்திரிக்கை, இருபதாம் நூற்றாண்டின் ஆசியாவின் டாப் இருபது பேர்களில் ஒன்றாக இவரைத் தேர்ந்தெடுத்தது. இந்த நாட்டின் மக்கள் மட்டுமல்ல, இங்கு விளையும் ஒவ்வொரு நெல்மணியும் வாயிருந்தால் அவரை இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என மனம் பூரிக்க வாழ்த்தும்.

அப்பேர்ப்பட்ட விஞ்ஞானியை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

காந்திகிராமப் பல்கலைக் கழகத்தில் அப்போது நான் டிப்ளமா இன் அக்ரிகல்ச்சர் பயின்று கொண்டிருந்தேன்.
கல்லூரிக்கு வந்திருந்து, ஆடிட்டோரியத்தில் அவர் உரையாற்றினார். பின்னர் எங்கள் துறைக்கு வந்து சில கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவருக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கையில், சட்டென நினைவுக்கு வந்து ஹாஸ்டலுக்கு ஓடிச் சென்று என் பெட்டிக்குள் இருந்த ஒரு சிறிய பொருளை எடுத்துக் கொண்டேன்.
கல்லூரிச் சுற்றுலாவில் மார்த்தாண்டத்திற்குச் சென்றிருந்த போது வாங்கியது அது. அடிக்கல் நாட்டு விழா முடிந்ததும், அவரை மிக அருகிலே சென்று பார்க்க, பேச சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டேன்.

உங்களுக்கு நான் ஒன்று கொடுப்பேன். மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள்.

முகத்தில் திகைப்புடன், என்ன? என்றார்.

என் சட்டைப் பைக்குள் இருந்த அந்த பேட்ஜை எடுத்து அவரிடம் கொடுத்தேன். இந்தியாவின் பட்டினியைத் தீர்த்த மாமனிதருக்கு இந்த ஏழை மாணவனின் பரிசு.

கையில் வாங்கிப் பார்த்த அவர், முகத்தில் மிகுந்த மலர்ச்சியுடன் அதை வாய் விட்டுப் படித்தார் Plant or Perish.

”நான் இத்தனை காலம் சொல்லிக் கொண்டிருப்பதை, செய்து கொண்டிருப்பதை இரண்டே வார்த்தைகளில் இது சொல்கிறது. இதைப் பெற்றுக் கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி,மிக்க நன்றி” என்றார்.

தயாராக வைத்திருந்த ஆட்டோகிராஃப் நோட்டை நீட்டினேன். மிகுந்த நம்பிக்கைகளுடன் கண்களில் பிரகாசமாய், எம்.எஸ் சுவாமிநாதன் என்று கையொப்பமிட்டுக் கொடுத்தார்.

மார்த்தாண்டத்தில் வாங்கிய, ஒன்று போலிருந்த அந்த இரண்டு பேட்ஜ்களில் என்னிடமிருந்த இன்னொன்று தொலைந்து விட்டது. ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது- நான் கொடுத்த பேட்ஜை இன்னமும் அவர் பத்திரமாக வைத்திருப்பாரென்று.

Did you like this? Share it:

One comment

  1. பசுமைப் புரட்சிக்கு அடி கோலியவரைப் பற்றிய நினைவுகள் சுவாரஸ்யமாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.