தந்தையாதல்

மூன்று வருடங்களாகி விட்டன-
“எனக்கு நார்மல் டெலிவரி வேண்டாம், சிசேரியனே செஞ்சிருங்க டாக்டர்”
born baby
பன்னிரெண்டு மணியாகி விட்டது படுப்பதற்கு. மூன்று மணிக்கு என்னை எழுப்பி, “ஹாஸ்பிடல் போகணும்” என்றாள் உமா. டெலிவரிக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன என்று முன் தினம் சாயங்கால ஹாஸ்பிடல் விசிட்டில் உறுதி செய்திருந்தார்கள்.

சரி, சும்மாவாச்சும் போய்ட்டு வருவமே என்று ஃபோனை எடுத்து முன்பே குறித்து வைத்திருந்த, வீட்டுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாக இருக்கிற டாக்சி டிரைவரை எழுப்பினேன். இரண்டாவது ரிங்கில் எடுத்தவர், சார் இப்பதான் டென் ஹவர்ஸ் டிரைவிங்ல அவுட்ஸ்டேஷன் டூர் போய்ட்டு வந்து இறங்கிப் படுத்துக் காலை நீட்டறேன் என்றார்.
இரண்டாமவரை அழைத்ததில் அஞ்சு நிமிஷத்தில் சொன்னவாறே வந்தார்.

தன் சிநேகிதிகள் கொடுத்த ஐடியாப் படி வலி வந்தால், ஹாஸ்பிடலுக்குப் போகும் போது என்னென்ன கொண்டு செல்ல வேண்டும் என்கிற ஒரு 25 ஐட்டங்கள் கொண்ட லிஸ்ட்டை பிரசவ தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே ரெடிபண்ணி அவைகளை எல்லாம் ஒரு பெரிய பேக்கில் ஏற்கனவே தயார்.

ரூமுக்குள் போய் அந்தப் பெரிய பேக்கை எடுத்துக் கொண்ட உமா, வாங்க போகலாம் என்று வண்டிக்குள் ஏறினாள்.

அதிகாலை நான்கு மணிக்கு அந்த மருத்துவமனையின் எமர்ஜென்சி கதவுகள் திறந்து மூடின.
ரிப்போர்ட்டைப் பார்த்த நைட் ட்யூட்டி டாக்டர் சாயங்காலம் தான் வந்திட்டு போயிருக்கீங்க “ என்றார் ஆச்சரியமாக.
அட்மிட் செய்து ப்ரிலிமினரி பரிசோதனைகளை முடித்து, கைனக்காலஜிஸ்ட்டுக்குப் போன் செய்தார்.

ட்ரிப் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டிருந்தது. பிரசவ வலி முழுவதும் வருவதற்கான மருந்து செலுத்தப் பட்டது.

பெங்களூரே போர்வைக்குள் குறுகிப் படுத்திருந்த அந்தக் குளிர்காலை ஐந்து நாற்பதுக்கு, பூவும், பெரிய பொட்டும் முகம் மலர்ந்த புன்னகையுடனும் டாக்டர் காயத்ரி கார்த்திக் வந்து வாழ்த்துக்கள் சொல்லி விட்டுப் பரிசோதித்தார்.

அதற்குள் பாதிக் கிறங்கி வெட வெடவென நடுக்கத்தில் எனர்ஜியெல்லாம் இழந்த உமாவைப் பார்த்து, இதுக்கே இவ்வளவு அழுகையா? நல்லா வலி வர இன்னும் நாலு மணி நேரமாகும் அதுவரைக்கும் எனர்ஜிய சேவ் பண்ணிக்குங்க என்றார் புன்னகையுடன்.
முள் குத்தினாலே முப்பது நாள்கள் வலியுடன் இருப்பதைப் போல உணரும் என் மனைவிக்குப் பிரசவ வலியெல்லாம் கற்பனையிலும் எண்ணவே முடியாப் பெருங்கடல்வலி.
எட்டரை மணிக்கு அவளது அலறலும் அழுகையும் டாக்டரையே அந்த அறைக்கு வரவழைத்து விட்டன.

எனக்கு நார்மல் வேண்டாம், சிசேரியன் செஞ்சிருங்க டாக்டர் என்று கைக்கூப்பினாள்.
ஒரு கணம் யோசித்த டாக்டர், சரி, என்று ஒரு முடிவுக்கு வந்தார்

பிரசவம் என்பது இளையராஜாவின் ராயல் ஃபில்ஹார்மோனிக் ஸிம்ஃபனி போல. அதே ஒத்திசைவுடன் பெண்ணுடலில் இருக்கும் ஹார்மோன்கள் சிம்ஃபனியாய் இயைந்து சிசுவுக்கு டாட்டா சொல்லி உலகைப் பார்க்க அனுப்பும் வைபவம்.

கர்ப்பப்பை, குழந்தையின் ஹார்மோன்,ப்ளாசண்ட்டா, பிட்யூட்டரி என்று எல்லோரும் குரூப் சாட்டில் இருந்து கொண்டு லைக்குக்களாகப் போட்டுத் தள்ளி, யுட்ரஸ் மஸில்களின் சுருக்கத்தில் சிசுவை முன்னால போ முன்னால போ என்று பல்லவன் பஸ் கண்டக்டராக நகர்த்தி விடும்.
செல்ஃபி எடுப்பதற்கு, தான் எந்த வேளையில் வெளியே வர ஆயத்தமாகலாம் என்பதை சிசுவேதான் நிர்ணயம் செய்கிறது என்று வெகு சமீப ஆய்வுகள், உறுதி செய்கின்றன.

கருக்கொண்ட காலம் முதல் வயிற்றில் வளரும் சிசு அளவில் பெருத்தும், உதைத்தும், அம்மாவின் பேச்சுக்கு எதிர்வினை புரிந்தும், எப்போதும் அவளுடன் தொடர்பில் இருந்தும், ஒரு பெண் தாயாகப் பரிணமிக்க எல்லாவிதத்திலும் ஒத்தாசை புரிகிறது.

ஆனால் பாவம் இந்த அப்பா தான் இதுபோன்ற உணர்வுத் தூண்டல்களோ, வளரும் சிசுவுடன் எந்தவிதத்திலும் தொடர்போ இல்லாமல் ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் போல தன்னை உணருகிறான்.
பிரசவ வலி மூன்று கட்டங்களைக் கொண்டது. மூன்றாவது கட்டத்தில் தான் வலி மிகுந்து, க்ரீன் சிக்னல் கிடைத்து, சிசு வெளியே வரும்.

முதல், இரண்டாம் பகுதிகளைக் கடக்கும் முன்பே என் மனைவி வலியால் துடித்ததால் தான் டாக்டர் சற்றுப் பொறுத்திரு என்றார்.

வாழ்க்கையிலேயே மிகவும் கொடூரமான விஷயம் என்னவென்றால் நாம் மிகவும் நேசிப்பவர்கள் உயிர்போகும் வலியால் துடிக்கையில்,அவர்தம் வலியைக் குறைக்க நம்மால் எதுவுமே செய்ய முடியாமல் போய் கையறு நிலையில் நாம் நிற்பதுதான்.

அந்த நிலையிலும் என்னால் ஏதேனும் செய்து வேதனையைக் குறைக்க முடியும் என்று திடமாக நம்பினேன். அப்போதுதான் ஒரு யோசனை தோன்றியது. சந்தோஷத்துடன் என் மொபைலைக் கையில் எடுத்தேன்.

மொபைலை எடுத்து Breathing techniques for labour and birth என்று யூட்யூபில் தேடி அதைக் காண்பித்தேன்.

லேபர் வலி என்பது யுட்ரஸ் மஸில் கண்ட்ராக்‌ஷன் தான். மெதுவாக மேல் பகுதியில் தொடங்கும் இந்தச் சுருக்கும் வலி மெல்லக் கீழிறங்கி ஒரு அலை கரை சேர்வது போல வந்து அடங்கும். ஒவ்வொரு கண்ட்ராக்‌ஷனும் ஒரு நிமிடம் நீடிக்கும். அப்புறம் ஒரு நான்கைந்து நிமிடம் குட்டி ரெஸ்ட். மறுபடியும் கண்ட்ராக்‌ஷன்.

இந்த குட்டி ரெஸ்ட் எதற்கென்றால், குகைகளிலும், காடுகளிலும் வாழ்ந்த மனித இனத்தின் சங்கிலிக் கண்ணி கொடிய ஆபத்துக்களால் அறுந்து விடாமல் தன்னைக் காத்துக் கொள்ள, தன் சந்ததியைப் பிரசவிக்கப் பாதுகாப்பான இடம் தேடி ஒதுங்கிக் கொள்ளவே இந்த ஐந்து நிமிட சைக்கிள் கேப் . பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த சைக்கிள் ஓடத்துவங்கியிருக்கிறது.

பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பே இந்த மூச்சுப்பயிற்சி பற்றிய வகுப்புக்குப் போக நினைத்தோம். அது பெங்களூரின் இன்னொரு கோடி. நடு வழியில் திடீரென்று பிரசவமாகி, குழந்தை எழுந்து மருத்துவமனைக்கு நடந்தே எங்களுடன் செல்லும் டிராஃபிக் ஜாம் ரிஸ்க் இருந்ததாலும், இதர அலுவல் அவசரத்திலும் அந்தப் பயிற்சிக்குச் செல்ல முடியவில்லை.
அந்த மூச்சுப் பயிற்சி வீடியோவை அப்போது பார்க்கும் அளவிற்கு என் மனைவிக்குப் பொறுமையோ, தெம்போ சுத்தமாக இல்லை.

எனவே அவளது இரண்டு கைகளையும் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்களை மூடி என் மூச்சை அப்படியே ஃபாலோ செய்யச் சொன்னேன். மூக்கால் சுவாசத்தை உள்ளிழுத்து, வாயால் ஊஊஃப்ப்ப்ப் என்று பெரிதாக சப்தமிட்டு காற்றை வெளிவிடுவது. உள்ளிழுப்பதை விட சற்றே அதிக நேரம் வெளிவிடுவது.

இந்த Rhythmic breathing அம்மாவுக்கும் சிசுவுக்கும் தேவையான ஆக்ஸிஜனை தாராளமாகக் கொடுக்கும். வலியின் மீதே ஒருமுகமாகி இருக்கும் மனதை மடைமாற்றி மூச்சின் மீதுக் குவிக்கும்.

சிசுவை வெளித்தள்ளும் யுட்ரஸின் முயற்சிக்கு எதிராகக் கொடி பிடிக்காமல், உண்டியல் குலுக்காமல், பிரியாணி கொடுத்து ஆள் சேர்க்காமல் யூட்ரஸின் முயற்சிக்கு ஒத்தாசை செய்து வலியைக் குறைக்கும். முதல்வர் வரும் சாலை போல பிறப்புப் பாதை உடனே க்ளியராகி பிரசவத்தை இலகுவாக்கும்.

முதலில் யோசித்த என் மனைவி, இந்த வலியைக் குறைக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்திருந்ததால், ரித்மிக் ப்ரீதிங்கை நான் செய்வதைப் போலே செய்யத் தொடங்கினாள்.அவளது வலியின் தீவிரத்தை என் கழுத்தின் பின்புறம் தோன்றிய நகக்கீறல்களால் நன்றாக உணர்ந்து கொண்டேன்.

ஒரு இருபது நிமிடங்கள் இந்தப் பயிற்சிக்குப் பின், சற்றே வலி குறைந்த மாதிரி ஒரு தெம்பு வந்தது. அறைக்குள் அப்போது வந்த டாக்டர் பரிசோதனை செய்து விட்டு, குழந்தை பிறக்கும் சமயம் வந்து விட்டதென அருகிலேயே இருக்கும் லேபர் வார்டுக்கு மாற்றச் சொன்னார்.
செருப்பை வெளியே விட்டு விட்டு சர்ஜன்கள் அணியும் தலை முதல் பாதம் வரை மூடிய பச்சை நிற உடையில், கிருமிநாசினி சொல்யூஷனில் நன்றாகக் கையைச் சுத்தமாக்கிக் கொண்டு லேபர் வார்டுக்குள் நானும் நுழைந்தேன்.

கர்ப்பகாலம் தொடக்கத்திலேயே, பெங்களூரில் எந்த மருத்துவமனையில் பிரசவ வார்டில் தந்தைக்கும் எண்ட்ரி உண்டென அலசிப் பார்த்து விட்டேன். நல்லவேளையாக நாங்கள் செக்கப்பிற்குச் சென்ற மணிப்பால் மருத்துவமனையிலும் அதற்கு அனுமதி உண்டென்பதால் அங்கேயே டெலிவரிக்குத் தீர்மானித்திருந்தோம்.

பெங்களூரின் சாலைகளில் ட்ராஃபிக் ஜாம் முழுவீச்சில் இருந்த அந்தக் காலைப் பொழுதில் அந்தப் பிரசவ ஹாலில் மகப்பேறு மருத்துவர், உதவி மருத்துவர், லேபர் நர்ஸ் அனைவருடனும் நானும்.
பிரசவ வேதனையை கணவன் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் நம்பிக்கையைப் பகிர முடியும்.அவனது இருப்பும், கையணைப்பும் ஆயிரம் மருத்துவர்களின் துணைக்கு இணையானது என்பேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு வலியில் துடித்துக் கொண்டிருந்த என் மனைவியின் முகத்தில் அதை நான் உணர்ந்தேன்.

சிசு வெளியே வர யத்தனிப்பதாக டாக்டர் சொன்னதும் அவளது கண்களில் கண்ணீரினூடே ஒரு பிரகாசம் பளிச்சிட்டது.
“புஷ்”, “புஷ்” என்று டாக்டர் அறிவுறுத்த அவளும் முயற்சி செய்தாள்.
ஒரு கணம் நிறுத்தச் சொல்லி, கர்ப்பப்பையின் வெளித்தள்ளும் இயக்கத்தோடு இயைந்து உனது உந்துதலும் இருக்க வேண்டும் என்று நெறிப்படுத்தினார்.

பிரசவம் என்பது குழந்தையின் வலிமையையும், தாயின் வலிமையையும் ஒருசேர உணரும் ஒரு உன்னத தருணம்.

“இதோ, தலை தெரிகிறது, இன்னும் கொஞ்சம் மூச்சுப் பிடித்து உந்தித் தள்ளு” என்று டாக்டர் சொல்ல, என் கைகளை அழுந்தப் பிடித்து ஹாவெனப் பேரொலியுடன் உந்தித் தள்ள, தண்ணீர்ப் பைக்குள் இருந்த சிசு வெளிப்பட்டது.

தொப்பூள் கொடியை அறுத்துக் கிருமிநாசினியை இட்டுக் குழந்தையைச் சுத்தம் செய்தவுடன் அழத் தொடங்கிற்று.

“பேபி பாய்” என்று டாக்டர் சொன்னதும் ஒருகணம் நாங்கள் இருவரும் ஆச்சரியமுற்றோம். பெண் குழந்தைதான் பிறக்கும் என்று அதை விரும்பி எதிர்பார்த்துக் காத்திருந்த எங்கள் இருவருக்குமே சில நேனோ செகண்ட்கள் ஏமாற்றம் தோன்றி, அது குழந்தையின் முகத்தைப் பார்த்த மறு வினாடியே மறைந்தும் போனது.

முதன் முதலில் தன் குழந்தை இந்த உலகுக்கு வருவதைப் பார்க்கும் அந்த அற்புதக் கணம் வெகு சிலருக்கே கிட்டும்.

பிறந்த குழந்தையை, உடற்பாகங்கள் எல்லாம் இயல்பாயிருக்கினறனவா எனப் பரிசோதித்து விட்டு அங்க அடையாளங்களை என்னிடம் காட்டி விட்டு அதைக் குறித்துக் கொண்டார் ஒரு அசிஸ்டண்ட் டாக்டர்.

சுத்தமான துணியில் குழந்தையை சுற்றி என் கையில் கொடுத்தார்.
அந்த அறைக்கு வெளியே என் மாமியாரும் என் தோழி கவிதாவும் காத்துக் கொண்டிருந்தனர். குழந்தையைக் கொண்டு வந்து காண்பித்தவுடன், புத்தம் புது ரோஜாவாய்ப் பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தையை முதல் முறை பார்த்துக் கையில் எடுத்து உணர்ச்சி மேலிட சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் கவிதா.

சர்ஜிக்கல் உடையை மாற்றாமலே இருந்த நான் மீண்டும் மனைவியின் பக்கம் சென்றேன்.எனக்கு சிசேரியன் செஞ்சுருங்க என்று வலியால் கதறிய அவளுக்கு இயற்கை டெலிவரி வாய்த்தது இறையருளின் பெருங்கருணைதான்.

“ப்ளஸ்டு வித் பேபி பாய்” என்று என் ப்ளாக்பெரியில் எஸ் எம் எஸ்களை அனுப்ப ஆரம்பித்தேன்

Did you like this? Share it:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *