எனக்கும், சுப்ரமண்ய பாரதிக்கும் ஒரு விஷயத்தில் பொருத்தம். இருவருக்குமே, கணக்கு பிடிக்காத பாடம். கணக்கு, பிணக்கு ஆமணக்கு என்று பாரதி எழுதியதைப் பள்ளியில் படித்ததும் கணக்கு எனக்கு வராமல் இருப்பதை ஒரு பெருமையாகவே எண்ணத் தொடங்கினேன். எனக்கும்,கணக்குக்கும் ஏழரை என்றெல்லாம் சொல்லக் கூடாது.ஏழாயிரத்து எழுநூற்று எழுபத்து ஏழரை என்று தான் சொல்லவேண்டும்.அவ்வளவு தொலைவில் நான் கணக்கை வைத்திருந்தேன்.
பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது இந்தியர்கள் என்று தெரிந்ததும் நம் மீதே எனக்குக் கோபம் வந்த்து. அரேபியர்கள் அல்ஜிப்ராவையும்,கிரேக்கர்கள் ஜியோமெட்ரிக்கையும் கண்டுபிடித்திருந்தாலும் அவர்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை.எனக்கு சுத்தமாகப் புரியாத விஷயங்களைப் பற்றி நான் ஏன் கண்டுகொள்ள வேண்டும்? பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களோடு சண்டை போடும் போது மட்டும்தான் நான் ஜியாமெட்ரிக் பாக்ஸைத் திறந்திருக்கிறேன்-அந்தக் கூரான இரண்டு ஆயுதங்களுக்காக.
எப்படியோ பத்தாம் வகுப்பில் கணக்குக் கண்டத்தைக் கடந்து, பதினொன்று,பன்னிரண்டாம் வகுப்புகளில்,கணக்கு இல்லாத வொகேஷனல் குரூப்பை எடுத்து ஹாயாகப் பாஸ் பண்ணி வந்து விட்டேன். பி.வி.எஸ்.சியிலும்,எம்.பி.ஏவிலும் கணிதம் வரும் பாடங்களில் பரீட்சைக்கு முன் கம்பைன் ஸ்டடியோ, பரீட்சைகளில் (!!) கம்பைன் டிஸ்கஷனோ (!!) நட்த்தி ஒருமாதிரி ஒப்பேத்தி விட்டிருந்தேன்.
கணக்கைப் பற்றி இனி நினைத்துக் கூடப் பார்க்கத் தேவையில்லை என்று வசந்தமாகப் போய்க் கொண்டிருந்த என் வாழ்வில் போனமாதம் புயல் வீசியது. மார்க்கெட்டிங் துறை சீனியர்களுக்கான பகுதி நேரமாக ஒரு வருட அட்வான்ஸ்டு ப்ரோக்ராம் ஒன்றைப் பயில ஐ.ஐ.எம் கல்கத்தா வில் விண்ணப்பித்திருந்தேன். அதற்காகப் பெங்களூர் சென்டரில் போய் ரிஜிஸ்ட்ரேசன் ஃபீஸ் கட்டி விட்டு வரும்போதுதான் நுழைவுத் தேர்வைப் பற்றிச் சொன்னார்கள். அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு ஒன்று வைக்கப்படும். அதில் வெற்றி பெற்றால் தான் உங்களை சேர்த்துக் கொள்வோம்.இல்லையென்றால் நீங்கள் முன்பணமாக்க் கட்டிய பன்னிரண்டாயிரத்தில் அப்ளிகேஷன் தொகையான ஆயிரத்தை மட்டும் பிடித்துக் கொண்டு மீதியைத் திரும்பக் கொடுத்து விடுவோம் என்றார்கள். நான், வடை போச்சே என்று ஃபீல் பண்ணும் வடிவேலுவைப் போல என்னை உணர்ந்தேன். இதில் புயல் எங்கு வந்ததென்றால் அந்தப் பரீட்சையில் பெரும்பகுதி கணக்குக் கேள்விகள் என்பதுதான்.
வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் விபரம் சொன்னதும், சட்டென்று, ப்ரியாகிட்ட ஹெல்ப் கேக்கலாம் என்றாள். ப்ரியா, என் மனைவியின் பத்து வருடத்தோழி.கணக்கில் புலி. எவ்வளவு கடினமான கணக்கையும், சும்மா இடது கையாலேயே அநாயாசமாகப் போட்டு ஊதித் தள்ளி விடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ப்ரியாவின் வீட்டுக்கு சென்றோம்.முன்கூட்டியே போன் செய்திருந்ததால், தயாராகவே இருந்தார்.டிவியில் டிஸ்கவரி சேனல் ஓடிக் கொண்டிருந்த்து. வால்யூமைக் கொஞ்சம் குறைத்தார், அவர் கணவர்.
சாம்பிள் கொஸ்சன் பேப்பரை வாங்கிப் பார்த்தவர் கேட் எக்சாம் மாடல்ல இருக்கே. நெகடிவ் மார்க்கெல்லாம் இருக்குமே என்று பீதியைக் கெளப்பினார். வாழ்க்கையில் முதன் முதலாக மைனஸில் மார்க் ரிசல்ட் வாங்கும் கோரக் காட்சி என் கண்முன்னால் விரிந்தது. கால்குலேட்டர் எல்லாம் அலவ் பண்ண மாட்டாங்களே! என்று அநியாயத்திற்குக் கவலைப்பட்டார்.அலவ் பண்ணினாலும் பெரிதாக ஒன்றும் நான் கிழித்து விடப்போவதில்லை என்பது வேறு விஷயம்.
க்வாண்டிடேடிவ் ஆப்டிடியூடுக்கு அகர்வால் தான் பெஸ்ட், ஆனா, அது இப்ப இல்லையே என்று அங்கலாய்த்தார்.டி.வி.யில் டிஸ்கவரி சேனலில் மான் ஒன்றைப் புலி கணக்குப் பண்ணிக் கொண்டிருந்த்து.பின்,அதனாலென்ன, ”கேட்” எக்ஸாமுக்காகப் பிரிப்பேர் பண்ற கைட்ஸ் இருக்குது. இது ஹெல்ப் பண்ணும் என்று சொல்லி, ஷெல்ஃபில் இருந்து ஒரு ஐந்தாறு புத்தகங்களை என்னிடம் கொடுத்தார்.
சாம்பிள் பேப்பரில் இருந்த ஒரு சில கணக்குகளை எனக்கு சொல்லித்தர ஆரம்பித்தார். உங்களுக்கு எல்.சி.எம் தெரியும்ல!என்றதும், மி.சி.ம.தானே, தெரியும் என்றேன்.(நான் பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியம்) என் மனைவி முறைத்து, தமிழ் மீனிங் தெரியுமான்னு கேக்கல, எல்.சி.எம் போடத்தெரியாமானு கேக்குறா என்றாள். இல்லங்க.. மறந்து போச்சு என்றதும், மட மடவென்று ஒரு நோட்டில் மி.சி.ம. போடுவது எப்படி என்று விளக்கினார்.எல்.சி.எம் முடித்துப் பார்க்கையில் ஜோடி ஜோடியாக எண்கள் ஒன்றன் கீழ் ஒன்றான ஊஞ்சலில் ஆடி நின்றதாய் எனக்குத் தோன்றியது. அவர் போட்ட வேகத்துக்கு இவர் இடது கையால் அல்ல,இடது காலால் கூட கணக்கை அநாயாசமாகப் போடுவார் என்று தோன்றியது.
அடுத்த கணக்கைப் போட்டவர், இதுக்கு வெக்டார் யூஸ் பண்ணிப் போடுங்க என்றார். வெக்டார்— என் பள்ளியில் அதைத் தமிழில் என்ன சொன்னார்கள் என்று யோசித்தேன். வெண் திரையில் ஒன்றுமே ஓடவில்லை.
அடுத்ததாக வந்த ஒரு புரியவே புரியாத ஒரு கணக்குக்கு, இத x னு வச்சிக்குங்க. இத Y னு வச்சிக்குங்க என்று வலப்புறமும் இடப்புறமுமாக எண்களைப் பந்தாடிக் கொண்டிருந்தார். கடைசியில் விடை வந்ததும் புரிந்தது போலவும், புரியாதது போலவும் குழப்பமாக இருந்தது. புரியலன்னா, கேளுங்க என்றார். கணக்கு தானே சொல்லிக் குடுக்குறீங்க, அதுல எதுக்கு ஏ,பி,சி, எக்ஸ்,ஒய் எல்லாம் வருது என்று கேட்க நினைத்து, பின் புரியுது என்று தலையை ஆட்டினேன்.என் மனைவியின் கைக்கெட்டும் தூரத்தில் என் கன்னம் இருந்ததும் ஒரு காரணம்.கல்யாணமாகி இந்த ஒன்றரை வருடத்தில் சேஃப்டி ஃபர்ஸ்ட் என்பது பசுமரத்தாணியாக ஆழ்மனதில் நன்றாகப் பதிந்து விட்டிருந்த்து.
இரண்டு மூன்று கணக்குகளை மட மட வென்று போட்டவர், அதற்கடுத்து நான்காவது, ஐந்தாவது செல்கையில், கொஞ்சம் யோசித்து,இது ரொம்ப அட்வான்ஸ்டு லெவலா இருக்கு,எனக்கே எப்பிடி சால்வ் பண்றதுன்னு தெரியல என்று தலையை சொறிந்தார். .அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு, ஏமாற்றமாய் உதட்டைப் பிதுக்கி, இதெல்லாம் மேத்ஸ்ல பி.ஜி. பண்ணவங்க தான் தொடவே முடியும் என்று நிராயுதபாணியாக அல்கொய்தா குரூப்புடன் சண்டையிடப் போகிறவனைப் பார்ப்பது போல் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்.
சரி விடுங்க! சாய்ஸ்ல விட்டுர்றேன் என்றேன்.டிவியில் மானைக் கெளவிப் பிடித்தது புலி.
கணக்குகள் எல்லாம் கஷ்டமாக இருப்பதைப் பார்த்து என்னை விட ப்ரியா அதிகம் டென்ஷன் ஆனார். பரீட்சை எழுதப் போவது நானா, இல்லை அவரா என்று ஒரு கணம் எனக்கு சந்தேகம் வந்தது. எனது ஐஸ் கூல் ஆட்டிடியூடைக் கண்டு என் மனைவியும் டென்ஷன் ஆனார். நாளைக்குப் பரீட்சை இருக்கேனு கொஞ்சம் கூட கவலையே இல்லாம எப்பிடி இருக்கார் பாரு என்று ஆற்றமாட்டாமல் சொன்னாள்.நான் டென்ஷனாய் முகத்தை மாற்றிக் கொள்ள முயன்று அந்த மானைப் போல தோற்றுக் கொண்டிருந்தேன்.
சட்டென்று ஞாபகம் வந்தவராய்,ஹே, நம்ம சந்திரப்பிரபா எம்.எஸ்ஸி ஸ்டாடிஸ்டிக்ஸ். அவங்களப் பிடிச்சா போதும். ஒரு ஒன்னவர் டூ அவர்ஸ்ல கோச்சிங் குடுத்துருவாங்க என்று எக்ஸாம் கொஷ்சன் பேப்பரே அவுட் ஆனது போல குதூகலித்தார்.ஆனா, அவங்க நம்பர் என்கிட்ட இல்லையே… என்றவர், இரு .சிவநாதன்கிட்ட இருந்து வாங்குறேன் என்று அவருக்கு ஃபோன் செய்தார்.நம்பர் வாங்கி, சந்திரப்பிரபா லைனில் கிடைத்து அவரிடம் கேட்ட போது, மறு நாள் காலை அவருக்கு முக்கிய வேலைகள் இருப்பதால் தன்னால் சொல்லித்தர முடியாதென வருந்தினார்.என் களிமண் மூளை ஒரே நாளில் ராமானுஜனின் கணித மூளையாக உருமாறும் பரிணாமச் சங்கிலியின் தொடர்ச்சி, விட்டுப் போனதாய் உணர்ந்தேன்.
அதற்கப்புறம் தோழிகள் இருவரும் யார் யாருக்கோ ஃபோன் செய்து, என் மண்டையில் கணக்குக்காக எமர்ஜென்ஸி பூஸ்டர் பொருத்த, செய்த முயற்சிகள் எதுவும் வெற்றிபெறவில்லை.ஒரு அருமையான ஞாயிறு காலைப்பொழுதை கணக்குத் தெரியாதவனிடம் போராடிக் கழிப்பதற்கு யாருக்குத்தான் மனமிருக்கும்?
இப்படி அலுவலக நண்பர்கள், அவர்களுக்குத் தெரிந்த நண்பர்கள் என ஃபோன் மேல் ஃபோன் செய்ததில் இந்நேரம் பெங்களூரில் முக்கால்வாசிப் பேருக்கு நான் கணக்கில் கையாலாகாதவன் என்று தெரிந்து போயிருக்கும். இவள் ஏன் இப்படிப் பண்ணுகிறாள்? கழுதை பாஸோ ஃபெயிலோ, காதும் காதும் வச்ச மாதிரி பரீட்சையை எழுதிட்டு நாம பாட்டுக்க இருக்கலாம்னா, அது முடியாது போலருக்கே என்று நினைத்துக் கொண்டேன்.
இதில் பாதிப் பேராவது ஞாபகம் வைத்திருந்து கேட்பார்கள்- “என்ன ஆச்சு உங்க ஹஸ்பெண்ட் எழுதின எக்ஸாம்?” என்று. எனக்கென்ன? கேவலப்படப்போவது நானில்லையே! கொஞ்ச நாளைக்கு ஃபுட்வேர்ல்ட்,ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற, அவர்கள் எல்லோரும் வந்து போகும் பொது இடங்களுக்குப் போகாமலிருந்தால் இதைப் பற்றி மறந்து போக வாய்ப்பு இருக்கிறது.
சரி.நான் கணக்கு தவிர மத்த போர்ஷனுக்கு பிரிப்பேர் பண்றேன் என்றேன்.
எவ்வளவு ஃபீஸ் கட்டினீங்க?
பன்னண்டாயிரம். செலக்ட் ஆகலன்னா, ஆயிரம் ரூபா போக மீதியத் திரும்பக் குடுத்துருவாங்க என்றேன்.ஆயிரம் ரூபாயை காந்திக் கணக்கில் கட்டிய மனநிலை என் மனைவியின் முகத்தில் தென்பட்ட்து.
மறுநாள் காலை வழக்கத்தை விட தாமதமாக எழுந்தேன். குளித்து, சாப்பிட்டு விட்டு ஒரு மூன்று மணிநேரம் எல்லாப் புத்தகங்களையும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் தெரிந்த்து இந்த மாதிரித் தேர்வுக்கெல்லாம் ஒரு ஒருமாத காலத்திற்காவது பயிற்சி செய்திருக்க வேண்டுமென்று.
மதிய சாப்பாட்டின் போது, எக்ஸாம் எழுதிட்டு வர நைட்டு 10 மணிக்கு மேல ஆகும். அதனால நல்லா சாப்பிடுங்க என்று அன்புத் தொல்லையில் ஒன்றரை மடங்கு சாப்பாடு உள்ளே சென்றது.சாப்பிட்டு விட்டு சோஃபாவில் சாய்ந்து படித்துக் கொண்டிருந்தவன் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. என் மொபைல் ஒலித்ததும் முழித்துக் கொண்டு எடுத்தேன். என் தோழி கவிதா, ஆல் த பெஸ்ட் சொல்லி விட்டு, ராகு காலத்துக்கு முன்னாலயே கெளம்பிரு என்றாள்.
ஃபுட்வேர்ல்ட் போய்விட்டுத் திரும்பிய என் மனைவி, என்ன, நல்லாப் பிரிப்பேர் பண்ணீங்களா என்றவள், என் முகத்தைப் பார்த்ததும்,தூங்கினீங்களா? என்று அதிர்ச்சியானாள்.இன்னும் கொஞ்ச நேரத்தில் பரீட்சைக்குக் கிளம்ப இருக்கையில் எனக்குத் தூக்கம் வந்ததை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.இல்ல..கொஞ்ச நேரம் மூளைக்கு ஓய்வு குடுத்தா, பரீட்சை எழுதறப்ப ஃப்ரஷ்ஷா யோசிக்க முடியும் என்கிற என் பதில் திருப்தி அளிக்கவில்லை போலும். நல்ல வேளையாக, போன ஞாயிற்றுக் கிழமைதான் ஹாலை சுத்தம் செய்திருந்தோம். அதனால் கைக்கு வசதியாக சிக்கக் கூடிய பல பொருள்கள் பரணில் போயிருந்தன.தவிரவும் நான் மண்டையில் கட்டுப் போட்டுக் கொண்டு பரீட்சை எழுதுவதை என் மனைவியே விரும்பவில்லை போலும். இன்றைக்கு ராசிபலனில் என் ராசிக்கு கிரேட் எஸ்கேப் என்று போட்டிருக்கும் போல.
ஊரெல்லாம் சந்தோஷமாக இருக்கும் ஒரு ஞாயிறு மாலையில் நான் மட்டும் பரீட்சை எழுதச் சென்றேன்.இந்தாங்க என்று பேனா,இரண்டு மூன்று பென்சில்கள்,ஷார்ப்னர்,அழிரப்பர் என்று ஒரு ஸ்டேசனரி மூட்டையையே என்னிடம் கொடுத்தாள்.அறுக்க மாட்டாதவனுக்கு எதுக்கு அம்பத்தெட்டு அரிவாள்கள் என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.
மணி நாலேகால் என்பது எனக்கு எண்களாகத் தெரியாமல் பின்னத்தில் தெரிந்தது.சாலையில் செல்கையில் பார்க்கின்ற வாகனங்களின் ரிஜிஸ்ட்ரேஷன் எண்கள் கூட நான்கு இலக்கக் கணித எண்களாகவே தோன்றின.ஆறரை மணி பரீட்சைக்கு ஐந்தரைக்கே போய் விட்டிருந்தேன்.நான் தான் முதல் பலியாடு.ஒரு ஹாலில் பத்துப் பதினைந்து மேஜைகள்.ஒவ்வொரு மேஜையிலும் உடல் மெலிந்ததாய் திசைக்கொன்றாய் நான்கு கம்ப்யூட்டர்கள்.நான் இருப்பதிலேயே ஓரமாக இருந்த ஒரு கம்ப்யூட்டரைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்தேன்.பின்னே! யாரும் என்னைப் பார்த்து, காப்பி அடிக்கக் கூடாதல்லவா!
லாக் இன் பண்ணி எழுத ஆரம்பிங்க என்றார்கள்.எப்போது ஆரம்பிக்கிறோமோ, அதிலிருந்து தொண்ணூறு நிமிடங்கள் பரீட்சை நேரம். சீக்கிரம் ஆரம்பித்தால் சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பி விடலாம் என்றெண்ணிக் கொண்டேன்.ஐந்து நாற்பதுக்கே, சரியான ராகு காலத்தில் நான் என் பரீட்சையை எழுத ஆரம்பித்தேன்.
நெகடிவ் மார்க் இருக்கா? என்கிற மில்லியன் டாலர் கேள்வியைக் கேட்டேன்.இல்லை என்று பதில் வந்ததும், என் கால் நடுக்கம் நின்றதை உணர்ந்தேன்.
சுண்டக்கா கால்பணம்,சுமை கூலி முக்கால் பணம் என்பது போல, கேள்விகள் ஆறேழு வரிகளிலும், அதற்கான இன்ஸ்ட்ரக்ஸன்ஸ் பத்துப் பனிரெண்டு வரிகளிலும் இருந்தன.
கொஞ்சமே கொஞ்சமாக இருக்கும் என் மூளைத் திறனை முதலிலேயே கணிதக் கேள்விகளுக்கு செலவழித்து வீணாக்க விரும்பாத நான் முதலில் மற்ற பகுதிகளை விடையளிக்க ஆரம்பித்தேன். வெர்பல் எபிலிட்டி,அனலிட்டிகல் எபிலிட்டி,ரீடிங் காம்ப்ரிஹென்ஷன் என்று ஒவ்வொன்றாக விடையளித்தேன்.அவையும் கணக்குக்குக் கொஞ்சமும் சளைக்காமல் இருந்தன.
மாதிரிக்கு ஒன்று…
நவீன தலைமைப் பண்புக் கோட்பாட்டின் படி கீழ்கண்ட எந்த செயல் மிகவும் மோசமானது?
ஒரு பணியாளர் வேலைக்கு வராமல் ஆப்சென்ட் ஆனால்
a)அவரை அநாகரீகமாகத் திட்டுவது
b)அவரைப் பணியில் இருந்து நீக்குவது
c)அவர் மீது வன்முறையைப் பிரயோகிப்பது
d)அவரை சக பணியாளர்கள் முன்பு அவமானப் படுத்துவது
மேலும் இதைப் போலவே கேள்வியும், நான்கு ஆப்சன்களும் கொடுத்து அதற்கடுத்து மேற்கண்ட செயல்களை எந்த வரிசைப் படி செய்வாய் என்று
1)adcb
2)bcad
3)dacb
4)dcab
என்றும் கேட்டு திக்கு முக்காட வைத்தனர். இவைகளை எல்லாம் முடித்து விட்டு,ஒரு வழியாகக் கடைசியில் கணிதத்திற்கு வந்தேன்.முதல்முறை படித்தாலே புரியும்படி எத்தனை கேள்விகள் இருக்கின்றன என்று பார்த்தேன். விரல் விட்டு எண்ணி விடலாம் போல.ஒவ்வொரு கேள்வியும் அதில் இருந்த நான்கு ஆப்சன்களும் என்னைப் பார்த்து சிரித்தன. எந்தக் கேள்விக்கு எந்த மெத்தட் பயன்படுத்தி விடைகளைக் கண்டறிவது என்று கூடத் தெரியவில்லை. அடுத்தமுறை அதையும் ஃபார்முலா போல மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.நேரமாகிக் கொண்டிருந்தது.நெகடிவ் மார்க் இல்லையென்பதால்,எல்லாக் கேள்விகளுக்கும் விடையளித்து விட வேண்டும்.நம்ம அதிர்ஷ்ட்த்திற்கு ஒன்றிரண்டு சரியாக இருக்கும் என்று, கன்னா,பின்னாவென்று மெளஸை நகர்த்தி கடைசியில் கர்சர் எந்த விடையில் நிற்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்தேன்.பூவா, தலையா போட்டுக் கூட விடையைக் கணிக்க முடியாது-ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு ஆப்சன்கள் கொடுத்திருந்தார்கள்.
ஆறரை மணிக்கு அந்த ஹாலில் பத்துப் பன்னிரெண்டு பேர் அமர்ந்திருந்தோம்.வந்தவர்களில் பெரும்பாலானவர்களின் முகம் பேயறைந்ததைப் போல இருந்தது. சிலர் முகத்தில் கேள்விக்குறிகளும் அதிர்ச்சி ஸ்மைலிகளும் தாண்டவமாடின.சிலரைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிந்தது- ட்ரிக்னாமெட்ரி,அல்ஜிப்ரா,வெக்டார்களை எல்லாம் சைட் டிஷ்ஷாக சாப்பிட்டு வந்திருந்தவர்கள் போல இருந்தார்கள்…மானிட்டரைப் பார்ப்பதும், ரஃப்ஷீட்டில்,கணக்கைப் போடுவதும், தகுந்த விடையைக் கிளிக் செய்தும், அடுத்தடுத்த பக்கங்களுக்குப் போய்க்கொண்டும் பிசியாக இருந்தார்கள்.. அறுபது கேள்விகளுக்கு, தொண்ணூறு நிமிடங்களில் விடையளித்தாக வேண்டும்.
கொடுக்கப் பட்டிருந்த ரஃப் ஷீட்டில் எல்லோரும் கணக்கு செய்து விடையை வருவித்துக் கொண்டிருக்க என் ரஃப் ஷீட் மட்டும் புத்தம் புதியதாய், ஒரு புள்ளி கூட இல்லாமல் வெறுமையாய் இருந்தது.மானிட்டரின் ஒரு மூலையில் டைம் பாம்-இன் டிக் டிக் போல இறங்கு வரிசையில் மீதமிருந்த நிமிடங்கள் குறைந்து கொண்டே வந்தன.எல்லாக் கேள்விகளுக்கும் விடையளித்து விட்டு, மீண்டும் முதலில் இருந்து விடைகளை சரிபார்க்கத் துவங்கினேன்.ஒரு சில கேள்விகளுக்கு வேறு பதில்களைத் தேர்வு செய்யலாமோ என்கிற குழப்பம் வந்ததால், வேண்டாம் என்று அப்படியே விட்டு விட்டேன்.
சரியாக மூன்று நிமிடங்கள் இருக்கையில் சப்மிட் பட்டனை அழுத்தினேன்.
மானிட்டரில், நீங்கள் வெற்றிகரமாக உங்கள் பரீட்சையை முடித்து விட்டீர்கள் வாழ்த்துகள் என்று வந்தது.எல்லோரும் பரீட்சையில் மும்முரமாக இருந்தனர். பயத்தை மறைத்தபடி, எப்போது ரிசல்ட் வரும் என்று கேட்டேன். மார்ச் முதல் வாரத்தில் வரும். ஐஐஎம் மில் இருந்து அவர்களே உங்களைத் தொடர்பு கொள்வர் என்றார் மைய உதவியாளர்.
சீக்கிரமே வீடு திரும்பின என்னைப் பார்த்து என் மனைவி,எக்ஸாமுக்குப் போனீங்களா போகலையா? என்று கிட்ட்த்தட்ட அலறினாள்.நான் நடந்ததை சொன்னேன்.சரி,அதுவும் நல்லதுக்குத் தான் சீக்கிரமே எழுதி, சீக்கிரமே வந்துட்டீங்களே என்றாள்.எப்பிடிப் பண்ணினீங்க என்ற கேள்விக்கு, கணக்கு மட்டும் கொஞ்சம் டஃப்பா இருந்தது. மத்ததெல்லாம் நல்லா இருந்துச்சு. ஆனா நிறைய கேள்விக்கு நாலு ஆப்சனுமே சரியா பொருந்தற மாதிரியே இருந்தது என்று மழுப்பலாக மையமாக ஒரு பதில் சொன்னேன். ரிசல்ட் எப்படி வந்தாலும் நான்தான் அன்னிக்கே சொன்னேனே என்று சொல்லித் தப்பித்துக் கொள்வதற்காக!
ஒரு சோம்பேறித் தனமான சனிக்கிழமை மாலையில் என் மொபைலுக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்த்து.உங்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்டு விட்டோம். எங்கள் வலைத் தளத்தில் வந்து பாருங்கள் என்று. சரிதான்! டிஜிட்டல் ஆப்பு நமக்கு என்று எண்ணிக் கொண்டேன்.வலைத் தளம் போனால் என் ஐடி எண்ணைக் கேட்டது. எனக்குத் தான் எண்கள் என்றாலே பிடிக்காதே. அதெல்லாம் யார் நினைவில் வைத்திருந்தார்கள். எனது ஏ.டி.எம் பாஸ்வேர்டைக் கூட நான் ஒவ்வொரு முறையும் என் மனைவியிடமோ, அல்லது கால் சென்டருக்கோதான் போன் செய்து கேட்பேன். 🙂 எவ்வளவு ஞாபகப் படுத்தினாலும் என் மொபைல் நம்பரையே நானே மறந்து விடுவதால் நான்கே நான்கு டிஜிட் எண்களும்,மீதி ஆறு டிஜிட்டுக்கு பூஜ்யங்களும் இருக்குமாறு ஒரு மொபைல் நம்பர் வைத்திருக்கிறேன்.(பார்ப்பவர்களுக்குப் படா ஃபேன்ஷியாகத் தெரியும் இந்த நம்பருக்குள் இத்தனை ஓட்டைகள் இருப்பது எனக்குத் தான் தெரியும்) அப்படியிருக்கையில் இந்த ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணை எல்லாம் நான் எதற்காக நினைவு வைத்திருக்கிறேன்? சென்டருக்கு போன் செய்து ரிசல்ட் வந்து விட்டதாமே என்றேன். அதற்கு , நீங்கள் பாஸாகி விட்டீர்கள் தானே என்று என்னிடமே கேட்டார். இல்லை. என் நம்பர் மறந்து விட்ட்து, என்றவுடன் இருங்கள்! என்னிடம் இருக்கிறது , நான் பார்த்துச் சொல்கிறேன் என்றார். கொஞ்ச நேரம் கனத்த மெளனம். ”ஸாரி சார், நீங்க செலக்ட் ஆகவில்லை” என்கிற பதிலை எதிர்பார்த்து, அதற்கு எப்படி பதிலளிப்பது என்று பதட்டமாக நான் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தேன். கங்கிராஜுலேஷன்ஸ் நீங்க செலக்ட் ஆயிட்டீங்க என்றார். சரி. ஐடி நம்பரை மாற்றிப் போட்டு விட்டாரோ என்று நினைத்து, கொஞ்சம் கன்ஃபர்ம் பண்ணுங்க என்றேன். சரியாகத் தான் போட்டிருக்கிறேன். நீங்க பிரகாஷ் ராஜகோபால் தானே என்றார். ஆமாம் என்று அதிசயித்தேன்.அடுத்த வாரத்திற்குள் வந்து அடுத்த தவணையான ஐம்பதாயிரத்தைக் கட்டிவிடுங்கள் என்று நன்றி சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தார்.
நான் சந்தோஷத்துடன் என் மனைவிக்கு ஃபோன் செய்தேன். நான் செலக்ட் ஆன விபரத்தை சொன்னவுடன், அடப்பாவமே என்றாள். அவளாலும் நம்பமுடியவில்லை.ப்ரியாவிற்கு போன் செய்து சொல்லி அவருக்கு நன்றி சொன்னபோது, அவரும் ,நம்பவே முடியல, நீங்க என்னவோ சுமாரா பண்ணியிருக்கிங்கன்னு சொன்னீங்க ஆனா, செலக்ட் ஆகிட்டிங்க என்றார்.மறுநாள் சென்டருக்கு நேரில் சென்று ஆஃபர் லெட்டரைக் கைகளில் வாங்கிப் படித்ததும் தான் எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை வந்தது.
Go down deep enough into anything and you will find mathematics என்று எங்கோ படித்திருக்கிறேன்.
கணக்கை இனிமேலாவது ஒழுங்காகக் கற்க வேண்டும் என்று ஆழமாக நினைத்துக் கொண்டேன்.
படங்கள் : இணைய தளத்திலிருந்து…
கலக்கலோ கலக்கல்.. முதலில் வாழ்த்துக்களைப் பிடி.. செலக்ட் ஆனதால் இது நகைச்சுவை.. இல்லையெனில் எவ்வளவு பெரிய ட்ராஜிடி ஆகியிருக்கும்? இந்தக் கொடுமைக்குத்தான் நான் எந்த தேர்வையும் எழுதுவதில்லை..
:-))
All the best da. The narration was hilarious. Sujatha pani konjam irukunu nenaikiren. Keep writing
Raj
ha
ha
ha
ha ha ha ha ha
ho ho ho ho ho ha ha ha ha
ha ha ha
oho ha oho ha
ha ha
ha ha
ha ha ha ah
Unmayileye vayiru valikudhu Dr.
Neraya "Uvamaigal" use panirukeenga. Wall Clock Pakum podhu, time "Binnam" ah therinjadhunu sonnadhu nalla irunduchu. (MBA entrance exam prepare panninadhu gnapagam vandhuchu)
your journed towards learning never stops i believe.
All the best…
Danny.
Hi, You may be a weak mathematician but i see a good writer………… keep writing.
I enjoyed reading this……..picture was running in front of my eyes….
மனைவி அடிப்பாள் என்பன போன்ற சம்பிரதாயமான அவுட் டேட் ஆகிவிட்ட காமெடி வரிகளை மட்டும் நீக்கிவிட்டு பார்த்தால், நல்ல கட்டுரை, நல்ல ஃப்ளோ.
வாழ்த்திய ஜெயக்குமார்(கானகம்), ராஜ்,டேனி,அனைவருக்கும் நன்றி.
டேனி, எனக்கும் நம்.எம்.பி.ஏ ஞாபகங்கள் நிறையத் தலைதூக்கின.
ஹரன்பிரசன்னா,
அருமையான விமர்சனத்திற்கு நன்றி
அடுத்தமுறை, திருத்திக் கொள்கிறேன்.
சந்திரா,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
அந்த ஞாயிறு காலை உங்களுக்கு நேரம் கிடைத்திருந்து,எனக்குக் கணக்கு சொல்லிக் கொடுத்திருந்தால், இந்தக் கட்டுரை இன்னும் கூட சூப்பராக வந்திருக்கும் 🙂 🙂
எனக்கென்ன! தொடர்ந்து எழுதுவேன் – படிப்பவர்கள் பாடுதான் கஷ்டம் 🙂
என் கட்டுரையை எனக்கு முன்னரே எழுதி வெளியிட்டமைக்கு நன்றி.:)
நான் படிக்கிற காலத்திலயும் இப்படிதான் படிக்கற பசங்க " நான் எதுவுமே படிக்கலை.என்ன பண்ண போறேனோ தெரியலை" என்று சொல்லி நம்மை ஆசுவாசபடுதுவார்கள். பின்னர் ரிசல்ட் வரும்போது நமக்கும் அவனுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம் இருப்பது தெரியும். அவனோட படிக்கலைக்கும் நம்மளோட படிக்கலைக்கும் நெறைய வித்யாசம் உண்டு என்பதும் நாம் நிஜத்தை நிஜமாகவே சொல்கிறோம் என்பதும் புரியும் போது வரும் வரும் எரிச்சல் இந்த கட்டுரையில் ஞாபகம் வந்தது.
அருமையா எழுதுறிங்க. மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள். தமிழ் correct ah nu தெர்ல. I loved the way you write.
mathematics is always tough if you do not have interest in any subject then it will be boring!!!!!!
I was really a good narration with lots of spices. Carry on Prakash.
Senthil
I KNOW YOUR ABILITY. NOW I CAN REMEMBER THE DIARY SCIENCE VIVA .
PROF : WHAT IS TITRABLE ACIDITY ?????
PRAKASH: TITRABLE ACIDITY IS …..TITRABLE ACIDITY IS
PROF: S COMMON…. YOU KNOW….COMMON…..
PRAKASH: TITRABLE ACIDITY IS …..TITRABLE ACIDITY IS….
PROF: TITRABLE ACIDITY IS…….(PROFESSOR HIMSELF VOMITED EVERYTHING)
STILL I REMEMBER THE SCENE PRAKASH……
CORRECT SPELLING FOR DIARY AS DAIRY
ha ha ha… 😉 enakum englishla pidkadha orey varrtha “maths” , unga cell no paath appo romba pidichu irundhadhu.. but adhuku pinaadi ipadi oru matter irukunu ippodan theriudhu… 😉
Deepika Ravindran,
என் இனமடா நீ!
😉 😉
…நான் பாஸ் பண்ணவில்லை… பரீட்சையையும் ரகசியமாத்தான் எழுதினேன். (மனைவிக்கு தெரியாது)அதனால் எந்த பிரச்சனையும் இல்லை… ஆமாம் நீங்க என்ன பரீட்சை எழுதினீங்க?….அடடா நானேதான் ஒலரிட்டெனா……. கோகி.
தமிழில் எழுத்தாளர்கள் தேவன் கல்கி பா.ராகவன் புதுமைபித்தன் இப்படி எல்லோரும் என்நினைவில்வந்தார்கள்இவர்களைநீ படித்திருக்க வாய்ப்பில்லை நிறையஎழுது பத்திரிக்கைக்குஅனுப்பலாம்
புத்தகமாக வெளியிடலாம்
அக்கா, நீங்கள் சொன்ன அத்தனை பேர்களுடைய புத்தகங்களையும் நான் படித்துள்ளேன்