முன் எச்சரிக்கை-1: சற்றே நீ…ளமான பதிவு இது.
முன் எச்சரிக்கை-2: கற்பனையல்ல. என் பாட்டி வாழ்க்கையின் சில நிகழ்வுகள்.
தைரியமாப் போயிட்டு வா! கடவுள் இருக்கிறான் அவன் பாத்துப்பான் என்று எனக்கு தைரியம் சொல்லும் பாட்டியைப் பார்த்தேன்.அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டிலில் ஒரு வாரம் ஆன ரோஜாப்பூவைப் போல, காய்ந்து, சுருங்கிப் போய், பலவீனமாகப் படுத்திருந்தார்.
ஒரு ஆர்ட் படக் கதாநாயகனைப் போல,எந்தவித ஆரவாரமுமின்றி, இயல்பாக, அம்மாவைப் பெத்த அம்மா என்கிற உறவுமுறையில் என் வாழ்க்கையில் நுழைந்தார். ராதாவ்வா (ராதா அவ்வா)என்று எங்களால் பிரியமுடன் அழைக்கப்படும் ராதா பாட்டி (அவரது முழுப்பெயர்-ராதாபாய்). சின்ன வயதில்,எனக்கும் பாட்டிக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கும்.அப்போது நாங்கள் மதுரைப் புதூரில் இருந்தோம். நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை ராதாவ்வா எங்களைப் பார்க்க வருவார்.அம்மா முந்தானையையேப் பிடித்துக் கொண்டு திரிந்து கொண்டிருக்கும், அடிக்கடி பென்சில், ரப்பர், செருப்பைப் பள்ளியில் தொலைத்து வரும் என்னை அடிக்கடிக் கண்டிப்பதனாலேயே நான் பாட்டியிடம் அவ்வளவு ஒட்ட மாட்டேன்.
மழலைப் பட்டாளங்கள் போல, நாங்கள் ஆறு குழந்தைகள். காலை உணவுக்கு இட்லி, பொங்கல் என்று -குறைந்த நேரத்தில் எல்லோருக்கும் தயாரித்து முடிக்கும் உணவு -வகைகளையே செய்வர். அடை, பூரி, சப்பாத்தி என காலதாமதாகும் ஐட்டங்களை எல்லாம் ஞாயிற்றுக் கிழமைக்கு ஷெட்யூல் செய்து விடுவோம்.சிலசமயம் டிஃபன் செய்ய நேரமில்லாமல் பழைய சோற்றில் மோர் விட்டுப் பிசைந்து சாப்பிட்டு விட்டு மற்ற குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்ப, எனக்கு மட்டும் பழைய சோறு உள்ளே இறங்காது உப்புமா அல்லது வேறு ஏதாவது சுடச்சுட செய்து கொடுத்தால் தான் ஆச்சு என்று அடம்பிடிப்பேன்.கடைக்குச் சென்று ரவை வாங்கி வந்து உப்புமா செய்து எனகென்று அம்மா காட்டும் கரிசனம் பாட்டிக்கு அறவே பிடிக்காது. “இவன் மட்டும் என்னா உசத்தி” என்று கடிந்து கொள்வாள்.இது போக, வாரா வாரம் சனிக்கிழமையன்று, கோமணத்தை மட்டும் கட்டச் சொல்லி, என் உடம்பு பூராவும் எண்ணெய் தேய்த்து விட்டு, கண்ணில் நீர்வழிய நான் போதும் போதும் என்ற பின்னும் 2006 சீயக்காய்த்தூளால் கர கரவென்று தேய்த்து விட்டுக் குளிப்பாட்டுவது,அவ்வபோது ஓமவாட்டர், இஞ்சித் துவையல்,சுக்குக் கஷாயம் என்று எனக்குக் குமட்டும் விஷயங்களை என் வாயில் ஊற்றி முழுங்கச் செய்வது, எனக்கு மிகவும் பிடித்தமான வெண்பொங்கலில், எனக்கு மிகவும் பிடிக்காத மிளகுகளை அள்ளிக் கொட்டி,எனக்குப் பொங்கல் சாப்பிடும் ஆசையையே இல்லாமல் ஆக்குவது என்று எனக்கு எரிச்சலூட்டும் ஏராளமான விஷயங்களைப் பாட்டி செய்திருந்தாலும், பாட்டி ஒவ்வொரு முறை மதுரைக்கு வரும் போதும் அவர் செய்த சீடை, முறுக்கு, அதிரசங்களை ருசித்து சாப்பிடுவதற்காகவும், அவர் கடலாய்ப் பொழியும் பாசத்திற்காக்வும் மேற்படி எரிச்சல்களை எல்லாம் பல்லைக் கடித்துக் கொண்டு,லூஸில் விட்டு விடுவேன்.
சின்ன வயதில் பாட்டி செய்த இட்லி என்றால் நான் பத்து, பனிரெண்டு என்று அடித்து ஆடிக் கொண்டே இருப்பேன். “போதும்டா, அப்புறம் ராத்திரி வரைக்கும் பசிக்காது மத்யானத்துக்கு வேற சாப்பிடணும்” என்று பாட்டி நான் பதினைந்தைத் தாண்டும் முன்பே என்னை ரிடயர்டு ஹர்ட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்புவாள்.கில்லி, பம்பரம், டயர்வண்டி போன்ற வீர விளையாட்டுக்களில் என் சக்தியை எல்லாம் இழந்து, பாட்டி, பசிக்குது என்று பதினொன்றரை மணிக்கு வந்து நிற்கும் என்னைப் பார்த்து உனக்கென்ன பகாசுரன் வயிரா என்று அதிர்ச்சியடைந்து, பாவம் ராஜகுமாரி, இவங்களை எல்லாம் எப்பிடித்தான் வளர்க்கப் போகிறாளோ என்று நிஜமாகவே கவலைப் படுவார்.
பின்பு, என் அப்பா இறந்ததும், என் அம்மாவை ஆறு குழந்தைகளுடன் “நீ வா கல்லுப்பட்டிக்கு, வீடு இருக்கு, ஏதோக் கொஞ்சம் நெல் வருது, சாப்பாட்டுக்குக் கவலை இல்ல. நீ வேலைக்குப் போ, குழந்தைகளை எல்லாம் நான் வளர்க்கிறேன் நல்லாப் படிக்க வைப்போம் என்று அசாத்திய தைரியத்துடன் முடிவெடுத்து,செய்தும் காட்டினார்.
பாட்டிக்கு, தான் ஐந்தாம் கிளாஸ் வரையே படித்ததும், அதற்கு மேல் படிக்காமல் விட்ட்தும் பெரிய வருத்தம்.சின்ன வயதில் பத்துப் பேர்களுடன் சேர்மாதேவியில் பிறந்து வளர்ந்த பாட்டி, முரண்டு பிடித்துக் கொண்டு பள்ளிப் படிப்பைத் தானே நிறுத்தி விட்டார்.ஏழு வயதில் கல்யாணமாகி, பதினான்கு வயதில் பெரிய மனுஷியானதும், பாட்டியைக் கணவர் வீட்டில் வந்து விட்டனர்.
செல்லமாக வளர்ந்திருந்த பாட்டிக்குக் கணவரும் அவரது வைப்பும் (சித்தி) டெரராக இருந்தனர்.சித்தியால் பாட்டி ஒரு அறிவிக்கப் படாத கொத்தடிமையாக நட்த்தப்பட்டார். பாட்டியின் சொற்களிலேயே அதை சொல்வதென்றால்…“போக ஒரு மிதி, வர ஒரு அடி” தினப் பிரகாரம் இட்லி மாவு அரைக்கணும் குறைஞ்சது ஐந்து படி.வீட்ல இருக்குற அம்புட்டுப் பாத்திரங்களும் நான் தான் தேய்க்கணும்.என் உயரத்துக்கு இருக்குற ஜோடு, அண்டாவுக்கு உள்ள எல்லாம் இறங்கி அதைக் கழுவி வைப்பேன்.வீட்ல சுடு சாதம், டிஃபன் எல்லாம் இருந்தாலும், நான் சாப்பிடுறதுக்கு மூணு நாளான பழய சாதத்தை எடுத்து வச்சிக் குடுப்பா. சாக்க்கூடாதுங்கறதுக்காக அதையும், மூக்கப் பிடிச்சுக்கிட்டு சாப்பிடுவேன்.தட்டு நிறைய பழைய சோறு போட்டுட்டு அதுல விளிம்பு வரை வடிச்ச கஞ்சியோ, நீராகாரத்தையோ ஊத்தி, ஒரு பொட்டு சிந்தாமத் தூக்கிக் குடின்னு சொல்லுவா. கொஞ்சம் சிந்தினாலும் ஓங்கி அறைவா.மாட்டுக்கு வைக்கிற தவிடை எல்லாம் போட்டு என்ன சாப்பிடச் சொல்வா.எங்க வீட்ல வேளைக்கு ஒரு தின்பண்டத்தை ருசிச்சு சாப்பிட்ட எனக்கு மிக்சர் பூந்தி எல்லாம் கண்ல காட்டவே மாட்டா.எப்பவாவது சித்தி பாத்ரூம் போயிருக்கிற சமயமாப் பாத்து, பாத்திரத்தைத் தேய்ச்சிக்கிட்டு இருக்கிறப்ப, மிக்சரைத் திருடி எடுத்துட்டு வந்து சித்தி வராளானு நைசா நோட்டம் பாத்துக்கிட்டு, பாத்திரம் தேய்ச்சிட்டிருந்த கையைத் தண்ணீல நனைச்சுட்டு, டபக்னு ஒரு பிடி மிக்சரை எடுத்து வாயில போட்டுட்டுத் திரும்பவும் பாத்திரம் தேய்க்கற மாதிரி பாவனை பண்ணுவேன்.சித்திக்குத் தெரிஞா சூடு வைப்பா. அவளுக்குக் கால் அமுக்கி விடணும் சரியா அமுக்கலன்னா, மிதிப்பா.
அவளோட கொடுமையப் பொறுக்க முடியாம ஒரு நா செத்துப் போயிரலாம்னு, நாய்க்குட்டிக் கிணத்துல விழுந்தேன். நீச்சல் தெரிஞ்சதுனால என்னால சாக முடியல.மனசுல சாகணும்னு தோணறது ஆனா,கையும் காலும் அடிக்கிறத நிறுத்தவே இல்ல. (சின்ன வயசுலயே சேர்மாதேவியில தாமிரவரணித் தன்ணியில நீஞ்சக் கத்துக்கிட்டேன்.)நமக்கு சாகக்கூட வக்கில்லையேனு ஓன்னு அழுதேன். தண்ணீல நான் விழுந்த சத்தம் கேட்டு வந்து கயிறு போட்டு மேல கொண்டு வந்தாங்க.வீட்டுக்கு வந்த என்னை காபி ஏதாவது குடிக்கிறயானு ஒரு வார்த்தை கூடஎன் கணவர் கேக்கல- ”எனக்குக் கெட்ட பேரு வாங்கித்தரணும்னு தான இப்பிடிப் பண்ணுன” அப்பிடினு நல்லாக் கோவிச்சுக்கிட்டாரு.அன்னிக்குப் பூரா உக்காந்து மாவாட்ட வெச்சாங்க” இதைச் சொல்லும் போதெல்லாம் பாட்டியின் குரல் உடைந்து தழுதழுத்து அழுகையில் சொல்வது தடைப்படும்.அந்தக் கஷ்டங்கள் எல்லாம் கண்முன் வந்து அவரை செயலிழக்கச் செய்து ஓ என்று அழ வைக்கும்.
பாட்டியைக் கொடுமை செய்த சித்தி மகோதரம் என்னும் தீராத வயிற்று வலி நோய் வந்து வயிறெல்லாம் உப்பி, கஷ்டப்பட்டு இறந்து பாட்டிக்கு சந்தோஷத்தையும் விடுதலையையும் கொடுத்தாள்.சித்தியின் சாவுக்கப்புறம் தான் கணவரது அன்பைக் கொஞ்சமேனும் பெற்றார்.நான்கைந்து வருடங்கள் கூட உருப்படியாக்க் கழியவில்லை. மூன்று வயதில் என் பெரியம்மாவும், ஒன்றரை வயதுக் குழந்தையாய் என் அம்மாவும் இருக்கையில் பாட்டியின் கணவர் இறந்து விட்டார்.
கணவர் இறந்ததும், பாட்டி சிரமப்பட்டு தன் இரு குழந்தைகளையும் வளர்த்து வந்தார். பாட்டியின் நேர்மையையும், பிறருக்கு உதவும் மனப்பாங்கையும் கண்ட கிட்டு மாமா என்கிற உறவினர், தான் கட்டிய பிரசன்ன ஹனுமான் கோவிலைப் பராமரிக்கும் பணியையும், கொஞ்சம் சொத்துக்களையும் தான் இறப்பதற்கு முன் பாட்டியுடம் ஒப்படைத்தார். அப்படி வந்தது தான் கல்லுப்பட்டி வீடு.
கல்லுப்பட்டிக்கு நாங்கள் குடிவந்தவுடன் பாட்டியின் உலகம் மாறிப்போனது.தனக்காக வாழ்வதை ஏறக்குறைய மறந்து விட்டு, எங்கள் எல்லோருக்காகவும் வாழத் துவங்கினார். அவரது வாழ்க்கை முறையை எங்களது வளமைக்காகத் திருத்தியமைத்துக் கொண்டார்.
நான்கரை ஐந்து மணிக்கெல்லாம் அவர் உலகம் தொடங்கி விடும்.
எழுந்து பல்துலக்கி, முகம் கழுவிவிட்டு, விபூதி பூசிக்கொண்டு, வாசல் பெருக்கித் தொளித்துக் கோலமிட்டு, கோவில் வாசல்,சுற்றுப்புறம் துப்பரவு செய்து அங்கும் கோலமிடுவார்.மார்கழி மாத்த்திலும்,விசேஷ நாள்களிலும், பாதித் தெருவை அடைத்துப் பாட்டி போடும் கோலத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். செம்மண் வைத்து பார்டர் செய்து அழகுக்கு அழகூட்டியிருப்பார்.மார்கழி மாதத்தில் கலர்ப் பொடிகளைத் தானே தயாரித்து கோலங்கள் போட்டு சாணிவைத்து அதில் பூசணிப்பூவை வைத்தால் நாளெல்லாம் ரசிக்கலாம்.சாயங்காலம் பெருக்கும் போது அதைக் கலைக்க எந்தக் கல்நெஞ்சருக்கும் மனம் வராது.
கோலம் போட்டு விட்டு, பால் வாங்கிக் காபி கலப்பார். ஏழு மணிக்கெல்லாம் காலை டிபன்வேலை ஆரம்பித்து, எட்டு எட்டரைக்கெல்லாம் டிபனும், டிபன்பாக்ஸில் மதிய சாப்பாட்டுக்குக் கொண்டு செல்ல சமையலும் தயாராக்கி விடுவாள். கரியடுப்பு, விறகடுப்பு, நாடாக்கள் கொண்ட மண்ணென்ணெய் ஸ்டவ் என்று பம்பரமாய்ச் சுற்றி சுற்றி வந்து எல்லாவற்றையும் செய்வார்.பாட்டியின் சமையல் அபார ருசியாக இருக்கும் அதை நன்றாக ருசித்துச் சாப்பிடும் எனக்கு டிபன் பாக்ஸெல்லாம் எந்த மூலை என்று மதியம் வீட்டுக்கு வந்து ஒரு வெட்டு வெட்டி விட்டுச் செல்வேன்.பாட்டியும் காய்கறிகள், அப்பளம், வடாம் என்று ஆவலுடன் பார்த்துப் பார்த்து பரிமாறுவார். நாங்கள் சாப்பிட வரும் முன்பே காக்காவிற்கு வைத்து விட்டுத்தான் பரிமாறுவார்.காபியோ, டிபனோ, சாதமோ எதை வாயில் போட்டுக்கொண்டாலும், கிருஷ்ணா, கடவுளே, உனக்கே அர்ப்பணம் என்று சொல்லிவிட்டுத்தான் ஒரு மிடறு உள்ளே போகும்.
தான் படிக்கவில்லையே என்பதால்,படித்தவர்களைக் கண்டால் பாட்டிக்கு மிகவும் பிடிக்கும். பத்தாம் வகுப்புப் படித்து தன் மகள் உத்தியோகம் பார்த்து விட்டு வருவது அவருக்கு மிகவும் பெருமை. என் அம்மா வேலை விட்டு வந்த்தும்,பையை வாங்கி வைப்பார், பூரித்துப் போய் காபி கொடுப்பார்,டிபன் பாக்சைக் கழுவி வைப்பார், வேறு ஏதேனும் டிபன் செய்து தரவா என்று கேட்டு செய்து தருவார்.வழக்கம் போல அதிலும் எனக்குப் பங்கு உண்டு.
படிப்பைத் தொடரவில்லையே தவிர மற்ற கைவேலைப்பாடு, தையல் வேலை, கூடை பின்னுதல்,எம்பிராய்டரி போடுதல் இவை எல்லாவற்றிலும் அதிக மார்க்குகள் எடுத்துப் பாஸ் செய்திருக்கிறார். என் பெரியப்பாவிற்குப் பேண்ட், சட்டைகள் கூடப் புதிதாகத் தைத்துக் கொடுத்திருக்கிறார்.
பாட்டி பிறக்கும் போதிருந்தே இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றுதான் சரிவர இயங்கிக் கொண்டு இருந்தது.எண்பத்தேழு வருடங்கள் உழைத்த அந்த ஒரே சிறுநீரகமும் இப்போது ஓய்வு எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்ட்து.அதனால், உடம்பிலிருந்து வெளியேற வேண்டிய தேவையற்ற நச்சுப்பொருள்கள் உடம்பிற்குள்ளேயே தங்கி, ரத்த்த்தில் யூரியா, கிரியாட்டினின் ஆகியவைகளின் அளவைக் கூட்டி விட்டன. சாதாரணமாக ரத்த்த்தில் ஒரு அளவு இருக்கும் கிரியாட்டினின் பாட்டியின் உடலில் 17 பாயிண்ட்கள் இருந்தன. ரிப்போர்ட்டைப் வாங்கிப்படித்த ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர், “ இவங்க எப்பிடி இன்னும் உயிரோட இருக்காங்க ?” என்று ஆச்சரியப்பட்டாராம்.அதற்கு உடனே டயலிஸிஸ் செய்தால் தான் பிழைப்பதற்கு ஏதேனும் வாய்ப்புகள் உண்டு என்று சொல்லி விட்டார்.
கிட்னி டயலிஸிஸ் என்பது, கிட்னி செய்யும் வேலையை உடம்புக்கு வெளியிலிருந்து மருத்துவ சாதனங்கள் மூலம் ரத்தத்தை சுத்திகரித்து செயற்கையாக ஒரு கிட்னியைக் கொண்டு செயல்புரிய வைப்பது போல-மீண்டும் சுத்திகரிக்கப் பட்ட ரத்தத்தை உடம்பிற்குள் செலுத்துவது.இளைய வயதினருக்கு இது அவ்வளவு சிரம்மான காரியம் இல்லை. ஆனால் எண்பத்தேழு வயது பாட்டிக்கு?
முதல்முறை டயலிஸிஸ் செய்யும் முன்பு, கழுத்துப் பகுதியிலிருக்கும் ஜீகுலர் வெயின் எனப்படும் பெரிய ரத்தக் குழாயை அறுத்து அதிலிருந்து ரத்த்த்தை எடுக்க இணைப்புக் கொடுப்பார்கள்.இல்லையென்றால் ஏதேனும் ஒரு வெயினை வெட்டி, ஆர்ட்டரியின் வெட்டப்பட்ட இணைப்பை அதற்குக் கொடுத்து, செயற்கையாக வெயினின் சுற்றளவை அதிகரித்து, வேண்டிய ரத்த்த்தை எடுப்பர்.இந்த வெயின் வெட்டி ரத்தம் எடுப்பதே கிட்ட்த்தட்ட ஒரு அறுவை சிகிச்சை போலத்தான். முதல் டயலிஸிஸ் செய்ய ஆறு மணி நேரமாகும். அதுவும் பாட்டியின் உடம்பு தாங்கினால். இல்லையென்றால் கால இடைவேளை விட்டு,சிறிது சிறிதாகவே டயலிஸிஸ் செய்ய வேண்டும் என்றார். முதல் டயலிஸிஸ்க்குப் பின்னர், வாரம் இருமுறை டயலிஸிஸ் செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.
அரும்பாக்கத்திலிருந்து போரூருக்குப் பாட்டியை வாரமிருமுறை அழைத்துச் செல்வது, பின் மீண்டும் வீட்டுக்குக் கூட்டி வருவது சிரமம் என்பதால், அருகிலேயே டயலிஸிஸ் வசதி கொண்ட பெரிய மருத்துவமனை எதுவென்று பார்த்து சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷனில் பாட்டியை அட்மிட் செய்தோம்.இரண்டு நாள்களிலேயே எல்லா பரிசோதனைகளையும் மூண்டும் செய்தனர்.ஏன் இன்னும் வீட்டுக்குப் போகல நாம என்று என்னிடம் கேட்டார்.
நர்ஸிடம் பிரிஸ்கிரிப்சன் தாள் வாங்கி,”உங்களுக்கு மிஷின் வச்சு சிகிச்சை செய்யப் போறோம்” என்று கொட்டை எழுத்தில் எழுதிக் காண்பித்தேன். ”அப்பிடியா” என்ற பாட்டியின் முகத்தில் கொஞ்சம் தெளிவு பிறந்தது.நான் என்ன செய்தாலும் அது அவரது நன்மைக்கே என்று நூறு சதவீதம் நம்பிக்கை அவ்ருக்கு.
எப்படியும் டயலீஸிஸ் செய்து விட்டால் இன்னும் சில மாதங்களுக்குப் பாட்டியின் மரணத்தைத் தள்ளிப்போடலாம் என்று திடமாக நம்பினோம்.அந்த மருத்துவமனையின் சிறுநீரகத்துறைத் தலைமை மருத்துவர் வந்து, பாட்டியின் அனைத்து ரிப்போர்ட்ட்டுகளையும் பார்த்தார். எங்களை அழைத்து உட்கார வைத்துப் பேசினார். பாட்டிக்கு இயற்கையாகவே ஒரு சிறுநீரகம்தான் வேலை செஞ்சுட்டு இருந்த்து. இப்ப அதுவும் 5-10 சதவீதம் கூட வேலை செய்யல.அதான் கிரியாட்டினின் இவ்வளவு கூடியிருக்குது.டயலிஸிஸ் பண்ணுனா, அத அவங்க உடம்பு தாங்குமானு தெரியல. ப்ளட் பிரஷர் எடுக்குற அழுத்தத்தையே அவங்களால தாங்க முடியல.எம்பத்தேழு வயசுல, ஜூகுலர் வெயினைக் கட் பண்ணி, கிட்ட்த்தட்ட சர்ஜரி மாதிரி தான் அது. அதை செய்றப்பவே கூட பாட்டி கொலாப்ஸ் ஆகுறதுக்கு சான்ஸ் இருக்குது.அவ்வளவு வீக்கா இருக்காங்க.இவ்வளவு அதிகமான கிரியாட்டினின் லெவலோட இவங்க இத்தனை நாள் உயிரோட இருக்குறதே அதிசயம் தான்.இயற்கையே அவஙகளுக்கு உதவிட்டு ஒரு மாதிரி சரி பண்ணிட்டுப் போய்ட்டிருக்குது.எவ்வளவு நாள் ஓட்ட்டுமோ அவ்வளவு நாள் ஓட்ட்டும்.அவங்களோட முடிவ இயற்கையே தீர்மானிக்கட்டும்-டயலிஸிஸ்னு போனா, நாம ப்ரிபோன் பண்ற மாதிரிக் கூட ஆகலாம். சரி, டயலிஸிஸ் பண்ணாம விட்டா என்ன ஆகும். இப்ப இருக்குற நிலைமை இன்னும் மோசமாகி பாட்டிக்கு நினைவு தப்பி கோமால கூட கொண்டு போய் விடலாம்.என்றவர் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்.
இவங்க என்னோட பாட்டியா இருந்தாங்கன்னா, நான் இந்த ஸ்டேஜில டயலிஸிஸ் செய்யமாட்டேன்.நீங்க செய்யச் சொன்னீங்கன்னா, நான் செய்றேன். எனக்கு என்ன .. ஒரு ஆறு மணி நேரமாகும் டயலிஸிஸ் பண்ண. அவ்வளவுதான். என்று சொல்லி விட்டு எழுந்தார்.
நான் சொன்னத உங்க குடும்பத்துல எல்லோர்கிட்டயும் நல்லா டிஸ்கஸ் பண்ணிட்டு அப்புறமா நாளைக்கு வந்து கூட உங்க முடிவ எங்கிட்ட சொல்லலாம்- டயலிஸிஸ் பண்றதா வேண்டாமான்னு என்றார்.
மறுநாள் வரையெல்லாம் எங்களுக்கு நேரம் தேவைப்படவில்லை. உதிரப் போகும் மலரைப்போல இருக்கும் பாட்டிக்கு டயலிஸிஸ் கொடுமையான விஷயம் என்பது அப்போது எங்களுக்கு சரியாக உரைத்தது.
இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருப்பதும், வேளா வேளைக்கு ஊசி, மாத்திரைகள், குளுகோஸ் இறங்குவது இவை எதுவுமே பாட்டிக்குப் பிடிக்கவில்லை. அவரது உடம்பு இதையெல்லாம் தாங்கவில்லை.வந்து ரெண்டு நாளாச்சு, போதும் ஆஸ்பத்திரியில இருந்தது. என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க. நான் நிம்மதியா இருப்பேன் என்று எங்களை வற்புறுத்த ஆரம்பித்து விட்டார்.
பாட்டிக்கு இரண்டு நிறுநீரகங்களும் பழுதாகிப் போன விஷயமோ, அவர் உடல் இவ்வளவு அபாயக்கட்ட்த்தில் இருப்பதோ,அவருக்கு எதுவுமே தெரியாது.
ஏதோ, வயித்து வலி. வயசானதால குடல் சுருங்கிப்போய் எது சாப்பிட்டாலும் வாந்தி வாந்தியா வருது. அதான் டாக்டர்கிட்ட நம்மளக் கூட்டிட்டு வந்திருக்காங்க என்றுதான் பாட்டி நினைத்துக் கொண்டிருந்தார்.காது வேறு கேட்காததால் நாங்களோ, மருத்துவரோ என்ன பேசினாலும் புரியாது.
பாட்டியின் ரத்தக்குழாய்களை வெட்டி, வாழ்க்கையில் அவர் இதுவரை அனுபவித்திராத வலியின் உச்சத்தையெல்லாம் அவருக்கு அறிமுகப் படுத்தி, அவர் வலியால் துடித்து மறைவதை விட இயற்கையாக, அமைதியாக இனி எந்தவிதமான வலியையும் அனுபவிக்காமல், இருக்கும் வரை இருக்கட்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்து ஒரு இரண்டு நாள்கள் மருத்துவமனையில் வைத்திருந்து,குளுகோஸ் மற்றும் வாந்தி வராமல் இருக்க சில மருந்துகளை ஏற்றினார்கள்.
உறங்கிக் கொண்டிருந்த பாட்டி மெதுவாகத் திரும்பிப் படுத்தார்.பசிக்குது என்றார். நர்ஸ் கொடுத்திருந்த கஞ்சியை ஒரு ஸ்பூனில் எடுத்துக் கொடுத்தேன். இரண்டு மிடறு கூட விழுங்கயிருக்கவில்லை.உமட்டிக் கொண்டு வாந்தி எடுக்க முயற்சித்தார், வெறும் வயிற்றில் இருந்து பித்தநீர் போன்று எதுவோ கொஞ்சம் கலராக வந்தது.”
என்ன வாந்தியோ, பொல்லாத வாந்தி, எதை சாப்பிட்டாலும் வாந்தி வர்றது” என்றவர், சட்டென நர்ஸிடம் இந்த வாந்தி வர்றது எப்ப நிக்கும்? என்றார். மாத்திரை சாப்பிடுங்க நின்னுரும் என்றாள். காது கேக்காமல் ”என்ன சொல்றா?” என்றார். பாட்டிக்கு காது கேட்கும் திறன் குறைந்து போய் பத்துப் ப்தினைந்து வருடங்களாகிறது. காது கேட்கும் கருவியை வைத்துக் கொண்டு பத்துப் பதினைந்து வருடமாக ஓட்டிக் கொண்டிருந்தார்.
கல்லுப்பட்டி தியேட்டரில் படம் பார்க்கையில்அரையும் குறையுமாகக் கேட்டு ஓரளவுக்குப் புரிந்து கொள்வார். படையப்பா படத்தை சென்னையில் ஆல்பட் தியேட்டரில் டிடிஎஸ் எபெஃக்டில் பார்த்து வெளியே வந்தவரிடம் காது கேட்டுச்சா என்றேன். நல்லா கணீர் கணீர்னு கேட்டுச்சு ஒவ்வொரு சத்தமும் எப்பிடி டாண் டாண்ணு விழுது என்று ஆச்சரியமடைந்தார். டிடிஎஸ் பற்றியெல்லாம் ஒன்றுமே அறிந்திராத பாட்டி, இன்னிக்குத் தான் இந்த மிஷின் ஒழுங்கா வேலை செஞ்சுருக்குது என்றார்.
அரைகுரையாகக் கேட்டுக்கொண்டிருந்த காது,கடந்த ஐந்து வருடங்களாக அதுவும் கேட்காமல் போக, மதுரை தெப்பக்குளத்திற்கு அருகிலிருக்கும் ஒரு டாக்டரிடம் போய்க் காண்பித்ததற்கு, அவர் பல்வேறு சோதனைகள் செய்து விட்டு, இனிமே காது கேக்குறதுக்காக ஒரு பைசா கூட செலவு பண்ணாதீங்க. அது வேஸ்ட்.நரம்பு எல்லாம் தளர்ந்து போயிருச்சி என்றார். பாட்டியுடம் இதை பலமாகச் சொல்லிப் புரியவைத்ததற்கு, சித்திகிட்ட, என் கணவர்கிட்ட கன்னத்துலயே எவ்வளவு அறை வாங்கியிருக்கேன் அதான் நரம்பு கோளாறாகி காது இப்பக் கேக்க மாட்டேங்கிறது என்றார். அதிலிருந்து, பாட்டியிடம் சைகை பாஷை தான் .புரியவில்லை என்றால் உதட்டசைவையும், சைகையையும் ஒருங்கிணைத்துப் புரிந்து கொண்டு விடுபட்ட இடங்களை அவரே நிரப்பிக் கொள்வார்.
அதிலிருந்து சொர்க்கம், கோலங்கள்,கஸ்தூரி சீரியல்கள் எல்லாம் பாட்டிக்கு ஊமைப்படங்கள் தான். காட்சியில் வராது, சப்தத்தில் மட்டுமே வெளிப்பட்ட கதைகளின் திருப்பங்கள் எல்லாம் பாட்டியின் பொது அறிவுக்கு எட்டாமலே போய் விட,திடீரென மாறும் கதையின் போக்கு பாட்டிக்குப் புரிபடாததால் ”கதைய என்னமோ போட்டுக் குழப்புறான்” என்று சலித்துக் கொண்டு,சில சீரியல்களைப் பார்ப்பதையே நிறுத்திக் கொண்டார்.ராமாயணம் மட்டும் இதற்கு விதி விலக்கு- அட்சரம் பிசகாமல் கதை தெரிந்த படியால் பாட்டிக்கு ஒலியின் அவசியம் தேவைப்படவே இல்லை.கொஞ்ச நாளைக்கு விசுவின் அரட்டை அரங்கம் – அது அரட்டை அரங்கத்திலிருந்து மக்கள் அரங்கமாக மாறி இருந்தாலும் பாட்டி அன்றும் இன்றும் அது விசுவின் அரட்டைக் கச்சேரி என்றுதான் அழைப்பார்.- .பார்த்துக் கொண்டிருந்தார்.
தொலைக்காட்சியில் கேட்க முடிவதில்லை என்பதாலும், போட்டிக்கு நாங்கள் இருப்பதாலும் பாட்டி புத்தகங்களை வாசிப்பதில் அதிக நேரம் செலவிடுவார்.
மாதம் ஒரு முறை வரும் ஞானபூமி புத்தகம், கல்கி, மங்கையர் மலர்,குமுதம், விகடன், கல்கண்டு இப்படி எல்லாப் புத்தகங்களையும் வரி விடாமல் படிப்பார்.தினமலர், வாரமலர் எல்லாம் வந்த அன்றே படித்து விட வேண்டும்.இல்லையென்றால் பாட்டிக்கு இரவுத்தூக்கம் வராது.
வராண்டாவில் மதியம் ஒரு முறை வாரமலரைப் படித்துக் கொண்டிருந்தவர், சட்டென்று மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, என்னிடம் திரும்பி, டேய், ”காண்டம்”னா என்னடா? என்றார்.நான் சற்று யோசித்து, ஆணுறை என்று சொன்னேன்.பாட்டி காதில் சரியாக விழாததாலும், இதுவரை கேள்விப்படாத பெயரென்பதாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.நான் எப்படி சொல்வதென்று யோசித்து அவர் காதருகே போய் நிரோத் நிரோத் என்று கத்தினேன். ஓ. அப்படியா, அப்படித் தமிழ்ல போட்டாத்தான் என்னவாம்? என்று சொல்லிக் கொண்டே படிப்பைத் தொடர்ந்தார். நான் நிரோத் என்று சத்தமாய்ச் சொன்னது காதில் விழுந்து, தெருவில் சென்றவர்கள் திரும்பிப் பார்த்து விட்டு சென்றனர்.
அதே போன்று, நான்,என் சகோதரிகள், பாட்டி எல்லோரும் ஒரு ஞாயிற்றுக்கிழமை டிவியில் வண்ண வண்ணப் பூக்கள் படம் பார்க்கையில், பிரசாந்தைக் கவரும் பக்கத்து வீட்டுப் பெண்ணாக வரும் மெளனிகா பிரசாந்தைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போகும் முன் சற்று எடுப்பாகத் தோற்றமளிக்க, தன் ப்ளவுசில் பேப்பரை உள்ளே வைப்பார். அதைப் பார்த்த்தும், பாட்டி, ”அதை ஏன் அங்க வைக்குறா?” என்று என் அக்காவிடம் சத்தமாகக் கேட்க, அவள் சுட்டு விரலை உதட்டில் வைத்து ”உஷ்” என்று ஒரே வார்த்தையில் பாட்டியை அடக்கினாள்.
வீட்டிலிருக்கும் ஏழு பேரும் காலைப் பேப்பரையும், இலவச இணைப்புகளையும் ஒரு முறை புரட்டி விடுவதற்குள், அது வடிவேலு வடை கசக்கிப் போட்டப் பேப்பராய் ஆகி,வீட்டின் மூலைக்கொன்றாய்ப் போய் விட்டிருக்கும். சமையல் வேலை முடிந்து, மதிய உணவுக்குப்பின் இருக்கும் ஒரு ஒன்றரை மணி நேரம் பாட்டியின் ரீடிங் டைம். அப்போது திட்டிக் கொண்டே தேடிக் கண்டுபிடித்துப் படிப்பார். வாடிப்போன வாரமலரைத் தேடி எடுக்கவே பத்து நிமிடங்களாகும்.முக்கால்வாசி படித்துக் கொண்டிருக்கும் போதே, அசந்து வருகிறதென்று, மூக்குக் கண்ணாடியைக் கழற்றி சுவரோரமாக நகர்த்தி வைத்து விட்டு, தலைக்கு வைத்திருக்கும் பலகையை எடுத்துப் போட்டுக்கொண்டு ஒரு கோழித்தூக்கம் போடுவார்.
நான்கு மணிக்குப் பால்காரன் வரும் முன் எழுந்து காபிக்கு டிகாக்ஷன் தயார் செய்து விட்டு, அடுத்த ஷிஃப்டிற்குத் தயாராகி விடுவார்.
ஓரளவு வாந்தி நின்று, பாட்டி எழுந்து உட்காரும் நிலைக்கு வந்தவுடன் வீட்டுக்கு அழைத்து வந்தோம்.கொஞ்ச நேரம் படுத்துக் கிடந்தவர் மெல்ல எழுந்து சமையலரைப் பக்கம் பார்த்து, குடிக்கக் கொஞ்சம் கஞ்சி வச்சுக் குடு என்றார்.
சமையல் செய்வதில் எங்கள் உறவினர் வட்ட்த்தில் பாட்டியை மிஞ்ச ஒருவரும் கிடையாது. பதினெட்டாம்படி பெருக்கு, காரடையான் நோன்பு,கருடபஞ்சமி,நாகசதுர்த்தி என்று எல்லா பண்டிகைகளையும் நான் காலண்டரைப் பார்த்துத் தெரிந்து கொண்டதை விட, பாட்டி அன்றைக்கு செய்யும் ஸ்பெஷல் சமையலை வைத்துதான் அதிகம் தெரிந்து கொண்டேன்.
ஒவ்வொரு பெளர்ணமி அல்லது மாதமொருமுறை ஞாயிறு மாலையில் தேவன்குறிச்சி மலைக்கு நடந்து செல்வோம். கோவில் தரிசனம் முடித்து, மலையடிவாரத்தில் உட்கார்ந்து,கொண்டு போயிருந்த புளியோதரை, தக்காளி சாதம், தயிர்சாதத்தை, வட்டமாக உட்கார்ந்து பாட்டி பிசைந்து கையில் போட்டுச் சாப்பிடுவதில் இருக்கும் அருமை சொல்லி மாளாது.
நன்கு இருட்டியவுடன் வீடு திரும்புகையில் பாட்டுப் பாடிக்கொண்டே நடந்து வருவோம்..இது தவிர முழுப்பரீட்சை, அரைப் பரீட்சை விடுமுறைகளில் எங்கள் கஸின்கள் வருகையிலும், தினமும் ராத்திரி, பாட்டி கையில் உருட்டிப் போடுவார். பட்சணம் செய்வதில் பாட்டி கெட்டிக்காரி.மைசூர்பா, போளி, சீடை, கைமுறுக்கு, அதிரசம், ரவா உருண்டை என்று அவர் கைவண்ணத்தில் எல்லா பட்சணங்களும் அதனதன் ருசியின் உச்சத்தில் படைக்கப்படும். அக்ரஹாரத்தில் யார் வீட்டிலேனும் பட்சணம் செய்வதென்றால், பாட்டியின் தலைமையில், அவர் சொல்லும் பக்குவத்தில் செய்யப்பட்டு இறக்கி ருசிக்கப்படும்.பாட்டி அந்தக் காலத்திலேயே ஒரு அறுசுவை அரசி.
ஊருக்கு உபகாரியாக இருப்பது சமையலில் மட்டுமல்ல-
ஐந்து வகுப்புதான் படித்திருந்தாலும், பாட்டி ஒரு படிக்காத செவிலி.
குழந்தை வளர்ப்புக் கலையை அவரிடம் தான் கற்க வேண்டும் சொந்தத்தில் யாருக்கேனும் பிரசவம் என்றால் கூப்பிடு ராதாவை என்பார்கள். இவரும் சளைக்காது போய் ஒரு வாரமோ, ஒரு மாதமோ இருந்து தன் குழந்தையாய்ப் பாவித்து, பிரசவ மருந்து செய்வது முதல் பீத்துணி கசக்கிப் போடுவது வரை அத்தனை வேலைகளையும் செய்துப் பெரும் உதவியாய் இருந்து விட்டு வருவார்.
பாட்டி இந்த மட்டுக்கும் இருப்பது கடவுளின் பரிபூரண அருளாளே என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவரிடம் உண்டு. சாப்பிடாமல், தூங்காமல் இருப்பாரே ஒழிய க்டவுளை நினைக்காமல், கோவிலுக்குப் போகாமல் இருக்கவே மாட்டார்.தினசரி காலை எழுந்தவுடன் தன் உள்ளங்கைகளில் முகம் பார்த்து விட்டு முகம் கழுவித் திருநீறு வைத்துக் கொள்வதில் இருந்து, குளித்து விட்டு, துளசிச் செடிக்கு நல்ல தண்ணீர் ஊற்றி, சூரிய நமஸ்காரம் செய்து விட்டு, சாமி விளக்கேற்றி ஐயப்பன் சரணம் சொல்வார். அவரது நோட்டிலோ, டைரியிலோ ஒரு பக்கம் முழுவதும் ஸ்ரீராமஜெயம் எழுதி முடித்ததும் தான் அவர் உடம்பும், மனமும் காலை டிபனை ஏற்கும். ”ரொம்ப நேரமாகி விட்ட்து, இன்னிக்கு சரணம் சொல்ல வேண்டாம், அப்புறமா ஸ்ரீராமஜெயம் எழுதிக்கலாம்” என்று நாங்கள் சாப்பிடக் கூப்பிட்டால், கொஞ்சம் தயங்கி, “இல்ல, மனசுக்கு ஒப்ப மாட்டேங்குது, நான் சரணம் சொல்லிட்டு, ஸ்ரீராமஜெயம் எழுதிட்டே வரேன்” என்பார்.
தினசரி பாட்டி சத்தம் போட்டுச் சொல்லும் 108 சரணங்கள் இன்று வரை எனக்கு மனப்பாடம். ஒவ்வொரு வருடமும் ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொண்டு, 48 நாள்கள் விரதமிருந்து நான்கு முறை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வந்திருக்கிறார். கோவிலுக்குச் சென்று திரும்பி வந்து, கலர் கலரான படங்கள் போட்ட ஐயப்பன் புத்தகங்கள் மூலம், எரிமேலிக்கும்,அச்சன் கோவிலுக்கும் பம்பா நதிக்கும், பதினெட்டாம் படிகளுக்கும் எங்களைக் கூட்டிக் கொண்டு செல்வார். சபரிமலையை விட ஏறுவதற்குக் கடினமான மலையான சுந்தரமகாலிங்கம் மலைக்கும் பாட்டி சென்று வந்திருக்கிறார்.
ஏதெனும் கஷ்டம் வருகையில்,அந்த ஆஞ்சநேயர் பாதத்தைத்தான் நான் கெட்டியாப் பிடிச்சுருக்கேன் என்று அடிக்கடி சொல்லும் பாட்டி ஷீரடி சாய்பாபா, ராகவேந்திர சுவாமிகளின் தீவிர பக்தையும் கூட.
வியாழக்கிழமைகளில் இரும்புச் சேரின் மேல் ராகவேந்திரரின் போட்டோவை வைத்து, அதையே பிருந்தாவனமாகப் பாவித்து, 9 முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றுக்கும் கீழே விழுந்து நமஸ்காரம் செய்வார்.பூஜ்யாய ராகவேந்திராய மந்திரத்தை நான் கற்றுக் கொண்ட்து பாட்டியின் வியாழக்கிழமை பூஜைகளின் போதுதான். தீபாராதனை முடிந்து ராகவேந்திரர் அந்தச் சேரிலிருந்து சுவாமி ஷெல்ஃபுக்குப் போனதும் முதல் ஆளாக அதில் உட்காருவது எனக்குப் பிடிக்கும்.
ஷீரடி சாய்பாபா புத்தகங்களைப் படித்து விட்டு ஆச்சரியம் அடைவார்.தன் வாழ்விலும் கடவுள் அதிசயங்கள் புரிவார் என்று திடமாக நம்பினார்
சில அதிசயங்களும் நிகழ்ந்தன. பாட்டியைக் கண்கலங்க வைத்தவர்கள் யாரும் சந்தோஷமாக இருந்ததில்லை.பாட்டி மனமுருகி, ஆஞ்சநேயா, நீதான் அவங்களுக்குக் கூலி கொடுக்கணும் என்று மன்றாடினால், ஓரிரு நாட்களில் அவர்களுக்கு ஏதேனும் தண்டனை கிடைத்து விடும்.அப்புறம் அதற்காகவும் பாட்டி வருந்துவார்.
என் அக்காவிற்குப் பல வருடங்களாய் மாப்பிள்ளை தேடிக் கிடைக்காமல் நாங்கள் நம்பிக்கையை இழந்து விட்டிருக்கையில், பாட்டி போட்டோவில் ஆஞ்சநேயர் உருவ்த்தைச் சுற்றி வரிசையாக தினமும் பொட்டுவைக்கும் பூஜையைத் துவக்கி விட்டு, இன்னிலேர்ந்து நாப்பத்தெட்டு நாள்-ஒரு மண்டலம்- பொட்டு ஆரம்பிச்ச இட்த்தில வந்து முடிக்கிறதுக்குள்ள நம்ம ஆஞ்சநேயரு கல்யாணம் நடத்தி வைப்பாரு என்றார்- அதே போலவே என் அக்காவின் கல்யாணம் முடிந்தது.
ஒருமுறை கடுமையான மழை நாளில் வீட்டில் நானும் பாட்டியுமே தனியே. வறுத்த அரிசியை அரைத்து வெல்லம் சேர்த்து உருண்டை பிடித்து எனக்கு சாப்பிடக் கொடுத்து விட்டு , ஈரக்கையால் சுவிட்ச் போர்டைத் தொட்ட பாட்டி, மின்சாரம் தாக்கி சில வினாடிகள் ஆ வென அலறத் துடித்தார். கையை எடுக்கவே முடியாமல் மிகுந்த பிரயாசைக்குப் பின் கையை வெடுக்கென்று இழுத்துக் கொண்டார். பாத்திரத்தைக் கையிலும், அரிசிமாவை வாயிலும் வைத்திருந்த நான் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ந்து போய் நின்றேன்.கதவு தாழிடப்பட்டு குறுக்கில் இரும்புக் கம்பி போடப்பட்டிருந்தது. ஆறேழு வயதிருக்கும் என்னால் எம்பிக் கூட அந்த இரும்புக்கம்பியைத் தொட முடியாது. எனக்குத் தெரிந்து, அன்று பாட்டி மரணத்தின் வாசலைத் தொட்டுத் திரும்பினார் என்றே சொல்லலாம். அந்த ஆஞ்சநேயர்தான் அவரைக் காப்பாற்றினார் என்று இன்று வரை சொல்லுவார்.
ஒரு மழைநாளில் எங்கள் வீட்டுக்குள் வந்த கட்டுவிரியன் பாம்பைப் பார்த்து பயந்து போன பாட்டி,ஐயோ! குழந்தை குட்டிகள்ளாம் இருக்கே, யாரையும் எதுவும் பண்ணாம போகணுமே என்று பிரார்த்தித்து, சங்கரன் கோவிலுக்கு வந்து பால் ஊற்றி வழிபடுவதாக மனமுருகி வேண்டிக் கொண்டார். யாரையும் எதுவும் செய்யாமல் கழிவுநீர் வாய்க்கால் வழியே வெளியே சென்று விட்டது அந்த ஐந்தடி நீளப் பாம்பு. மாதத்தில் பத்துப் பதினைந்து நாள்கள் விரதத்தில் இருக்கும் பாட்டியின் மனவுறுதி நாளுக்கு நாள், வருட்த்திற்கு வருடம் கூடிக் கொண்டே வந்தது.
அவர் வாழ்வில் நிகழும் எல்லா முக்கிய முடிவுகளுக்கும் ஆஞ்சநேயரிடம் சீட்டுக் குலுக்கிப் போட்டு, ஆஞ்சநேயர் என்ன முடிவெடுக்கிறாரோ, அதையே சந்தோஷமாக முடிவான முடிவாகக் கொள்வார்.
பெரும்பாலும், குடும்பத்தில் நிகழும் சுக துக்க நிகழ்ச்சிகள் பாட்டிக்குக் கனவில் முன்னதாகவே தெரிந்துவிடும்.யாருக்கோ எதுவோ நடக்கப் போகுது என்று பாட்டி தான் கண்ட கெட்ட கனவைப் பற்றி அரையும் குறையுமாக சொல்லும் அந்த வாரத்தில், ஏதோ ஒரு மாமாவோ, அத்தையோ, ஒன்று விட்ட உறவினர் வீட்டிலிருந்தோ யாரோ தவறிப்போனதாக தந்தி வரும்.தந்தியைப் படித்து, அழுது கொண்டே சென்று வருவார்.
பாட்டியின் வெளியூர்த் தகவல் தொடர்புகள் எல்லாம் போஸ்ட் கார்டிலும், இன்லேண்ட் லெட்டரிலும் தான். வாரத்திற்கு இரண்டு மூன்று கார்டுகள் , இன்லேண்ட் கடிதங்கள் உறவினர்களிடமிருந்து வந்து கொண்டேயிருக்கும். இவரும் மறுநாளே ஸ்ரீராமஜெயம். அன்புள்ள பிரேமாவுக்கு, நலம் நலம் அறிய அவா. உன் சுகம் உன் கணவர் மற்றும் குழந்தைகள் நலம் அறிய ஆவல் என்று தொடங்கி பதில் எழுதிப் போடுவார்.
காலமாற்றத்தில் வீட்டுக்கு ஃபோன் வந்து காது கேட்ட வரையிலும் போனில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். காது சரியாகக் கேட்காதவுடன், பெரிதாக அழைக்கும் போன் மணியைக் கேட்டு, அதை எடுத்து, ஹலோ, யார் பேசறது, ராஜகுமாரி இன்னும் ஆபிசுல இருந்து வீட்டுக்கு வரல,இப்ப வீட்ல யாருமில்ல நீங்க அப்புறமா பேசுங்க என்று மறுமுனையில் பேசுபவருக்குப் பேசுவதற்கு வாய்ப்பே தராமல் ஒரு ஆட்டோமேடிக் வாய்ஸ் ரெகார்டராக மாறி ஒப்பிப்பார். என் அம்மா வந்தவுடன், யாரோ ஃபோன் பண்ணினா, நீ வீட்ல இல்ல அப்புறம் பண்ணுங்கன்னு சொல்லிட்டேன் என்பார்.
அவருக்குப் பிரியமான என் பெரியம்மா மகன் சதீஷ் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த போது, பட்டினப்பாக்கத்திலிருந்து பாட்டியை ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் சிஃபி -ஐவே இண்டர்நெட் செண்டருக்கு அழைத்துச் சென்று அவனுடன் வீடியோ சாட்டிங் செய்ய வைத்தேன். ஒரு குழந்தையின் குதூகலத்துடன் சென்டரில் இருக்கும் எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் சத்தமாக வா(நா)ய்ஸ் சாட் செய்தார்.
கோவிலுக்குப் போவது எப்படியோ அதே போலத் தான் ஆஸ்பத்தரிக்குப் போவதும்.பத்து நாட்களுக்கு ஒருமுறை ஆஸ்பத்தரிக்குப் போனால் தான் பாட்டிக்கு மனதுக்கு நிம்மதியாக இருக்கும்.எங்களுக்கு ஆகி வந்த டாக்டர் சேவா கிளினிக் டாக்டர் குமரகுருபரனிடம் தான் இருபது வருடங்களுக்கும் மேலாக என் பாட்டிக்கு, சிகிச்சை அளிப்பவர் என்று சொல்வதை விட, பாட்டி புலம்புவதைப் பொறுமையாக்க் கேட்பவர் என்று சொல்லலாம்.
அவரிடம் சென்று இடுப்பெல்லாம் ரொம்ப வலி, விண்ணு விண்ணுனு ஒரே முழங்கால் வலி , கோவில் பெருக்குறதுக்கு ஆள் போட்டுட்டா. ரொம்ப வேலை எல்லாம் செய்யல. வீடு, வாசல் பெருக்கி, கோலம் போட்டு, சமையல் செஞ்சு, பத்துப் பாத்திரம் தேய்க்கிறேன் அம்புட்டுத்தான். வேற ஒண்ணுமே செய்றதில்லை ஆனாலும் ஏன் இப்படி வலிக்குது டாக்டர் , என்று சொல்லும் எழுபது வயது நோயாளியை பார்த்து, அவரும் சிரித்துக் கொண்டே, மாத்திரை எழுதித் தருவார். சந்தேகமாக, ”மாத்திரைல குணமாகிடுமா? ஊசி போடுங்களேன் டாக்டர், அப்பதான் சீக்கிரம் சரியாகும்” என்பார்.அவரும் இடுப்பில் ஒரு டைக்லோஃபினாக் ஊசி போட்டு விட, மறுநாள் காலை சக்கரம் முன்பை விட வேகமாக சுற்ற ஆரம்பிக்கும்.
சதா யாரையாவது கோள் சொல்லும், மருமகளைத் துன்புறுத்தும் பக்கத்து வீட்டு மாமி, தெருவில் புழுதிவாரித் தூற்றும், சூனியக்காரியைப் போலத் தோற்றமுள்ள காரைக்குடிக் கிழவி, தேவிடியா முண்டை, தூமியக்குடிக்கி என்று தினசரி குழாயடியில் சண்டையிடும் மிட்டாய்க்காரக் கிழவி இவர்களுக்கு மத்தியில் வளர்ந்த எனக்கு,ஒருவரையும் மனதால் கூட வருத்தாத, எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நடக்க வேண்டும் என்று அதையே தனது தினசரிப் பிரார்த்தனையாக்க் கொண்ட என் பாட்டி தேவதையாய்த் தோன்றியதில் ஒரு ஆச்சரியமும் இல்லைதான்.ஹாஸ்டலில் வளர்ந்த எனக்குப் பாட்டியின் அருமை பெருமைகள் தெரிய ஆரம்பித்தவுடன் அவருக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகி, அவரது செல்லப் பிள்ளையானேன்.
புத்தகம் படிப்பது, பொறுமையாய் இருப்பது,பெரியவர்களுக்கு மரியாதை தருவது,இறையுணர்வு, அடுத்தவருக்கு உதவுவது, என்று என்னிடம் நல்ல பழக்கங்களாய் இருக்கும் அத்தனையும் பாட்டியிடமிருந்து வந்தவைதான்.
பயிர்க்குழி போட்டு விதைகளை ஊன்றி, அவரை, பீர்க்கை ,தக்காளி என்று காய்கறிச் செடி கொடிகளை வீட்டின் பின்புறச் சந்தில் வளர்ப்பார். துளசி நட்டு வைத்து, நல்ல தண்ணீரை ஊற்றி, காலை சூரிய உதயத்தின் போது நமஸ்கரிப்பார். துளசி அம்மனோரு என்றுதான் அழைப்பார்.
ரொம்ப காலமாக, ”உன்னை ஏரோப்ளேன்ல கூட்டிக்கிட்டுப் போறேன் பாட்டி” என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்.அதற்காக, விமானப் பயணத்தைப் பற்றிய ஒரு சிறு புத்தகத்தை அவருக்கு வாங்கிக் கொடுத்தேன்.விமானப் பயணம் பற்றின சந்தேகம், பயம் ஏதேனும் இருந்தால் அதைப் படித்துத் தெரிந்து கொள்வாரென.நான் நினைத்த்தற்கு நேர் மாறாக நடந்தது.அதைப் படித்து முடித்த பாட்டி, இதென்ன, விமானத்துல போனா, தல சுத்தும், காதெல்லாம் அடைக்கும்னு என்னவெல்லாமோ போட்ருக்கான் நான் வரல என்று ஒரேயடியாக மறுத்து விட்டார். அப்புறம், தற்போது சமீபத்தில் மிகுந்த பிரயாசையுடன் என் அண்ணன் விமானத்தில் அழைத்து வரவும், ஏறுனதும் தெரியல, இறங்குனதும் தெரியல. அவ்வளவு நல்லா இருந்த்து. ப்ளேன் பறக்குற மாதிரியே தெரியல.இனிமே என்னை ஏரோப்ளேன்லயே எல்லா இட்த்துக்கும் கூட்டிட்டுப் போ என்றார்.
கடும் உழைப்பை நான் கண்டு கொண்ட்து ராதாப் பாட்டியிடம் தான்.குடும்பத்தில் ஒரு சடங்கா, வளைகாப்பா, ஒரு திவசமா, அத்தனை வேலைகளும் அவரே முன்னின்று செய்வார்.வீட்டில் நடக்கும் இவைகளைத் தவிர கோவிலில் நடக்கும் ராமநவமியோ, அனுமன் ஜெயந்தியோ எல்லாவற்றிற்கும் எண்பது சதவீத உழைப்பு ராதாப் பாட்டியுடையதாகத்தான் இருக்கும்.அவருக்குள் இருக்கும் அந்த ராட்சஸ சக்தி அந்த வேலைகளை எல்லாம் முடித்து விட்டுத்தான் அவரை விட்டு விலகும்.அதன் பின் ஒரு நாளோ, இரண்டு நாள்களோ கிழிந்த நாராய்க் கிடப்பார்.சேவா டாக்டரின் ஒரு ஊசியினால் மீண்டும் மேட்ரிக்ஸ் ஹீரோயினாய் உருப்பெற்று ஓடியாடுவார்.
கோடை காலமென்றால் அரிசி அப்பளம், உளுந்து அப்பளம், வடாம் போடுதல், ஊறுகாய், வடு மாங்காய் போடுவதில் எல்லாம் பாட்டி பிஸியாகி விடுவார்.
ஒரு நாள்கூட ராத்திரி பத்துப் பாத்திரம் தேய்க்காமல் தூங்க மாட்டார்.
பாட்டிக்கு உடம்புக்கு முடியாமல் சீக்கிரம் தூங்கி விட்டிருந்தாலோ,என் சகோதரிகள் டிவி நிகழ்ச்சிகள் பார்த்து விட்டுக் களைப்புடன், காலையில எந்திரிச்சுத் தேய்ச்சுக்கலாம் என்று தூங்கி விட்டிருந்தாலோ நடுராத்திரியில் பாத்ரூம் போக எழும் பாட்டி, பிசாசு வேலை செய்வதைப் போல, தேய்க்காமல் விட்டிருந்த பாத்திரங்களை தேய்த்து விட்டு நேரத்தைப் பார்த்துவிட்டு மூன்று நான்கு மணிக்கு முன்னதாக இருந்தால் மீண்டும் படுப்பார்.நாலறை, ஐந்து மணி என்றால் வாசல் பெருக்கி இன்னொரு புதிய நாளை வரவேற்கத் தயாராவார்.
கல்லுப்பட்டியில் பெரிய பண்டிகை என்றால் அது முத்தாலம்மன் பொங்கல் தான்.அதற்கப்புறம் தீபாவளி. பண்டிகை நாள்களில் வீட்டில் ஆட்களின் எண்ணிக்கை இருபதுக்கு மேலாகும்.எல்லோருக்கும் அதிகாலை எழுந்து வெந்நீர்க் காய்ச்சுவதிலிருந்து, .(பின்பக்க சந்தில் இருக்கும் அடுப்பில் அவர் வெந்நீர் அடுப்பைப் பற்ற வைத்தவுடன் ரிலே ரேசில் குச்சியை வாங்கிக் கொள்வதைப் போல ஊதுகுழலை நான் வாங்கிக் கொண்டு பாட்டியை காபி போட சமையலறைக்கு அனுப்புவேன்) காபி டிபன், உணவு தயாரிப்பது, பரிமாறுவது என்று அத்தனை வேலைகளிலும் முழு ஈடுபாடுடன் செய்வார்அம்மன் எங்கள் தெருவுக்கு வரும்போது மட்டும், கொஞ்சம் ப்ரேக் எடுத்துக் கொண்டு அம்மனை தரிசித்து விட்டு, மீண்டும் செக்கு மாடு சுற்றத் தொடங்கும்.
முருகா, சண்முகா வேலாயுதா என்று கட்டையைக் கீழே போடுவதற்கு இரவு பத்தரைக்கு மேலாகும்.அதன் பிறகும் கூட, அம்மாவிடமோ, மற்ற பேரன் பேத்திகளிடமோ, படுத்துக் கொண்டே சில நிமிடங்கள் உரையாடலில் போகும்.பின்னர், ஐயையோ என்று கூவிக்கொண்டே, எழுந்து, தயிருக்கு உறை ஊத்த மறந்திட்டேன் என்று அதையும் முடித்து வருவார்.
கால நேரப் படி வேலைகளைச் செய்வதில் பாட்டி ஒரு சாதுவான இந்தியன் தாத்தா. ஆறு மணிக்கு வாசல் தெளித்துக் கோலம் போடவேண்டுமன்றால் அது ஆறு மணிக்கு நடக்க வேண்டும். அவருக்கு எல்லாமே டயம் பிரகாரம் ஒழுங்காக நடக்க வேண்டும். சொல்லப் போனால், தான் டயப் படி செய்து முடிக்கும் எல்லா வேலைகளையும் போல தள்ளித் தள்ளிப் போகும் தன் மரணத்தைத் செய்து முடிக்கவில்லையே என்கிற வருத்தம் கூட உண்டு.
ரொம்ப வருடங்களுக்கு முன்னால் ஒரு குறிகாரி பாட்டியிடம் சொன்ன மூன்று விஷயங்கள்…நீ ஒரு கொம்பன நம்பிக்கிட்டு இருக்க,பேரப் பிள்ளைங்க கிட்ட நீ அடி, மிதி வாங்கணும், அன்னிக்குக் கட்டுன சேலை, அன்னிக்கு சாப்பிட்ட சாப்பாடு அதோட ஒரு விக்கல்ல நீ போயிடுவ, படுத்துட்டு, இழுத்துக் கிட்டு எல்லாம் இருக்க மாட்டனு சொல்லிருக்கா. அவ சொன்ன எல்லா விஷயங்களுமே அப்பிடியே பலிச்சிருச்சு என்று குறிகாரியின் மூன்றாவது வாக்கு பலிப்பதற்காகக் காத்திருக்கிறார்
________________________________________________________________________________
நேற்று-அதாவது, இவங்க எப்பிடி இன்னும் உயிரோடு இருக்காங்க என்று அந்த சீனியர் டாக்டர் கேட்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு-சென்னைக்கு சென்றிருந்தேன். பாட்டியுடன் சில மணிநேரங்கள் கூட இருந்தேன். முந்தின நாள் மதியம், நான் வேணா பாத்திரம் தேய்ச்சுக் குடுக்கட்டுமா என்று பாட்டி கேட்டு அவரை வீட்டில் எல்லோரும் திட்டாத குறை J
மாலை பாட்டியிடம் அவரைப் பற்றி எழுதிய இந்தப் பதிவைப் படிக்க்க் கொடுத்தேன். சற்றே சிரமப் பட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தார்.அவர் வாசிக்க வாசிக்க பழைய ஞாபகங்கள் உருப்பெற்று அவர் முகத்தில் அவர் அந்தக் காலத்தில் அனுபவித்திருந்த அதே உணர்வுகள் பிரதிபலித்தன. சில விஷயங்களை சிரிப்புடன் படித்தவர், சித்திக் கொடுமை விஷயங்களைப் படித்து, உதடு கோணி, முகத்தில் துக்கம் மீறி கிட்ட்த்தட்ட அழும் நிலைக்கு வந்து விட்டார்.
<iframe width=”425″ height=”349″ src=”http://www.youtube.com/embed/P3-jMnaP8d8” frameborder=”0″ allowfullscreen></iframe>
அத்தனையும் வாஸ்தவம். எப்பிடிறா இவ்வளவு ஞாபகமா எல்லாத்தையும் பிரிண்ட் போட்ட மாதிரி எழுதியிருக்க? என்று ஆச்சரியப் பட்டார்.பாட்டிக்குப் படிக்க்க் கொடுத்த அந்தப் பதிவில் ஞாபகமாக அவருக்குக் கிட்னி செயலிழந்த விஷயம், டயலிஸிஸ் பற்றின விஷயங்கள் எல்லாவற்றையும் எடிட் செய்து விட்டுத்தான் படிக்கக் கொடுத்தேன்.
<iframe width=”425″ height=”349″ src=”http://www.youtube.com/embed/c2gg1nCyUr0” frameborder=”0″ allowfullscreen></iframe>
hi anna its good :)cool… lol
அவ்வாவின் வாழ்க்கைக் கதை மனதை உருக்கியது. வலியின்றி போய்சேர மட்டுமே நாம் இறைவனை வேண்ட முடியும். எனக்கு ராதா அவ்வாவையும், அவ்வாவுக்கு என்னையும் மிகவும் பிடிக்கும். எனக்கு நீ ”ஸ்நேகிதன்” என்ற வார்த்தையே அவர் உருவாக்கியதுதான்.
ராதாவ்வா குணம் பெற்று மீண்டும் நலமுடன் வாழ கடவுள் அருளட்டும்.
roomba nalla irundathu doctor! itherke ungalukku gnanapeeda virudhu kodukklam!
Very emotional post..Nice to know about all these..Proud of you Anna..Let us pray for Radha Avva..
Dear Prakash,
Very good tribute to Avva. She deserves it. She has been the pillar of the family. She and Rajakumari akka are the living example for resilience.
As I have seen her in close quarter, I know what a wonderful woman she is. I believe the secrets about her longevity are, hard work, dedication, child like enthusiasm and open mindedness for latest trends and changed her lifestyle accordingly. In our early days she used to be very strict about “aachcharam” then later days, she changed herself according to the society. Her Adai, Dosa podi are my favorites. I can still remember the taste of the Dahi rice with Dosa podi. Though I did not eat Dahi those days, but still would try just for the Dosa podi. Please convey my namaskarams to her. I will feel for her peaceful days for her rest of the life.
Lovingly
Raj
has given a feel that we are with Radhaavva
Usually I hesitate to read very lenghthy article such as this. But this is very interesting & moving. Like to give credit to two things.Your drafting skill & the time you spend to make this. Hats of to U anna.
I am very glad to be her grandchild. Sure her life history will be a good and great lesson not only to this generation, but also for our future generations. I pray the God for her Peaceful life in the rest of these days. Thanks Anna for your beartiful editing…
உங்களின் ஆத்மார்த்த அன்பும்
அவர் மீதான பிரமிப்பும் வாசகனாகிய
என்னால் கூட புரிந்து கொள்ள முடிகிறது.
நல்ல மனசு..நல்ல மனுஷி ..
இன்று மிகவும் அருகி போனது இத்தகைய மனம்