சாந்தி அக்கா வகுப்பு என்றவுடன், வகுப்பின் சூழலே கொஞ்சம் மாறும்;காற்றின் வெப்பநிலை, ஒரு இரண்டு செல்ஷியஸ் கூடும்.காஷுவல்தனங்கள், வாலாட்டங்கள் மறைந்து, புயலுக்கு முந்திய அமைதியாய்த் திகழும்.கண்டிப்புக்குப் பெயர் போன அவரிடம் எங்களது வால்தனங்களை எல்லாம் ஒட்ட சுருட்டி வைத்துக் கொள்வோம்.
அவர் வகுப்பில் நுழையவும், “வணக்கம்” என்று க்ளாஸ் லீடர் உரக்கச் சொல்லவும், மொத்த வகுப்பும் விறைப்பாக “வணக்கம்” என்று ஏக குரலில் மிலிட்டரியாக உரைக்கும். (எங்கள் பள்ளியில் ஆசிரியர்களை ஐயா என்றும் ஆசிரியைகளை அக்கா என்றும்தான் அழைக்க வேண்டும்)
உள்ளே நுழைந்து, அட்டெண்டென்ஸ் எடுத்து விட்டு, அன்றைய வகுப்பைத் தொடங்கினால், முக்கால் மணி நேரத்திற்கு, அவர் வகுப்பு எடுக்கும் ஓசையும், எங்களது அதிரும் இதயத் துடிப்பையும் தவிர (யாரை எப்போது, என்ன கேள்வி கேட்கப் போகிறாரோ?) வேறெந்த சப்தமும் இராது. பதினோராம் வகுப்பிலேயே, குறிப்பெடுக்கும் பழக்கத்தை, எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்.முக்கால் மணிநேர வகுப்பெடுக்க, குறைந்தது இரண்டு மணிநேரமாவது, தன்னை தயார்ப் படுத்திக் கொள்வார்.சென்ற வருடம் உபயோகித்த அதே உதாரணங்களைப் பயன்படுத்தாமல், அப்போதைக்கு எது சமீபத்திய செய்தியோ, தொழில் நுணுக்கமோ, அதைப் பகிர்ந்து கொள்வார். (பால் பண்ணையம் (dairy science) பாடத்தை எடுத்தவர்-Vocational Subject)
புரியுதா, புரியலயா என்று அவர் கேட்கையில், பதில் சற்று சுரத்து கம்மியாக இருந்தாலும், முதலில் இருந்து சளைக்காது சொல்லித் தருவார்.முப்பத்து இரண்டு பேர் இருக்கும் வகுப்பில், முப்பத்தி இரண்டாவது ரேங்க் வாங்கும் மாணவனுக்கும் புரியுமாறு தன் பயிற்றுவித்தலை மாற்றிக் கொள்வார்.
முக்கால் மணிநேரம் முடிந்து, மணி அடித்த பிறகுதான் பாதி மாணவர்களுக்கு போன உயிர் திரும்ப வரும்.ஒரு சில மாணவர்கள், அந்த பாதிப்போடே, அடுத்த வகுப்பிலும் பிடித்து வைத்த பிள்ளையாராய் அமர்ந்திருப்பர்.அவர் வகுப்பு வேளையைக் கடத்துவது எமகண்டத்தைத் தாண்டுவதைப் போல. சில தினங்களில் ஒரு நாளைக்கு இரண்டு எமகண்டங்கள் கூட வந்ததுண்டு.
நீ படிச்சா படி, படிக்காட்டி எனக்கென்ன என்று இருக்காமல், சாம, தான, பேத, தண்ட, இன்னும் எட்செட்ரா எட்செட்ராக்களை உபயோகித்து எங்களை மாநில அளவில்,முதல் மதிப்பெண்கள் எடுக்க வைத்தவர்.
கால்நடை வளர்ப்பு மற்றும் மேலாண்மை பற்றி, வானொலியிலும், தொலைக்காட்சியில் வரும் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் இருந்தும்,பயனுள்ள விஷயங்களை கேசட்டில் பதிவு செய்து வந்து, வகுப்பில் பகிர்ந்து கொண்டு,கற்றலை சுவாரசியமாக்குவார்.
சாந்தி அக்காவைப் பற்றி, எங்களை எப்படியாவது படிக்க வைத்து, வாழ்க்கையில் ப்ரொஃபசனல் கல்லூரிக்கு எங்களைத் தகுதியாக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் பற்றி அறிந்த பின்னர், அவர் மீதிருந்த பயம் அகன்று, மரியாதையும், அவர் விடும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்டு, அவரது சிறந்த மாணவர்கள் என்று எங்களை நிரூபிப்பதை ஒரு வெறியுடன் செய்ய ஆரம்பித்தோம்.
எங்களது பொதுத் தேர்வு விடைத்தாள்கள் சென்னையில் திருத்தப் படுகையில்,திருத்தும் ஆசிரியர்கள், விடைத்தாள்களின் தரத்தை வைத்தே சொல்லி விடுவர் – இது காந்தி நிகேதன் மாணவர்களது விடைத்தாள்கள் என்று-சாந்தி அக்காவின் கடின உழைப்பும், பயிற்சியும், ஒவ்வொரு மாணவனின் விடைத்தாளிலும் தெரியும்.
தமிழக அளவில் இருக்கும் பதினோரு இடங்களுக்கு,முதல் ஐந்து இடங்களைக் கைப்பற்றி, ஒவ்வொரு வருடமும், குறைந்தது ஐந்தாறு கால்நடை மருத்துவர்களையாவது உருவாக்குவதை தன் குறிக்கோளாகக் கொண்டவர்.
புத்தகத்திலிருந்து அல்லாமல் இதயத்திலிருந்து பாடம் சொல்லிக் கொடுத்தவர்.
நூறு,நூற்றுப்பத்து என்று முட்டையாய் நாங்கள் வாங்கிய மதிப்பெண்கள் எல்லாம்,அவர் கொடுத்த பிரம்படிகளால், நூற்றெண்பது, நூற்றுத் தொண்ணூறு என்று, முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துப் பல்கிப் பெருகின.
ஒன்றிரண்டு மாதங்களிலேயே, எங்கள் அனைவரது கையெழுத்தும் அவருக்கு அத்துப்படியாகி, நோட்டு, பரீட்சைத் தாள்களில் எல்லாம், பெயரைப் பார்க்காமலேயே, எங்கள் கையெழுத்தைக் கொண்டே யாருடையதென்று கண்டுபிடித்து விடுவார்.
எங்கள் மொத்த வகுப்பும் பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்க, விரதமிருந்து,திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டு, எங்களுக்குத் திருநீர் பிரசாதம் கொண்டு வந்து தருவார்.
குடும்ப சூழ்நிலை சரியில்லாத மாணவர்களது பெற்றோரைத் தனியே அழைத்துப் பேசி, தன்னால் இயன்ற உதவியை செய்து,குடும்பச் சிக்கலோ,வறுமையோ,படிப்பை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வார்.
.
தன்னிடம் பயின்று,கல்லூரி முடித்து,வெற்றி பெற்று, உயர் பதவிகளில் இருக்கும் மாணவர்களை வகுப்புக்கு வரச்சொல்லி, அவர்களது அனுபவங்களைப் பகிரச் செய்து எங்களுக்கு ஊக்கமூட்டுவார்.
செய்முறைப் பயிற்சித் தேர்வுக்கு வரும் கண்காணிப்பாளர்,(External Examiner) மாணவர்களுக்கு,நூற்றுக்கு நூறு போட வேண்டுமென , கோழி பிரியாணியின் மீதும், பரிசுப்பொருள்கள் அல்லது “கவர்”களின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் பள்ளிகளுக்கு மத்தியில், என் பையன் செண்டம் வாங்கிருவான் என்று மாணவர்களின் அறிவு மற்றும் திறமை மீது மட்டுமே நூறு சதவீதம் நம்பிக்கை வைத்து, அதை உண்மையாக்கிக் காட்டும், வளைந்தே கொடுக்காத வணங்காமுடி.
படிப்பு மட்டுமே அன்றி, ஒழுக்கம், பொறுமை, இறைநம்பிக்கை, பணிவு, பெற்றோருக்குப் பெருமை சேர்த்தல் போன்ற வாழ்க்கைக் குணநலன்களுக்கு எங்களுக்கு ஒரு முன்மாதிரி.நின்றெரியும் மெழுகுவர்த்தியாய், தன்னை உருக்கிக் கொண்டு, எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றியவர்.எங்களுக்காக அவர் கனவு கண்டு, அந்தக் கனவை நனவாக்க,எங்களது சிறகுகளை பலப்படுத்தியவர்..
இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் சொல்லிக் கொடுத்த சில பாடங்கள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கின்றன. அதை அவர் சொல்லிக் கொடுக்கையில் மொழியின் ஆளுமையோடு பிரயோகித்த அவருக்கே அவருக்கான வார்த்தைகளுடன்.
கற்பித்தலின் பயனை ஒருநாளில் அறிய முடியாது. அவர் விதைத்ததன் பழங்களை இன்று நாங்கள் அனுபவிக்கிறோம்-அவருக்கு எந்தப் பங்கையும் தராமலேயே.
இன்றைக்கும், தனது முதல் பேட்ச் (batch)மாணவர்கள் முதல் தற்போதைய மாணவர்கள் வரை, ஒரு சிலரைக் குறிப்பாய் நினைவில் வைத்திருந்து, “எம் புள்ள, எம் புள்ள” என்று அவர்கள் வாழ்வில் பெற்ற வெற்றிகளைத் தன்னுடையதாக எண்ணி, எல்லோரிடமும் பெருமிதம் கொள்வார்.
தொலைபேசி வசதி வந்தது முதல் ஒவ்வொரு வருடமும்,ஆசிரியர் தினத்தன்று, தவறாது அவரை அழைத்து, வாழ்த்துக்களைக் கூறுவேன். மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு, குடும்பம், வேலை, எல்லாவற்றையும் பற்றி அக்கறையாக விசாரிப்பார்.
ஒரு கதை படித்திருக்கிறேன்…
நீரில் மட்டுமே உயிர்வாழும் நண்டு இனங்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் கடற்கரைக்கு,தவறுதலாக வந்து தரையில் தத்தளித்துக் கொண்டிருக்க, ஒரு சிறுமி ஒவ்வொரு நண்டாக எடுத்துக் கடலில் தூக்கி எறிவாள்.அதைக் கண்ட ஒரு பெரியவர், இப்படி தூக்கித் தூக்கி எறிவதால், இன்னும் சிறிது நேரத்தில் இறக்கப் போகும் இத்தனை ஆயிரம் நண்டுகளின் வாழ்க்கையில் என்ன விளைவை ஏற்படுத்தி விட முடியும்? என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, ஆயிரம் நண்டுகள் அல்ல, நான் தூக்கிப் போடும் இந்த ஒரு நண்டின் வாழ்க்கையில் அது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாள்.
அதைப் போல, எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது, எங்களை அறிவென்னும் கடலில் தூக்கி எறிந்து, அறியாமைக் கரையிலிருந்து காப்பாற்றியவர்.சில நண்டுகளுக்குத் தெரியும் தாங்கள் காப்பாற்றப் பட்டிருக்கிறோம் என்று.பலநூறு நண்டுகள் இதைப் பற்றிய பிரக்ஞை கூட இல்லாதிருக்கலாம்- அதைப் பற்றியெல்லாம் அவருக்குக் கவலையே கிடையாது. தானுண்டு, தன் கடமை உண்டு என்று எங்களைக் கடல் சேர்த்துக் கரைசேர்த்தவர்.
திருமணமே செய்து கொள்ளாமலேயே இருக்கும் அவருக்கு, வருடத்திற்கு முப்பது முப்பத்தைந்து பிள்ளைகள் வருவர், போவர். வருடங்கள் ஓடினாலும், வகுப்புகள் மாறினாலும்,ஒன்றிரண்டு பிள்ளைகள் மட்டும் நிரந்தரமாகவே இருப்பர்- என்னைப் போல.
Nicely written and your teacher is simply great. I am dreaming to be a teacher and I can understand the feel of your writing and of course the happiness of your teacher as well. When I read your blog, in between I realized that though I have the phone number of two my school teachers whom I love the most, I have not called today and I will call tomorrow. Thanks for this and I am sure my teachers will be happy if I call and the only pay back which I can do to them is to let them know that I am doing good and make them happy.
Nicely Written and your teacher is very great.
Dear Prakash,
Really I am very happy to read our SHANTHI AKKA entitled article. Moreover it is timely, sensible and lovely words used in this article by you. It is highly appreciable. AKKA is one of our family member. I proud myself that I am also one of the crab mentioned in this article.
very very super prakash. Did u send this page to shanthi akka?
சாந்தி அக்காவின் மாணவன் என கர்வமுடன் சொல்லிக்கொள்வேன். வாழ்க்கையில் கிடைத்த அருமையான ஆசிரிய்களில் தலைசிறந்த ஆசிரியை அவர்கள்,. நீண்ட ஆயுளுடனும், இன்னும் பல நல மாணவர்களை தயார்படுத்த இறைவன் ஆசியருளட்டும்
http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/09/blog-post_05.html
In 2010 I wrote about our beloved Shanthi akka on Teachers day
u or teacher is great
nice to rememeber the past
இவர்கள்தான் உண்மையான குரு . என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்
Arumai Anna. I simply love your writings.
மிக மிக அருமையாய் எழுதியுள்ளீர்கள்.எனக்கும் 1975 ஆம் வருட காந்தி நிகேதன் நினைவுக்கு வந்தது.மகிழ்சி