500 & 5 தமிழ் சினிமாவில் என் கவிதை

முதலில் இந்தப் படத்தின் ட்ரைலரை பார்த்து விடுங்கள்

சென்ற வருட ஜனவரியின் ஒரு ஞாயிற்றுக்கிழமையில், என் தோழி கவிதாவின் வீட்டுக்கு சென்றிருந்த போது, ஹேய், நம்ம ரகு எடுக்குற படத்துக்கு ஒரு கவிதை வேணுமாம் நீதான்டா எழுதணும் என்றாள். ஆமா பிரகாஷ், நீங்க ஒரு கலக்கு கலக்குங்க என்றார் என் நண்பரும்,கவிதாவின் கணவரும், இந்தப் படத் தயாரிப்புக்குழுவில் ஒருவருமான ரங்கா.

ரகு இவர்களின் உறவினர் மற்றும் நெருங்கிய நண்பர் ,அமெரிக்காவில் இருப்பவர், ஹாலிவுட்டில் பல குறும்படங்களை இயக்கியவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு,அண்ணாநகர் சாந்தி காலனியின் பிள்ளையார் கோவில் முனையில், ஒரு ”அவசர ஹாய்” யில் எனக்கு அறிமுகமானவர். இப்போது ஒரு தமிழ் திரைப்படம் எடுப்பதற்காக சென்னைக்கு வந்திருப்பவர்.

இது நடந்து மூன்று வாரங்கள் கழித்து, ரங்காவை சந்தித்த போது,”பிரகாஷ், ஷூட்டிங் ஸ்டார்ட் ஆயிருச்சு: இதுதான் நீங்க எழுதற கவிதை ஸீனோட ஸ்கிரிப்ட்.” என்று ஒரு ஃபைலில் இரண்டு மூன்று பக்கங்களைக் காட்டினார். Jenny’s Poem என்று தலைப்பிட்டு, அந்தக் காட்சியின் நீள அகலங்கள், காட்சியின் முதல் ஃப்ரேம் எங்கு தொடங்குகிறது, எங்கிருந்து எவ்வளவு லைட்டிங், காமிரா கோணம் (லொகேஷனில் காற்றின் அணுக்கள் எந்தத் திசையிலிருந்து எந்தத் திசைக்கு நகரவேண்டும் என்பதைத் தவிர) அந்தக் காட்சியின் ஆதி முதல் அந்தம் வரை அத்தனையும் புட்டுப் புட்டு வைத்திருந்தனர்.

காதலைப் பத்தி நெகடிவ்வா ஒரு கவிதை வேணும். இத வச்சி எழுதுங்க என்றார் ரங்கா.
நினைவு தெரிந்த நாள் முதலாக கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பவன் நான். என்ன, கிழித்துப் போடப்படும் கவிதைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பதால் காகித மலைக்குப்பையை உருவாக்கி பூமிப் பந்தை மேலும் உஷ்ணமாக்காமல் பில்கேட்ஸ் புண்ணியத்தில் வேர்ட் டாகுமெண்டில் எழுதி சேவ் செய்யாமல் டிஜிட்டல் கடலில் கரைத்து விடுவேன் அப்படிப்பட்ட எனக்கு இதெல்லாம் அப்பளம் சாப்பிடுவது மாதிரி..
இரண்டு நாள்களில் கவிதையை டைப் செய்து இ மெயிலில் அனுப்பி வைத்து விட்டு அதை அப்படியே மறந்து விட்டேன்.

ஒரு இரண்டு மாதங்கள் கழித்து, ரங்காவிடமிருந்து ஃபோன் வந்தது. கான்ஃபரன்ஸ் காலில் ரகுவும் உடன் இருந்தார். பரஸ்பரம் நலம் விசாரிப்புகளுக்குப் பின் ரகு தொடர்ந்தார்.
உங்க போயம் ஒகே. ஆனா ரொம்ப லெந்தியா ஜென்ரலா இருக்கு.. ரொம்ப ஷார்ட்டா எழுதுங்க.. சிச்சுவேஷன் சொல்றேன்.. அதை பேஸ் பண்ணி எழுதுங்க என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் கவிதையைப் படித்து விட்டு, திரும்பவும் என்னிடம் வந்து கவிதையை எழுதச் சொல்கிறாரே என்று அதிசயித்துக் கொண்டே சிச்சுவேசனைக் கேட்கலானேன்.
”போதைக்கு அடிமையான ஒரு பொண்ணு –அவதான் ஜென்னி- கையில சிகரெட்ட வச்சுக்கிட்டு,சிலை வடிச்சுக் கிட்டு இருக்குற தன்னோட காதலனோட மடியில் சாஞ்சுட்டு படிக்கிற கவிதை இது.”

”கதையில ரொம்ப இம்பாடண்ட் சீன் இது. இந்தக் கவிதை அவ லைஃப,அவளோட ஃபீலிங்ஸ அப்படியே சொல்ற மாதிரி வரணும்.
ரெண்டு பேரும் ரொம்ப உயிருக்குயிரா லவ் பண்றாங்க. ஆனா, தன்னோட காதல் நிறைவேறாமப் போயிடுமோன்னு ஒரு நெகடிவ் தாட் அவளுக்கு இருக்கு.அவனோட பிரசன்ஸ ரொம்பவே லைக் பண்றா.அவனப் பத்தி, அவ ரொம்பவே ரசிக்கிற அவனோட ஆர்டிஸ்டிக் ஸ்கில்ஸ் பத்தி, அவங்க ரெண்டு பேருக்கும் இருக்குற அருமையான கெமிஸ்ட்ரி பத்தி, அவ அவனை ரொம்ப ஸ்பெஷலா ஃபீல் பண்றதப் பத்தி எல்லாம் கவிதையில வரணும்.அப்பிடியே ஸ்லோவா நெக்ஸ்ட் லெவலுக்கு ட்ரான்ஸிசன்…”
”நீ இல்லாமப் போயிடப் போற, என்னவோ பயமா இருக்குது, என்னோட லவ் தோத்துப் போயிருமோன்னு நெகடிவ்வா ஃபீல் பண்றா. இதுல வந்து அப்ரப்டா முடியணும் ட்ரீம், ரியலிட்டி, ஃபேண்டசி, நெகடிவ் தாட்ஸ் எல்லாம் சேந்து வரணும்” என்றார். சரி என்றேன். கான்ஃபரன்ஸ் கால் முடிந்தது.சரி. எழுத ஆரம்பிச்சுற வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டேன்.


எனக்குள் முக்காலே மூணு வீசம் மிருகமாய், காலரைக்கால் பாகம் மனிதனாய் இருந்த ஜந்து ஜொள் வழிந்த வாயோடு கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தது.
எதற்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று நினைத்து ரங்காவுக்கு ஃபோன் செய்து, தமிழ்ப் படம் தான் எடுக்கிறார்களா என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.
பின்நவீனத்துவமா எழுதிற வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே என் மனதுக்குள், அண்ட பேரண்டம், முயக்கம், குருதி, குறிகளின் வாய் வழி வந்து இன்னும் உலராதிருக்கும் என் சொற்கள் என்றெல்லாம் நிழலாய் ஓடிக் கொண்டிருந்தன.. படிமம் வைத்து எழுதலாமா? நூற்றுப் பதினோரு பேர், முன்னூற்றுச் சொச்சம் அர்த்தங்களில் உரை எழுதும் தமிழின் ஆகச்சிறந்த புரிந்து கொள்ள முடியாத கிறுக்கல் கவிதையாக எழுதித் தள்ளிர வேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டேன்.
பின்னர், படம் பார்ப்பவர்களுக்கு கோனார் நோட்ஸ் எதுவும் கண்டிப்பாகத் தரப்பட மாட்டாது என்று சொல்லப் பட்டதாலும்,கவிதை ரொம்ப சிம்பிளா இருக்கணும் என்று ரகு கறாராக இங்கிலீசில் சொல்லி விட்டதாலும், தமிழ் ரசிகர்களின் துரதிர்ஷடத்தை எண்ணி நொந்து கொண்டே ரொம்பவே சாதாரண வரிகளாக எழுதினேன்.

இரண்டு மூன்று நாட்களில் எழுதி அந்தக் கவிதை வரிகளை பல்வேறு கோணங்களில் பார்த்து ரசித்து விட்டு, வாஸ்துப்படி அந்தந்த வார்த்தைகளை அவைகளின் நியூமராலஜிப்படி உட்கார்த்தி வைத்து, தூக்கம் தொலைந்த ஒரு நடுராத்திரியில் என் ஜி மெயிலின் செண்டு பட்டனை அழுத்தினேன்.

இது நடந்து ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து,
படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் எல்லாம் முடிந்து படத்தின் பெயர், கதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் துவங்கின.சென்ற மாதம் ஃபேஸ்புக், நாளிதழ்கள், இணைய இதழ்கள் என்று எல்லா இடத்திலும் 500&5 பற்றி நிறைய செய்திப் பரிமாற்றங்கள்.இதென்ன 500 & 5 வாஷிங் சோப்பு, சீயக்காய் பொடி பெயர் மாதிரி இருக்கிறதே என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, படத்தைப் பற்றி படித்தவுடன் தான் விளங்கியது. ஒரு 500 ரூபாய் நோட்டு, 5 வெவ்வேறு கதைகளினூடே பயணிப்பதும். அந்த 5 கதைகளும் இந்த 500 ரூபாய் நோட்டால் இணையும் புள்ளியே மொத்தப் படமும் என்பதாகப் புரிந்தது. ஐந்து கதைகளில் ஜென்னியின் காதல் ஒரு கதை.

படத்தின் ட்ரைலர் மிரட்டலாக வந்திருந்தது.
போஸ்டர்கள் அருமையாக வந்திருந்தன. சின்னு என்பவர் ஜென்னியாகவே வாழ்ந்து, நடிப்பையும், புகையையும் அட்டகாசமாக ஊதித் தள்ளியிருக்கிறார். ரவியாக ரங்காவும், பிரக்ஞாவாக கவிதாவும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள் (பார்க்க: போஸ்டர்)
ஜீலை 22 ஞாயிறு காலை 500&5 ஆடியோ வெளியீடு விழாவை ஒட்டி Accessible Horizon Film மெரினா பீச்சில் ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் ஓட்ட நிகழ்வு பத்திரிகைகள், இணையம், ஃபேஸ்புக் வாயிலாக இன்னும் பலஆயிரம் பேர்களை படம் பற்றிப் பேச வைத்தது. ஆடியோ ரிலீஸ் செய்த அன்று ரங்கா போன் செய்து, பிரகாஷ், சி.டி.யில உங்க கவிதை உங்க பேரோட வந்திருக்கு. என்று குதூகலித்தார். எனக்குக் கலவையான உணர்வாக இருந்தது.மறுநாளே அவர் அனுப்பி வைத்திருந்த ஆடியோ லிங்க்கை கிளிக்கி ஜென்னிஸ் போயம் என்றிருந்த
எனது கவிதையை கெளசல்யா அவர்களின் குரலில் கேட்டேன்”முங்கு நீச்சலடிக்க இங்கு ஆசைப்படுது ஒரு எறும்பு
உன்னை நீயே ஷட்டெளன் செய்ய காதலை நீ விரும்பு”

என்றெல்லாம் பாயைப் பிறாண்டிக் கொண்டு நான் எழுதிக் கொடுத்த முதல் வெர்ஷனின் 32 வரிகளில் இருந்து ஒன்று கூட வந்திருக்கவில்லை. (ஒரு வேளை ,ரொம்ப சூப்பரா இருக்கு என்று அவரது அடுத்த படத்துக்கென்று தனியே எடுத்து வைத்து விட்டாரோ என்னவோ)
(முதல் வெர்ஷனில் எனக்குப் பிடித்த (ஆனால் இடம் பெறாத) வரி
”நுனியில் இனிப்பும் அடியில் விஷமும் கொண்ட
முரண்தொடைக் கரும்பு ,காதல்”)

மோட்டுவளையை முறைத்துப் பார்த்துக் கொண்டே, இரண்டாவதாக எழுதிக் கொடுத்த இருபத்தாறு வரிகளில் இருந்து காட்சிக்குத் தேவையான சில மணிரத்ன வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளனர் போலும்..பராசக்தி வசன வாலாய் நீண்டிருந்த மீதி வரிகளை டிஜிட்டல் எடிட்டிங், ஆல்ட்டி, கண்ட்ரோலிட்டு டெலிட்டி விட்டது.
(நல்லவேளையாக பாத்ரூமில் தோன்றிய மூன்றாவது வெர்ஷனின் வரிகளை எவ்வளவு முயற்சித்தும் நினைவுக்குக் கொண்டுவர முடியாததால் தமிழ்கூறும் நல்லுலகம் அப்பாடா என்று தப்பிப் பிழைத்துப் பெருமூச்சு விட்டது. (ஞாபகமறதிக்குத் தான் இவ்வுலகம் எவ்வளவு நன்றிக் கடன் பட்டிருக்கிறது!).

மொத்தம் நான்கு பாடல்கள். எல்லாவற்றையும் ஒருமுறை கேட்டேன். முதல்முறை கேட்கையிலேயே கனமானதோ மெளனம் எனக்குப் பிடித்திருந்தது. எல்லா பாடல்களையும் இங்கு http://500n5themovie.com/ கேட்கலாம்

ரவியாக ரங்கராஜன்

ஒரு முக்கியமான திருத்தம்.
தலைப்பில் 500 & 5 தமிழ் சினிமாவில் என் கவிதை என்றிருக்கிறது. இதைக் கவிதை என்று சொல்பவர், ஒன்று-தமிழே தெரியாத, ஆப்பிரிக்க ஜுபுலும்பா மொழி மட்டுமே தெரிந்தவராக இருக்க வேண்டும் அல்லது அவர் தவழும் குழந்தையாக இருக்க வேண்டும்.இந்த இரண்டு வகைகளில் எதிலும் நான் இல்லாததால்,இந்தப் பதிவின் தலைப்பை 500 & 5 தமிழ் சினிமாவில் எனது வரிகள் என்றே குறிப்பிட விரும்புகிறேன். நீங்களும் அவ்வாறே மாற்றிப் படிக்கவும்.

பிரக்ஞா வாக கவிதா

இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே….
லேண்ட் லைன் தொலைபேசி மணியடிக்கிறது.
ஹலோ..யாரு ரகு சாரா!
என்னது ? அடுத்த படத்துக்கு எல்லா பாட்டும் நாந்தான் எழுதணுமா?
எங்கே? சுவிட்சர்லாந்து போறதுக்கு எனக்கும் டிக்கெட் புக் பண்ணியிருக்கீங்களா?
………………;;;;;;;;;;;;;;;;;;;;;;…………………………………….
”ஃபோன் வயர் பிஞ்சி போய் ஒரு வாரம் ஆச்சு” என்று நீங்கள் என்னைக் கலாய்க்கும் முன்னரே….
கிரேட் எஸ்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏப்ப்ப்ப்ப்

படத்தைப் பற்றிய மேல் விபரங்களுக்கு:
http://500n5themovie.com/


Did you like this? Share it:

11 comments

 1. நண்பா, உனது கவிதையை ஊர்க்குருவிகள் ( நாந்தாண்டா) புறந்தள்ளினாலும் வெளிநாட்டு தமிழன் அழகாய் திரையில் சமைத்தான்( எப்படி சமைச்சிருக்காருனு படம் பாத்துட்டு சொல்றேன்)

  கவிதாவும், ரங்காவும் கலக்கலாய் இருக்கிறார்கள்.. கவிதா அட்டகாசமான மாடர்ன் பொண்ணு.. மறக்காமல் சொல்லிரு.

  திரைப்படம் வெற்றிபெறும். அதன் முக்கிய செண்டிமெண்ட்டான பிரகாஷ் பாட்டெழுதினால் படம் சூப்பர் சார் என இயக்குனர்களும், உதவி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களிடம் சொல்லி உனக்கு லட்சங்களும், கோடிகளுமாய் கொட்ட வாழ்த்துக்கள். கணக்கு, வழக்கு பார்க்க அதிகம் சிரமப்படாதே.. நானிருக்கிறேன். :-))திரைப்பட பாடலாசிரியர் மனைவிக்கு எனது வாழ்த்துக்கள். துனைவி இருந்தால் அவர்களுக்கும்… அன்புடன்…

  1. ஜெயக்குமார்,
   ட்ரைலர்லயே அறுசுவை விருந்து கொடுத்திருக்கிறார் நம் ஹாலிவுட் தமிழன்.மெயின் பிக்சரில் அட்டகாசமான பஃபே காத்துக்கிட்டிருக்கு.

   அதிருக்கட்டும், “பராசக்தி”னு ஒரு வார்த்தைய இந்தப் பதிவுல எழுதியிருக்கேன் தான், இல்லேங்கல; அதுக்காக, தமிழ் சினிமால வசனம் / கவிதை எழுதுற எல்லோருமே லட்சம் கோடிகளில் புரள்றது மாதிரியும், மனைவிகள், மூணு துணைவிகள், இத்யாதி இத்யாதிகள்’கூட னு இருக்குறது போலவும் சொல்றது டூ மச், த்ரீ மச், செவன் மச்.
   என்னவோ போங்க! நீங்க ஆசைப்படுறது எல்லாம் உங்க ஆசீர்வாதத்தால எனக்கு வாய்க்கப் பெறட்டும்! 🙂 🙂

 2. Pingback: etamil.net
 3. getting creativity is a nature!

  it is a god’s gift!!

  you recognize lately through the film industry!!!

  through the tamil langauae it’s really nature of the thought!!!!

  thank you for giving the superb verse!!!

 4. Very good song, background music and lovely expression of the singer. Dhool Prakash. Congrats.

  Senthil

 5. Congrats Anna. Convey my wishes to Kavitha akka and her husband. Kadaisi vara enna varinae sollala. Blog is very nice 🙂

 6. கவிதை எழுதுவீர்களா பிரகாஷ் ..? மிக அருமையான தெளிவான உரைநடை உங்களுடையது ..காந்தி நிகேதனின் நினைவுகளை நீங்கள் எழுதியிருந்ததை இந்தத் தளத்தில் படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன் ..நீங்கள் ஏன் கதை எழுதக் கூடாது ..?

Leave a Reply

Your email address will not be published.