பேர் சொல்லும் மரங்கள்

ஆகஸ்ட் 15 அன்று, என் நண்பன் ஜெயக்குமாரின் மகளது பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்குக் கல்லுப்பட்டி சென்றிருந்தேன்.அது முடிந்தவுடன் நீண்ட நாள்களாக மனதில் இருந்த எண்ணத்தை செயல்படுத்தலாமே என்று நினைத்தேன். அது- “பள்ளியில்,நான் நட்டு வைத்து, வளர்ந்த மரங்களைப் போய்ப் பார்த்து வருவது” என்பதுதான்.
Tree, மரங்கள்

காந்தி நிகேதன் பள்ளிக்குள் நுழைந்த உடனேயே விளையாட்டு மைதானத்தில் தான் கால் வைக்க வேண்டும். மைதானத்தின் இடது ஓரத்தில் காம்பவுண்ட் சுவரை ஒட்டித்தான் இருந்தன நான் நட்டு, வளர்ந்த மரங்கள். மெல்ல அவைகளை நோக்கி நடந்தேன்.
அப்போதுதான் ஒரு சிறு தூரல் பொழிந்து, இயற்கை உற்சாகமாக இருந்த, அணில்களும், பறவைகளும் தத்தம் மரங்களை முன்னதாகவே தேடத் தொடங்கிய மாலைப் பொழுது.
காற்றில் வேகமாக அசையும் மரக்கிளைகள், பழகின நாய்க்குட்டியின் வாலாகத் தெரிந்தன. நொடியில் மனம், அந்த வேப்பங்கன்றுகளை ஊன்றிய அந்த நாளைக்குப் பயணித்தது.

நாங்கள் நட்டு வைத்து, வளர்ந்த வேப்ப மரங்கள்

அப்போது நான்,பதினோராம் வகுப்பில். ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித் தனியே இடங்களைத் தேர்ந்தெடுத்து, மரக்கன்றுகள் நட்டு வளர்க்க, தலைமையாசிரியரிடமிருந்து சுற்றறிக்கை வந்திருந்தது. 11-D க்கு ஆடிட்டோரியத்திற்கு எதிரில், பள்ளியின் மைதானச் சுற்றுச் சுவரை ஒட்டிய இடம். P.T. வகுப்பில், வெயிலில் வியர்க்க விறுவிறுக்க, கடப்பாரை, மண்வெட்டிகளுடன் மூன்றுக்கு மூன்று அடி ஆழத்தில் குழி தோண்டினோம். தோண்டிய அந்தக் குழியை இரண்டு மூன்று நாள்கள் காய விடுவோம். அப்புறம் மாட்டுச்சாணம்,தொழு உரம் போட்டு, பண்படுத்துவோம்.பிஞ்சு வேர் முளைத்து எளிதாய் பூமியில் ஊடுருவி வேரூன்ற, அடிமண்ணை சற்றே நெகிழ்த்து விடுவோம்.அருகில் வேறேதும் களைச் செடிகளோ, வேறு வேண்டாத செடிகளின் வேரோ இருந்தால், அதை, வளரும் வேப்பங்கன்னுக்கு இருக்கும் நீரையும்,சத்தையும் பிடுங்கித் தின்ன வரும் எதிரிகளாய் எண்ணி வேரோடு களைவோம்.

பாட்டனி துறையில் இருந்துதான் மரக்கன்றுகள் சப்ளை செய்யப்படும். வேப்பங்கன்றுகள் தான் எங்கள் பள்ளியின் ஆதர்ச மரம். வருடத்திற்குப் பத்து மாதங்கள் வெயில் வாட்டும் கல்லுப்பட்டி போன்ற வறண்ட நிலங்களில்,வளர்ந்து அகலமாக,ஆஜானுபாகுவாகப் பரவி நிற்கும் வேப்பமரங்கள் கொடுக்கும் நிழல் ஒரு வரப் பிரசாதம்.எவ்வளவு மோசமான தண்ணீராக இருந்தாலும், அதை உட்கொண்டு தன் உயிர்த்தலை நீடிக்கும் அற்புத மரம்.
இருபது வருடங்களுக்கு முன்பே எங்கள் பள்ளியில் இருந்த மரங்களின் எண்ணிக்கை நானூறை நெருக்கி வரும். அருகிலிருக்கும் தேவன்குறிச்சி மலையின் மீதிருந்து பள்ளியின் இடத்தைப் பார்த்தால், விளையாட்டு மைதானம் மட்டும் செம்மண் வட்டமாகத் தெரியும், ஆடிட்டோரியத்தின் அஸ்பெஸ்டாஸ் கூரை பழுப்பாகத் தெரியும்: பள்ளியின் மீதி இடங்களெல்லாம் மரங்களின் அடர்த்தியில் மறைந்து கிடக்கும்.இன்றைக்கும் விக்கிமேப்பில் பார்க்கையில் அப்படித்தான் தெரிகிறது.இப்போது மரங்களின் எண்ணிக்கை, நிச்சயம் ஆயிரத்துக்கு மேலேயே இருக்கும்.

எதிரில் தெரியும் ஆடிட்டோரியம்

கடவுளே, இந்த கன்னு நல்லா முளைச்சு,பெரிய மரமா வரணும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டே எல்லா கன்றுகளையும் நட்டோம்.
நடப்பட்ட கன்றுகளை,நாள் தவறாது தண்ணீர் விட்டு, கண்ணும் கருத்துமாக வளர்ப்போம்.அரைப் பரீட்சை, முழுப்பரீட்சை லீவு வந்தாலும், என் வீடு பள்ளிச்சுவரை ஒட்டியே அமைந்திருந்ததால், கம்பி வேலியை விலக்கிக் கொண்டு, குடத்தில் கொண்டு வந்து, தண்ணீரை மெதுவாகக் குழியில் ஊற்றுவேன்.காய்ந்து போயிருந்த மண் சட்டென்று நீரை உறிஞ்சி, “இன்னும் கொஞ்சம்” என்று கேட்பது போலத் தோன்றும், எந்தக் காரணம் கொண்டும், நாம வச்ச கன்னு பட்டுப் போய் விடக்கூடாது என்று பொதுநலம் பாதி, சுயநலம் பாதியாய்க் கலந்து செய்த கலவையாய் நான், அந்த மரங்களுடன் சேர்ந்து வளர்ந்தேன்.

செடி கொடிகளை அக்கறையுடன் வளர்க்கும் பழக்கம் பாட்டியிடம் இருந்து கற்றுக் கொண்டது. வீட்டின் பக்கவாட்டு சந்துப் பகுதி, மருதோன்றி, செம்பருத்தி, சித்தரத்தை என்று எப்போதும் பசுமையாய் இருக்கும். ஒவ்வொரு பருவத்துக்கும் தவறாது, பயிர்க்குழிகள் போட்டு, பந்தல்களில் அவரை, புடலை,பீர்க்கங்காய் என்று ஏராளமாய்க் காய்த்துத் தொங்கும். செவ்வாய்க் கிழமை சந்தையில் விதைகளை வாங்கி, நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து, செப்பனிட்ட மண்ணில், கடவுளை வேண்டி, பாட்டி விதைகளை நடுவாள். நான் வேளைக்கொருதரம் விதை முளைத்து விட்டதா என்று போய்ப் பார்ப்பதைப் பார்த்து சிரிப்பாள்.

நான் அசந்த ஏதாவது ஒரு கிழமையில், மெல்லியதாய் ஒரு ஜீவன் முளைத்து வெளியே தெரியும். புவியீர்ப்பு விசைக்கெதிராக, தன் சக்தியெல்லாம் திரட்டி, மண்ணைத் துளைத்துக் கொண்டு, மேலெழுந்து வந்த அந்தப் பிஞ்சுத் தாவரத்தை பிரமிப்பாய்ப் பார்த்துக் கொண்டே இருப்பேன். நாங்கள் போட்ட விதைகள் தவிர, எதிர்பார்த்தே இராத, புளியஞ்செடி போன்ற வேறு வகைத் தாவரங்களும், அருகில் முளைத்து, திடீர் விருந்தினராய்த் திகைப்பூட்டும்.அந்தச் சின்னஞ்சிறு செடிகளை, விரல்களால் சுட்ட விடமாட்டாள்.-நான்கு விரல்களையும் மடித்து, கட்டை விரலை, நடு மற்றும் மோதிர விரல்களுக்கிடையே நீட்டி, செடிகளைக் காண்பிப்பாள்.நேரடியாக விரலை நீட்டி சுட்டினால், செடி, பட்டுப் போய் விடுமாம்.

Tree Worship relief at The Stûpa of Bharhut A Buddhist Monument BCE

மரங்களுக்கும் மனிதனுக்கும் இருக்கும் பந்தம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து வரும், இன்னும் விலகாத ஒரு பந்தம்.. ஆதிமனிதனுக்கு, முளைத்து, செடியாகி, கிளைத்து, மரமாகி, நெடுந்தோங்கி வளர்ந்த மரங்களே, வளர்ச்சி பற்றியும், பரிணாமம் பற்றியும் பகர்ந்துரைத்தன.

இந்த உலகம் முழுவதும் இருக்கும் நம் அனைவருக்கும், அதிகாலை விழிப்பது முதல் இரவு உறங்குவது வரை ஏதேனும் ஒரு வகையில் மரத்துடனான நமது உறவு,தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தொட்டில் முதல் கடைசியில் மீளாத்துயில் கொள்ளும் பாடை வரை ஏன், அதற்கப்புறமும் எரிப்பதற்கு, என மரங்களுடனான நம் பந்தம் பிரிவதேயில்லை. நுனிக் கிளையிலிருந்து, அடிவேர் வரை,மரங்களின் ஒவ்வொரு பகுதியும் மனிதனுக்குப் பயன்படுகின்றன.இத்தனை உபயோகங்கள் இருப்பினும், மரங்களை பயன்பாடு (utility) கண் கொண்டு பார்க்காமல் வெறுமனே ஒரு குழந்தையாய்ப் பார்த்து மகிழும் பார்வையில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை.

சராசரியாக ஒரு வருடத்திற்கு 260 பவுண்டுகள் ஆக்சிஜனை ஒரு மரம் உற்பத்தி செய்கிறது.நன்கு வளர்ந்த இரண்டு மரங்கள், நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் மொத்த ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
வேப்ப மரமும், அரச மரமும்தான் ஆக்சிஜனை அதிக அளவில் உற்பத்தி செய்யும் வல்லமை பெற்றவை.
வேத காலத்திலிருந்தே இயற்கையை நேசத்துடன் போற்றிப் பாதுகாக்கும் மரபு நம்முடையது.இந்து மரபில் மரங்களின் மகத்துவம் உணர்ந்தே, ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தலவிருட்சம் என்று விருட்சங்களை தெய்வங்களின் உறைவிடங்களாக்கி வழிபடுகிறோம்.

இதுவரை எத்தனை ஆயிரம் மரங்களைப் பார்த்திருக்கிறோம்; எப்போதாவது ஒருமுறையேனும், இவைகளை யார் நட்டு வைத்து வளர்த்திருப்பார்கள் என்று எண்ணத் தோன்றியிருக்கிறதா?
நூற்றுக் கணக்கான மரங்கள் சூழ, அடர்ந்த காடுகளில் நடந்து சென்றதுண்டா? குற்றாலத்தின் தேனருவிக்கு செல்லும் வழியிலும், சிறுமலைக்குக் குறுக்காக ஏறும் மலைப்பாதையி்லும், சுற்றியிருக்கும் நூற்றுக்கணக்கான மரங்களின் ஆயிரக்கணக்கான கண்கள் என்னையே உற்று நோக்குவதாய் உணர்ந்திருக்கிறேன். மரங்கள் நம் மனதுடன் உரையாடும் அரிய பொழுதுகள் அவை.

மரங்கள் இல்லாத நகரம் எத்தனை அழகாயிருப்பினும் அது என்றைக்கும் முழுமை பெறாது.இரண்டு முறை துபாய்க்கு சென்று வந்தேன். எத்தனைதான் அழகானதாக, நவீனமாக இருப்பினும் ஏதோ ஒன்று குறைவதாய் உள்ளுக்குள் உணர்ந்தேன்.விமானத்தில் திரும்புகையில், சட்டென்று நினைவுக்கு வந்தது, மரங்கள் பெருமளவு இல்லாத அந்த காங்க்ரீட் காடு எனக்கு அத்தகைய உணர்வைத் தரக் காரணமென்று

இந்த பூமி, நாம் நம் முன்னோர்களிடமிருந்து பெற்ற சொத்து அல்ல. நம் குழந்தைகளிடமுருந்து வாங்கிய கடன். அதைப் போற்றிக் காப்பதை செவ்வனே செய்ய வேண்டும். மரங்களைப் பேணுதல் முதல் கடமை.சுற்றுப் புறச்சூழலை மாசுபடுத்தாமல் இருப்பது அடுத்த கடமை. சாதி வாரியாக ரிசர்வேஷன் கொடுக்கிறோமோ இல்லையோ, இனி, இந்த பூமியை எந்த அளவுக்கு ஒருவர் பசுமைப் படுத்துகிறாரோ, அதை அளந்து, அதற்கென அவருக்கு, அவர் குடும்பத்திற்கு சலுகைகள் வழங்கலாம்.

பொது இடங்களில் சேவையைப் பெற வரிசைகளில் நிற்கத்தேவையில்லை, குறைக்கப்பட்ட சிறப்புக் கட்டணங்கள் இப்படி…- IQ, EQ போல, இனி GQ-வும் வரவேண்டும். (Green Quotient).ஒருவரின் GQ-வைப் பொறுத்தே, இந்த உலகம் அவருக்கு மரியாதையையும், புகழையும் தரவேண்டும்.இது போன்ற விழிப்புணர்வை, நம் குழந்தைகளிடம் இப்போதே ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழந்தை பிறந்த பிறகும், அவர்களுக்கு சொத்து சேர்ப்பதுடன், அவர்கள் பெயரில் மரக் கன்றுகள் நட்டு, வளர்த்து வரவேண்டும்

இந்த மூன்று மரங்கள் மட்டுமல்ல.. காந்தி நிகேதனில் படித்த எட்டு வருடங்களில் குழி வெட்டியோ, செடி நட்டோ, களைகளைப் பறித்தோ, தண்ணீர் ஊற்றியோ, பல பத்து மரங்களின் ஜீவிதத்தை ஏதேனும் ஒருவகையில் செம்மைப் படுத்தி இருந்திருக்கிறேன். காந்தி கிராமப் பல்கலைக் கழகத்திலும் ரிஃபாரஸ்டேஷனில் பல ஏக்கர் நிலங்களில் நூற்றுக் கணக்கில் மரக் கன்றுகள் நட்டு, நிலத்தை செம்மைப் படுத்தி இருக்கிறோம்.அங்கு டிப்ளமா இன் அக்ரிகல்ச்சர் பயில்கையில், எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட விளைநிலத்தில், உழுது, விதை விதைத்து, நீர்ப்பாய்ச்சி, களைகளைப் பறித்து, உரமிட்டு , சோளக்கதிர்கள் முற்றிய பின் அறுவடை செய்திருக்கிறேன். அப்போது அது கடினமான சுமையாகத் தோன்றினாலும், இப்போது அது சுகமாகப் படுகிறது.

நான் வளர்த்த மரங்களால்,எனக்கும் இந்த பூமிக்குமான தொடர்பின் கண்ணி இன்னும் சற்றே வலுப்பெறுகிறது.
நாமிருக்கும் இந்த பூமியைக் காப்பதற்கு நான் எடுத்து வைக்கும் முதல் அடி அது.


இனி கல்லுப்பட்டியில் என் சந்ததியினர் யாருமே இல்லாவிட்டாலும், நானும் என் அடுத்த தலைமுறைகளும் போய்ப் பார்ப்பதற்கு, எனக்கு சொந்தமான சில ஜீவன்கள் உண்டு. என் அடுத்த தலைமுறை, வாசிப்பதற்காக பூமிப்பந்தில் நான் விட்டுச் செல்லும் பசுமை டைரிக் குறிப்புகள்.அவைகளைச் சென்று பார்க்கலாம். அவைகளோடு உரையாடி மகிழலாம். இன்னும் சில வருடங்களில் இந்த நூறை சில ஆயிரங்களாக்கி, பல்கிப் பெருகச் செய்ய வேண்டும்.
புவியீர்ப்புவிசையை எதிர்த்து மேலெழும்பும் நம்பிக்கை விதைகள் என்னுள் ஓராயிரம் உண்டு.

படங்கள்: இணையத் தேடல்- கூகுள் மூலம்.

தொடர்புடைய பதிவுகள்:
ஸ்கூலுக்குப் போயிருந்தேன்

ஸ்கூலுக்குப் போயிருந்தேன்

Did you like this? Share it:

11 comments

 1. மிக அருமையான நினைவலைகள். எனக்கும் காந்திநிகேதனத்துடன் மிகுந்த பற்றுதல் ஏற்பட்டதற்கு மரங்களும் காரணம் என நினைக்கிறேன். நல்ல பதிவு. நிச்சயம் எனது குழந்தைக்கு மரம் வைக்கச் சொல்லிக் கொடுப்பேன். இயற்கை குறித்த நல்ல புரிதல்கள் ஏற்பட என்னால் ஆனதைச் செய்வேன்.

 2. பிரகாஷ்: அற்புதமான ஒரு கட்டுரை. அந்த மரங்கள் உங்களையும் உங்கள் சந்ததியையும் மனமாற ஆசீர்வதிக்கும்.

  இப்பொழுதெல்லாம் அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களின் பொழுது லட்சம் கன்றுகள் வைக்கிறோம் கோடி கன்றுகள் வைக்கிறோம் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அவற்றில் எத்தனை கன்றுகள் பேணிப் பராமரிக்கப் பட்டு முழு மரங்களாயின என்ற தகவல் வருவதேயில்லை. அரசியல்வாதிகளின், ஐ ஏ எஸ் அதிகாரிகள் சொன்னக் கணக்குப் படி மரங்கள் நட்டு அவையும் வளர்ந்திருக்குமானால் இன்று தமிழ் நாட்டில் மனிதன் நடக்க இடமில்லாமல் காடுகளினால் நிறைந்து போய் இருந்திருக்கும். இது போன்ற பகட்டான போலி விளம்பரங்கள் இல்லாமல் கல்லுப்பட்டி பள்ளிக் கூடம் அமைதியாக ஒரு மாபெரும் கொடையை சமூகத்துக்கு வழங்கியுள்ளது.

  மாணவர்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தினால் அன்றி மரம் வளர்க்கும் இயக்கம் பல்கிப் பெருக வாய்ப்பே இல்லை. பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாண்வனுக்கும் அந்த ஊரில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு கன்றை நட்டு மரத்தை வளர்க்கும் பொறுப்பை அளிக்க வேண்டும். பள்ளி இறுதியில் மரத்தின் வளர்ச்சிக்கேற்ப மார்க்குகள் வழங்கப் படும் அவையும் மேற்படிப்புக்குக் கணக்கில் கொள்ளப் படும் என்று அறிவித்தால் மரங்கள் தானே வளர்ந்து பெருகி விடும். ஆத்மார்த்தமான பங்களிப்பு இல்லாவிட்டால் கட்டாயப் படுத்தியாவது இந்த வழக்கத்தைக் கொண்டு வரத்தான் வேண்டும்.

  அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வைக்கும் கன்றுகள் எல்லாம் ஆடு மாடுகளுக்குப் பாதி தண்ணீர் விடாத வறட்ச்சிக்கு மீதி என்று காணாமல் போய் விடுகின்றன. தனி நபர்களின் ஈடுபாடுகள் இல்லாமல் அவை வளர சாத்தியமே இல்லை. அந்தத் தனி நபர் ஈடுபாட்டை மாணவப் பருவத்திலேயே வளர்த்தல் அவசியம். அதற்கு நீங்கள் வளர்த்த மரமும் உங்கள் பள்ளியும் ஒரு முன்னுதாரணமாகத் திகழட்டும்.

 3. Beautiful doctor! it brought back our thoughts to the that have gone by when we used to visit your home at Kallupatti. Those were days when the agraharam was green and that there was lot of trees near by! now it is only a concrete jungle! The comments by Mr.Sadagopan is thought provoking also! Please plant a tree in your new home so that it will also tell a story to Jittu Srivatsan & Uma. Regards, Chithappa and Chithi

 4. True Anna,

  When i went to check for school for my Kid, i felt that i am missing my home town.

  Also remembered amma was annoying about the person in oppsite home cut and sold all for little penny……

  இந்த பூமி, நாம் நம் முன்னோர்களிடமிருந்து பெற்ற சொத்து அல்ல. நம் குழந்தைகளிடமுருந்து வாங்கிய கடன். அதைப் போற்றிக் காப்பதை செவ்வனே செய்ய வேண்டும். – Wonderful lines

  Sri kutti should follow all these. Tell him from now whenever all you three go out in the hot city BLR

 5. வணக்கம், நான் மற்றும் எனது நண்பர்கள் சேர்ந்து எங்கள் ஊரில் பொது நிலங்களில் உள்ள கருவேலம் மரங்களை நீக்கிவிட்டு பயன் தரும் மரங்களை நட விரும்புகிறோம். இதற்கு முறையான அனுமதி மற்றும் நிதி வசதி எவ்வாறு பெற வேண்டும் என்பதை கூறுங்கள்

Leave a Reply

Your email address will not be published.